பத்து நிமிடம் சுவாமி கிட்ட பேசுவேன் : நடிகர் பிரசாந்த்| Dinamalar

பத்து நிமிடம் சுவாமி கிட்ட பேசுவேன் : நடிகர் பிரசாந்த்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (9)
பத்து நிமிடம் சுவாமி கிட்ட பேசுவேன் : நடிகர் பிரசாந்த்

'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் அறிமுகமாகி, தற்போது வெளியான 'ஜானி' வரை, படத்திற்கு படம் விதவிதமான கேரக்டர்களை மாற்றி, பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளால், நடிப்பு திறமையால், நடன அசைவுகளால் 'சாக்லேட் பாய்' என பெயரெடுத்து, மக்களின் மனதில் டாப் ஸ்டாராக இடம் பிடித்த நடிகர் பிரசாந்த் அளித்த பேட்டி.
* அடுத்த படம்?ஜானி படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மிஸ். இந்தியா அனுகீர்த்தி வாஸ் உடன் புதிய படத்தில் நடித்து வருகிறேன். சினிமாவில் இதுவரை சொல்லாத விஷயங்களை, பார்க்காத விஷயங்களை இப்படத்தில் மக்களுக்கு காட்டுவோம்.
* மிஸ்.வேர்ல்டு, மிஸ்.இந்தியா உடன் மட்டும் தான் நடிப்பீங்க போல?ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய், மிஸ்.இந்தியா போட்டியாளர் இஷாகோபிகர், மிஸ் இந்தியாக்கள் பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் வரிசையில் தற்போது அனுகீர்த்தி வாஸ் என சினிமாவில் அறிமுகப்படுத்துவது நல்லது தானே.
* பொன்னர் சங்கர் மாதிரி சரித்திர படம் அடுத்து எப்போது?அந்தப்படம் வந்ததற்கு பின்னாடி தான் நிறைய சரித்திர படங்கள் வந்தன. பாகுபலி கூட அதன் பின்தான் வந்தது. அதற்கு முன்னாடி சரித்திர படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. சரித்திர படங்கள் எடுக்க பொருட்செலவு மட்டுமின்றி, நாட்களும் அதிகமாக தேவைப்படும். நல்ல கதைகள் அமைந்தால் நடிக்கலாம்.
* கிசுகிசுக்கள் வராத நடிகர் என்ற பெயர் எடுத்தது எப்படி?வீட்ல சும்மா உட்கார்ந்து இருந்தாலே போதும்ங்க...(சிரிக்கிறார்) எந்த கிசுகிசுவும் வராது. எங்க வீட்ல சொன்னது, 'எப்படி வேணாலும் வாழலாம், ஆனால் பத்து வருடம் கழித்து மக்கள் உன்னை எப்படி நினைப்பாங்கன்னா, இப்ப நீ வாழறது பொறுத்து தான் சொன்னாங்க', அப்படி சொன்னதற்கு அப்புறம் எப்படி தப்பு பண்ணனும்னு தோணும்.
* ஜீன்ஸ் படம் மாதிரி பிரசாந்தை எப்ப பார்க்கலாம்?தற்போது நடித்து வரும் படத்தில் 'ஜீன்ஸ்' பிரசாந்தை ரசித்தது போல் எல்லாரும் ரசிப்பார்கள்.
* பொழுதுபோக்கு?சூட்டிங் இல்லாத நாட்களில் காலையில் பூஜை அறையில் 10 நிமிடம் சுவாமி கிட்ட பேசுறது என்னோட முதல் வேலை. நாம நல்லா இருக்கிறோம் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதன்பின் நண்பர்கள் கிட்ட பேசுறது, என் ரசிகர்கள் கிட்ட பேசறது, இன்டர்நெட்டில் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது அவ்வளவு தான்.
* தற்போதைய நடிகரில் உங்களை கவர்ந்தவர்?விஜய் சேதுபதி. படத்திற்கு படம் கதையை தேர்வு செய்து, அதற்கேற்றார்போல் தன்னையும் மாற்றி விடுகிறார். சிவகார்த்திகேயனும் நல்லா பண்றார். * சமீபத்தில் பார்த்து ரசித்த படம்?கடைக்குட்டி சிங்கம்.
* ரசிகர்களுக்கு கூறுவது?வாழ்க்கையில் எல்லாருக்கும் மன அழுத்தம் இருக்கும். பிரச்னை பற்றி நினைத்து கொண்டு இருக்காமல் அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்தால் அதற்கான தீர்வு கிடைக்கும். வாழ்க்கையும் அழகாகும்.
* அரசியல் ஆர்வம்?அது இல்லாமல் இருக்குமா. ஏப்., 18ல் முதல் வேலையே என் ஓட்டை பதிவு பண்ணறது தான். நீங்களும் மறந்திடாதீங்க.இவருடன் கலந்துரையாட பேஸ்புக் : actorprashanthofficial

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X