இந்த தேர்தலில், உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
உறுதியான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாவட்டத்துக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் செய்துள்ளேன். மக்கள், அதை தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த தேர்தலை ஒப்பிடும் போது, இந்த தேர்தலில், உங்களுக்கு நெருக்கடி இருப்பதாக நினைக்கிறீர்களா?
எந்த நெருக்கடியும் இல்லை. உறுதியான வெற்றி கிடைக்கும்.
நீங்கள் ஆரம்பம் முதலே கூறி வரும் துறைமுக திட்டத்தால், பலன் கிடைக்குமா அல்லது பாதிப்பு இருக்குமா?
துறைமுகத்தை ஓட்டுக்காக, அமைப்பதாகச் சொல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கொண்டு வர முயற்சிக்கிறேன். துறைமுகம் வந்தால், எல்லா மக்களும் என்னை ஆதரிப்பர் என்ற நிலை உள்ளதால், காழ்ப்புணர்ச்சியை துாண்டி, சிலர் போராட்டத்தை துாண்டி விடுகின்றனர். துறைமுகத்தை மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை விட, கன்னியாகுமரிக்கு வரும் திட்டங்களை தடுப்பதில், காங்கிரஸ் குறியாக உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்து மக்களுக்கு கொடுக்கும் முக்கிய வாக்குறுதி என்ன?
நிறைவேற்ற முடியாத விஷயம், ஏழை ஹிந்து மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைக்க செய்தல். இதில், காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது. இப்போது, அவர்கள் நீலி கண்ணீர் வடிக்கின்றனர். விமான நிலையம் கொண்டு வர முயற்சி செய்வேன். பன்னோக்கு மருத்துவமனை கொண்டு வருவேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், கல்வி உதவித் தொகை பெற்று தராததற்காக, ஹிந்துக்கள் தரப்பில் இருந்து வருத்தமோ, கோபமோ தெரிவிக்கப்பட்டதா?
யாரும் வருத்தப்படவில்லை. அவர்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது. முயற்சி செய்தேன் என்பது, அவர்களுக்கு நன்றாகவே தெரியும். முடித்து தருவார் என, எதிர்பார்க்கின்றனர். அவர்களை எதிர்பார்க்க வைத்ததும் நான் தான்.
ஹிந்துக்களை, தொடர்ந்து வீரமணி அவமதித்து பேசி வருவது பற்றி?
வீரமணி வயது முதிர்ந்தாலும், பக்குவ நிலையை எட்டாமல் இருப்பது, வேதனைக்குரிய விஷயம். ஈ.வெ.ரா.,விடம் இருந்த பல நல்ல தன்மைகளை வீரமணி தன்னுள் உள்வாங்கி கொள்வது, அவருக்கு நல்லது. திராவிடர் கழகத்தை சேர்ந்த பலர், தங்கள் வயதான காலங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறை வழிபாட்டில் இறங்கியுள்ளனர். நாளை ஒருவேளை, வீரமணி கூட அந்த நிலைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.
ஏழை மக்களுக்கு மாதம், 6,000 ரூபாய் வழங்க இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளதே?
இது எவ்வளவு பெரிய ஏமாற்று. காங்கிரசை தவிர வேறு எவராலும் இப்படி பொய் சொல்ல முடியாது. 'வறுமையை ஒழிப்பேன்' என, இந்திரா சொன்னார். ஆனால், நாட்டில் வறுமை ஒழியவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் வறுமை ஒழிந்தது. அதுதான் இப்போதும் நடக்க போகிறது.
ராகுல் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுவதால், அதன் தாக்கம் கன்னியாகுமரியில் இருக்குமா?
கன்னியாகுமரி தாக்கம் இருக்கட்டும். வயநாட்டிலாவது தாக்கம் இருக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
சமீப காலமாக எதிர்க்கட்சிகளை குறி வைத்து, வருமான வரித்துறை சோதனை நடத்துகிறதே?
இதை எதிர்க்கட்சி, ஆளுங் கட்சி என்று பார்க்கக் கூடாது. மருத்துவமனையில், நோயாளிக்கு மட்டும் தான் மருந்து கொடுப்பர்.
கட்டி இருப்பவர்களுக்கு தான் அறுவை சிகிச்சை செய்வர். எல்லாருக்கும் அறுவை சிகிச்சை என்பது தேவையற்றது.
பா.ஜ.,வின் மாநில தலைவர், நீங்கள் என, எல்லா வேட்பாளர்களும் மாநில அளவிலான தலைவர்களாக இருந்தும், அவரவர் தொகுதியிலேயே முடங்கி கிடக்கிறீர்களே...?
அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து கொண்டிருக்கிறோம்.
பார்லிமென்டுக்கு நீங்கள் ஒன்பது நாட்கள் மட்டுமே சென்றுள்ளதாக, காங்., வேட்பாளர் வசந்தகுமார் குற்றச்சாட்டு கூறியுள்ளாரே?
இதை நான் முழுமையாக மறுக்கிறேன். அவர், முழுக்க முழுக்க, பொய் சொல்லி வருகிறார். நான் அதிக நாட்கள், பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக, அங்குள்ள ஆவணங்களில் உள்ளது. பத்திரிகைகளில் எனக்கு பாராட்டு செய்திகள் வந்து உள்ளன. இப்படி அபாண்டமாக பொய் சொல்லும் வசந்தகுமார் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். அவர் சட்டசபைக்கு அதிக நாட்கள் சென்றாரா, அவரது வியாபார நிறுவனத்துக்கு அதிகமாக சென்றாரா என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில், இல்லாத மத்திய அரசு தொழிற்சாலையை, மூடி கிடப்பதாக சொல்கிறார். இல்லாத, இ.எஸ்.ஐ., மருத்துவமனையை, துாத்துக்குடிக்கு கொண்டு சென்றதாக கூறுகிறார். இப்படி பொய் சொல்லி பிரசாரம் செய்யும் அவரது தோல்வி உறுதி; நான் வெற்றி பெறுவேன்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19)
Reply
Reply
Reply