chennai | இந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இது| Dinamalar

இந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இது

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 13, 2019

இந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இது
ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு வயது 100

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக இந்தியர்கள் சிந்திய ரத்தம் ஏாராளம் அப்படி அவர்கள் சிந்திய ரத்தத்தின் கறை நுாறு ஆண்டுகளாகியும் மறையாமல் இருக்கும் இடம்தான் ஜாலியன் வாலபாக்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந் தேதி.

சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு நடந்து கொண்டிருந்த நேரமது.நாடு முழுவதும் விடுதலை வேட்கையால் மக்கள் கிளர்ச்சி அடைந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தினர்.

அதனை கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டுவர பிரிட்டிஷார் ஒரு சட்டத்தை கொண்டுவந்தனர்.‛ரெளலட் சட்டம்' என்று பெயரிடப்பட்ட அந்த சட்டத்தின் படி போலீசார் ஊடகங்களை கட்டுப்படுத்தலாம் ,யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கலாம்.
இந்தக் கொடுமையான சட்டத்துக்கு எதிராக மக்கள் கொந்தளித்து போய் தெருவில் இறங்கி பேராடினர்.நாடு முழுவதும் எதிர்ப்பு அனல் பறந்தது, அது பஞ்சாபில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மக்களிடையே பரவி வரும் போராட்டத்தையும் அதன் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட வேண்டும், அவர்கள் மனதில் ஒரு அச்ச நிலையை உருவாக்க வேண்டும்., மனஉறுதியை,ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று வெள்ளயைர்கள் எண்ணினர்.அதற்கு ஒரு வாய்ப்பாக ஜாலியன் வாலாபாக்கை பயன்படுத்திக் கொண்டனர்.
பிரிட்டிஷாருக்கு எதிராக ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் ஒன்று திரண்டனர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.

நான்கு புறமும் மதில் சுவர் சூழ்ந்த அந்த இடத்திற்குள் பிரிட்டிஷ் படையினர் ‛டையர்' என்ற கொடியவனின் தலைமையில் நுழைந்தனர்.அனைவரது கைகளிலும் துப்பாக்கிகள் கண்களில் கொலைவெறி.
ஏதோ மிரட்டலுக்கான நடவடிக்கைகள் என்று எண்ணிய அஞ்சாத சிங்கங்களான அங்கிருந்த சீக்கியர்கள் தொடர்ந்து ஆவேசமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக உரத்த குரலில் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

கொஞ்சமும் எதிர்பாரத சூழ்நிலையில் சுடுவதற்கான உத்திரவு பிறப்பிக்கப்பட்டது.சிப்பாய்கள் கொலைவெறியுடன் சுட்டார்கள், குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என்று பேதம் பார்க்காமல் சுட்டார்கள், குண்டுகள் தீரும்வரை சுட்டார்கள், ஒவ்வொரு சிப்பாயும் 33 முறை என்ற கணக்கில் 1650 முறை சுட்டார்கள்.
இந்த திடீர் தாக்குதலை சமாளிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மக்கள் உயிர்பிழைக்க தறிகெட்டு ஒடினர்,தன் மார்பில் குண்டுகளை வாங்கிக் கொண்டும் தாங்கிக்கொண்டும் முடிந்த வரை ஒடினர், ஒரு கட்டத்தி்ல் ஒன்றும் செய்ய இயலாமல் கொத்து கொத்தாய் செத்து விழுந்தனர், அந்த மைதானத்தின் நடுவில் இருந்த கிணற்றில் ஒரே நேரத்தில் பலர் உயிர்தப்ப குதித்தனர் ஆனால் மூச்சு முட்டி இறந்தனர்.
பத்து நிமிடம் நடைபெற்ற இந்த கோரமான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு குண்டுகள் தீர்ந்த நிலையில் ‛டையர்' தனது சிப்பாய்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினான்.

அதன்பிறகு மைதானத்தினுள் நுழைந்தவர்கள் கண்ட காட்சி குலை நடுங்கவைத்தது.குண்டுகள் பாய்ந்து இறந்து போன தாயின் அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர்,எப்படியாவது தப்ப நினைத்து மதில் சுவர் மீது ஏற முயன்றவர்களின் ரத்தம் சுவரெங்கும் தெறித்துக் கிடந்தது.எங்கும் ஒரே ரத்தம், பிணக்குவியல்கள்,காயம் பட்டர்களின் மரண ஒலங்கள்,சடலங்களால் நிறைந்து கிடந்த கிணறு என ஜாலியன் வாலாபாக் ரணகளமாகிக் கிடந்தது.
அன்றைய அரசு அறிக்கையின்படி 379 பேர் இறந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தனியார்கள் சேகரித்த தகவல்கள் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்றது.குண்டு்க்காயங்களுடன் உயிர்பிழைத்தவர்களும் நடந்த கொடூர சம்பவத்தின் சாட்சியாக முடமாகிப்போயினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவியது மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்று திரண்டனர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடினர் அந்தப் பேராட்டத்தின் நீட்சியே இந்திய விடுதலையின் காட்சி.இதற்கான சாட்சியாக இப்போதும் ஜாலின்வாலாபாக் சுவர்களில் படிந்துள்ள ரத்தக்கறை காணப்படுகிறது.
வீரத்தின் நினைவுச் சின்னமாக போற்றப்படும் ஜாலியன் வாலாபாக் கடந்த 99 வருடங்களில் நினைவுத்துாண் எழுப்புதல்,ஒலி ஒளிக்காட்சி நடத்துதல் போன்ற பல்வேறு மாற்றங்களை கண்டுவந்தாலும் வீரர்கள் சிந்திய ரத்தம் படிந்த சுவர்கள் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதன் கறையுடன் அப்படியே அன்று முதல் இன்று வரை காணப்படுகிறது.
இந்த மண்ணை மிதித்தால் போதும் நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிமிகும்,ரத்தம் சூடு ஏறும். நம் இந்திய தேசமிது ரத்தம் சிந்திய பூமி இது என்று தாய் மண்ணின் மீதான பாசம் அதிகமாகும்.வாய்ப்பு கிடைக்கும் போது அல்ல ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டாவது இங்கே போய் வாருங்கள் இந்தியன் என்ற பெருமை கொள்ளுங்கள்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X