நீடித்த, நிலையான, வலிமையான, வளமான ஆட்சி வேண்டுமென்றால், 'மைனாரிட்டி' இல்லாத, 'மெஜாரிட்டி' எனப்படும், பெரும்பான்மை அரசு, மத்தியில் அமைய வேண்டும். யாரின் தயவு, தாட்சண்யம், குறுக்கீடு, குடைச்சல் இல்லாத, சுதந்திரமாக செயல்படும், ஒரே கட்சியின் ஆட்சியால் தான், நாடு முன்னேறும்.வித்தியாசமான சிந்தனை, கொள்கை உடைய, குட்டி கட்சிகளை கூட்டணி சேர்த்து, தேர்தலில் வென்று, அமையும் ஆட்சியில், எந்த ஒரு செயலையும் துணிவாக எடுக்க முடியாது; கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே எடுக்க முடியும்.
அத்தகைய சூழ்நிலையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் மோதி - மத்திய அரசில் இருப்பவர்கள், திடமான முடிவெடுக்க இயலாமல் தடுமாறி - ஆதரவு அளிக்கும் கட்சி, இழுக்கும் இழுப்பிற்கு எல்லாம், அடி பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.மேலும், அத்தகைய கட்சித் தலைவர்களின், 'தேவை'களை மறைமுகமாக பூர்த்தி செய்து, ஐந்து ஆண்டுகள் எப்படியாவது, பதவியை காப்பாற்றி, காலம் தள்ளுவது, நாட்டிற்கு நலன் பயக்கும் ஆட்சி அல்ல!அத்தகைய ஆட்சிக்கு உதாரணமாக, முந்தைய பிரதமர், வாஜ்பாய் தலைமையில், சில மாதங்களுக்கு முன் அமைந்த, மத்திய அரசை கூறலாம். மேலும், 2004 மற்றும் 2009ல் அமைந்த, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியையும் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
இந்த காலகட்டத்தில், மன்மோகன் சிங், பிரதமராக இருந்தார். அவரை, பொம்மை போல அமர வைத்திருந்தனர். அவரை இயக்கும், 'ரிமோட் கன்ட்ரோல்' கட்சி தலைவர் சோனியாவிடமும், கூட்டணி கட்சி தலைவர்களிடமும் இருந்தது.மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்டுகள், அந்த காலத்தில் ரொம்ப தான் துள்ளிக் குதித்தனர். ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி, தினமும் ஊடகங்களில் தோன்றி, ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தனர்.இதனால், பொருளாதார வல்லுனரான, மன்மோகன் சிங்கால், சுதந்திரமாக, திறமையாக செயல்பட முடியாமல் போனது.
ஆனால், அதற்குப் பின், 2014ல் வந்த, பிரதமர், மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஐந்தாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த அரசை, எந்த கூட்டணி கட்சியாலும் மிரட்ட முடியவில்லை. காரணம், அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும், பா.ஜ.,வுக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை, எம்.பி.,க்கள் பலம் உள்ளது.அதனால், முக்கிய முடிவுகளை, பிரதமர், மோடியால் தன்னிச்சையாக எடுக்க முடிகிறது.உதாரணமாக, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில், நம் துணை ராணுவத்தினர் மீது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 வீரர்கள் இறந்தனர்.
உடனடியாக, அதற்கு நம்மால் பதிலடி கொடுக்க முடிந்தது.இதுவே, கூட்டணி கட்சிகளின் தயவில், மத்திய அரசு செயல்படுமானால், அந்த கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, அதன் பிறகே, ராணுவத்திற்கு உத்தரவிட்டு, விமானங்கள் பாகிஸ்தான் நோக்கி பறந்திருக்கும்.எனவே, மத்தியில் கூட்டணி அரசுகள் வருவது, கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் தலைவர்களுக்கு வேண்டுமானால், 'லக்கி பிரைஸ்' ஆக இருக்குமே தவிர, மத்திய அரசுக்கும், அதன் செயல்பாட்டிற்கும் சிக்கலாகவே அமையும்.
