அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தேர்தல் அறிக்கை, செயல்பாடு சாத்தியமா?

Added : ஏப் 12, 2019
Advertisement
பா.ஜ., தேர்தல் அறிக்கை, செயல்பாடு சாத்தியமா?

டில்லியில், பா.ஜ., தலைமையகத்தில், 'சங்கல்ப் பத்ரா' என்ற, பெயரில், பா.ஜ., தேர்தல் அறிக்கையை, பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். 'நாட்டின், 75வது சுதந்திர தினத்தை, 2022ல் கொண்டாடும் போது, மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக,இந்தியா உருவாகும்' என்பது உட்பட, 75 வாக்குறுதிகளை பா.ஜ., அளித்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கைக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எழுந்துள்ள கருத்துகள்:


திருப்புமுனையை ஏற்படுத்தும்


நிதி ஆதாரங்களை ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தும் திட்டங்களை தான், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். விவசாயிகள், வியாபாரிகள் என, பல தரப்பு மக்களும், வளமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் வகையிலும்,வலிமையான இந்தியாவை உருவாக்கும் பணிகளை நிறைவேற்றும் வகையிலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முதல் பக்கத்தில், மக்கள் கூட்டத்தை படமாக போட்டு, 'சீன்' காட்டியுள்ளனர். ஆனால், மக்கள் நிஜமாக எங்கள் பக்கம் உள்ளனர்.நாட்டில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த, ராணுவத்தை வலுவாக்கும் வகையில், நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படும்.அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவது, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின், 370 வது பிரிவை நீக்குவது போன்ற, பா.ஜ., வின் அடிப்படை கொள்கைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.மேலும், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும், சிறு வியாபாரிகளுக்கு தனி ஓய்வூதியம் திட்டம், விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன், விவசாய விளைபொருட்கள் உற்பத்தியை பெருக்க, 25 லட்சம் ரூபாய் கோடி முதலீடு திட்டமெல்லாம், ஏழை, நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்த்த வழி வகுக்கும்.ஜி.எஸ்.டி., வரியை எளிமைப்படுத்தும் திட்டம், வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய வைக்கும்.சபரிமலை விவகாரத்தில், மத நம்பிக்கை மற்றும் வழிபாடு முறையை பாதுகாக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு திட்டம் நிறைவேற்றுவது, அனைத்து விவசாயிகளுக்கும், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்குவது, குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக, நதிகளை இணைக்கும் முயற்சி; இதற்காக, தனி ஆணையம் அமைப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டமெல்லாம், பா.ஜ.,வுக்கு, திருப்பு முனையை ஏற்படுத்தும்.நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நடுத்தர மக்களுக்கு ஆதரவான பல்வேறு அம்சங்களும் நிறைந்த, இந்த தேர்தல் அறிக்கை, பா.ஜ.,வுக்கு, வெற்றிக்கனியை தேடித் தருவது நிச்சயம்.ஹெச்.ராஜா,சிவகங்கை தொகுதி வேட்பாளர்,தேசிய செயலர், பா.ஜ.,


வெத்து வேட்டாக உள்ளது


நாட்டில், வேலை இல்லாத இளைஞர்களுக்கு, வேலை தரும் திட்டங்கள் இல்லை. விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை, வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே, விவசாயிகளுக்கு, 4 சதவீதத்தில், விவசாய கடன் வழங்கும் திட்டம், செயல்பாட்டில் உள்ளது. இந்த, 4 சதவீதம் வட்டியும், நிர்வாக செலவுகளுக்காக வசூலிக்கப்படுகிறது.தற்போது, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், கடன் வாங்கினால் வட்டி உண்டு. சராசரியாக, ஒரு விவசாயி, 2.5 ஏக்கர் நிலம் வைத்திருப்பார். அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடன் என்பது, விவசாய செலவுக்கு போதுமானதாக இருக்காது. ஒரு ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடன் என அறிவித்திருந்தால், அது பொருத்தமாக இருக்கும்.விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என, காங்கிரஸ் அறிவித்த போது, விவசாயிகள் பிரச்னை தீர்ந்து விடுமா என்ற கேள்வியை, பிரதமர் மோடி எழுப்பினார்.தற்போது, ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டியில்லா கடன் வழங்கினால் மட்டும், விவசாயிகளின் பிரச்னை தீர்ந்து விடுமா? இந்த அறிவிப்பால், விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்துள்ளது. ராணுவத்திலிருந்து தளபதி விலகினால், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படுவது போல, ரிசர்வ் வங்கியின் கவர்னரும், ராஜினாமா செய்ததால், நாட்டின் பொருளாதாரத்தில், நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது.இதனால், வெளிநாட்டு முதலீடு குறைந்தது. சிறு, குறுந்தொழில்கள் முடங்கின. உற்பத்தி செய்த பொருட்களையும் விற்க முடியவில்லை. புதிய தொழில்கள் உருவாகவில்லை. இதனால், படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நாட்டில் வேலை வாய்ப்பின்மை, 2.2 சதவீதத்தில் இருந்து, 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக, இந்தியாவை, எப்படி உயர்த்த முடியும்? தாய்மொழி தவிர பிறமொழிகளை, மாணவர்கள் படிக்கும்படி கட்டாய படுத்தக்கூடாது. பொது சிவில் சட்டம் என்ற, ஒற்றை கலாச்சாரத்தை செயல்படுத்த சாத்தியமில்லை.இது நாட்டை துண்டாக்க வழி வகுத்து விடும். அமைதி நிறைந்த இந்தியா தான் தேவை; பதட்டம் நிறைந்த இந்தியா தேவையில்லை. மக்கள் நல்வாழ்வுக்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையாக இல்லாமல், மக்களை ஏமாற்றுகிற வெத்து வேட்டு அறிக்கையாகவே, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை உள்ளது.கே.எஸ்.அழகிரி,தமிழக காங்கிரஸ் தலைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X