இதற்கு பல அரசியல் உதாரணங்களையும் கூறலாம்...இப்போதைய பெரும்பான்மை அரசு போல, 1971ல், மத்தியில், இந்திரா தலைமையிலான அரசு அமைந்திருந்த போது தான், வங்கதேச போர் ஏற்பட்டது. அதில், நாம் வெற்றி பெற்றோம்; பாகிஸ்தான் தோல்வி அடைந்தது; வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது.அதற்கான திடமான முடிவுகளை எடுக்க, இந்திராவுக்கு உறுதுணையாக இருந்தது, லோக்சபாவில் அவரின் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை, எம்.பி.,க்கள் ஆதரவு தான்!அந்த ஆண்டில், ஐந்தாவது லோக்சபா தேர்தல் நடந்தது. மார்ச் 1ல் துவங்கி, 10ல் முடிந்த அந்த தேர்தலில், இந்திரா தலைமையிலான காங்கிரஸ், 352 இடங்களில் வெற்றி பெற்றது.அப்போது, 512 மொத்த தொகுதிகள் இருந்தன; இப்போது, 543 தொகுதிகள் உள்ளன.மார்ச் மாதம், இந்திரா தலைமையிலான அரசு பதவி ஏற்றது. ஏப்ரல் மாதமே, வங்கதேச போர் ஏற்பட்டது.
'கிழக்கு பாகிஸ்தான்' என, அப்போது அழைக்கப்பட்ட வங்கதேசத்தில், மூக்கை நுழைத்த பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம், தக்க பாடம் கற்பித்தது. அந்த போரில், இந்திய படைகளிடம், பாகிஸ்தான் சரணடைந்தது; வங்கதேசமும் உருவானது.இது போன்ற உறுதியான முடிவை, கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் சூழ்நிலையில், இந்திராவால் எடுத்திருக்க முடியாது. போர் மட்டுமின்றி, பல திடமான நடவடிக்கைகளை, பெரும்பான்மை அரசால் தான் எடுக்க முடியும்.கடந்த, 1952 முதல், 1989 வரை, நேரு, இந்திரா, ராஜிவ் பிரதமர்களாக இருந்தது வரை, மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், முழு மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து இருந்தன.
நல்லதோ-, கெட்டதோ, யாருக்கும் அஞ்சாமல், எந்த கட்சியின் குறுக்கீடும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி தன்னிச்சையாக ஆட்சி நடத்தின.ராஜிவ் மறைவிற்குப் பின், காங்கிரஸ் பலமிழந்தது. காங்கிரஸ் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற, மாநில கட்சிகளின் கூட்டணி அமைந்தது. மதச் சார்பற்ற என்ற போலியான போர்வைக்குள் தங்களையும், சில கட்சிகளையும் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டது.கூட்டணி கட்சிகள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம், வளைந்து கொடுத்ததன் விளைவு தான், '2ஜி' அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்ற முறைகேடுகள் எழுந்ததற்கு காரணம்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து கிளம்பாத, மத சார்பின்மை என்ற பூதம், பா.ஜ., விஸ்வரூபம் எடுத்ததும் கிளம்பியது. அதையே, பிரதான கோஷமாக கொண்டன, எதிர்க்கட்சிகள். இதனால், நாட்டின் முன்னேற்றம், அதற்கான திட்டங்கள் போன்றவற்றை, அந்த கட்சிகள் மறந்தன.மத்தியில், கூட்டணி அரசுகள் அமைந்த போது, தி.மு.க., போன்ற சில கட்சிகளுக்கு, பல விதங்களில் நன்மை கிடைத்தது. மத்திய மந்திரிகளாக, அந்த கட்சியைச் சேர்ந்த பலர் பொறுப்பேற்றனர். அதனால், மத்திய அரசில் லஞ்சம், ஊழல் புகார்கள் அதிகரித்தன; இதனால், நாட்டின் மாண்புக்கு இழுக்கு நேரிட்டது.
இப்போதைய, பிரதமர் மோடி தலைமையிலான அரசில், எந்த அமைச்சர் மீதும், ஒரு பைசா ஊழல் புகார் கூட கூற முடியவில்லை. அதனால் தான், யாருக்கும் புரியாத, 'ரபேல்' போர் விமான பேரம் என்ற ஒன்றை பிடித்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொங்கிக் கொண்டுள்ளன.எனவே, இனிமேலும் மத்தியில் அமையும் அரசுகள், கூட்டணி இல்லாமல், தனிக் கட்சிகளாகவே இருக்க வேண்டும். அதற்காக, பா.ஜ., தான் வர வேண்டும் என சொல்லவில்லை... காங்கிரஸ் கூட வரலாம். இல்லை, வேறு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம்!பெரும்பான்மையான அரசாக இருந்தால் தான், திடமான முடிவுகளை எடுக்க முடியும். எனவே, அதற்காக கட்சிகள், தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைய நிலையில், தேசிய கட்சிகளாக, ஏழு கட்சிகள் தான் விளங்குகின்றன.
பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டு, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவையே, தேசிய கட்சிகள் அந்தஸ்தில் உள்ளன. இவற்றில், இப்போதைய நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் தான், உண்மையான தேசிய கட்சிகளாக உள்ளன.அவை தவிர்த்து, தேசிய கட்சிகளாக விளங்கும் பிற கட்சிகளுக்கு, ஒன்றிரண்டு மாநிலங்களில் தான் செல்வாக்கு உள்ளது. எனவே, தேசிய கட்சிகளாக இன்னும் அந்த கட்சிகள், தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.அதற்கான சுயமதிப்பீடுகளாக, தேச நலன், தேச பாதுகாப்பு, நாட்டை வளப்படுத்துவதற்கான எண்ணம், அதற்கான இலக்கு, செயல்படுத்துவதற்கான உத்வேகம், அந்த கட்சிகளுக்கு வேண்டும்.
ஆனால், தேசிய கட்சிகளாக விளங்கும் சில கட்சிகளும், அவற்றின் தலைவர்களின் செயல்பாடுகளும், அரசியல் நோக்கமும், தலைமை பொறுப்புக்கு வருவதற்கான வகையில் இல்லை என்பதே நிதர்சனம்!மத்தியில் ஆட்சிக்கு வரத் துடிக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது, ஆளுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கி, கஜானாவை காலி செய்யும் விதத்தில் உள்ளது.இன்னென்ன தொழிற்சாலைகளை துவக்குவோம்; இப்படி ஒரு செயல் திட்டத்தில், வறுமையை ஒழிப்போம்; ஏழைகளுக்கு தொழிற்பயிற்சி அளிப்போம்; நலிவடைந்தோர் மேம்பாட்டிற்கு புதிய திட்டங்கள் கொண்டு வருவோம் என்பதெல்லாம், தேர்தல் அறிக்கையில் இல்லை.
கவர்ச்சி திட்டங்களும், கஜானாவை காலி செய்யும் வியூகங்களும் தான் அதிகம் உள்ளன. அது போல, மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி, உ.பி., - ம.பி., ஆந்திரா, கர்நாடகா என, பல மாநிலங்களிலும் போட்டியிட்டாலும், உ.பி., தவிர்த்து, பிற மாநிலங்களில், அந்த கட்சியின் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது.கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலையோ, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் தான், அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது; பிற மாநிலங்களில், தேய்பிறை நிலை தான்; இப்போது, கேரளாவிலும், அதே நிலை ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவை சேர்ந்த, சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ், அந்த மாநிலத்திலும், வட கிழக்கு மாநிலம் ஒன்றிலும் தான், மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ளது.
பிற மாநிலங்களில் வளர்ச்சி பெற, எவ்வித திட்டத்தையும் அக்கட்சி வைத்திருக்கவில்லை. எனவே, இப்போதைய நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் தான், தேசிய கட்சிகள் என்ற, அசைக்க முடியாத அந்தஸ்தை பெற்றுள்ளன. கொள்கைகள், திட்டங்கள், அணுகுமுறைகளால் தான், தேசிய கட்சிகளுக்கு பலம் கிடைக்கும். அந்த வகையில், இரு கட்சிகளும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். எப்படியாகிலும், வலுவான கட்சி, பெரும்பான்மை பலம் கொண்ட தனிக்கட்சி, மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால் தான், நாடு வளம் பெறும்; நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பர். இதற்கு முந்தைய கூட்டணி அரசுகள், சந்தைக்கடையை நினைவுபடுத்தியுள்ளதால் தான், இந்த எதிர்பார்ப்பு!தொடர்புக்கு:அலைபேசி: 99403 22302இ - மெயில்: mankalimanoharan@gmail.comமா.மனோகரன்சமூக ஆர்வலர்