பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய தேர்தல் வந்த பாதை

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இந்திய தேர்தல் வந்த பாதை

நாடு சுதந்திரம் பெற்ற பின், 1951- - 52 கால கட்டங்களில், முதலாவது மக்களவை தேர்தலை எதிர்கொண்ட போது, மிகப் பெரும் சவால்களை சந்தித்தது. ஏனெனில், இத்தேர்தல், 1951ல் துவங்கி, 1952 வரை, 68 கட்டங்களாக நடந்தது.மேலும், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்பது,1950ல், பிரகடனப்படுத்தப்பட்டது. சவால்கள்இந்திய தேர்தல் வரலாற்றில், நீண்ட காலம் நடந்த இந்தத் தேர்தலில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மூலம், முதலாவது மக்களவை கட்டமைக்கப்பட்டு, இந்திய குடியரசின் முதல் பிரதமராக, ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டின் முதல் மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கு முன், மிகப் பெரிய சவால்களை, இந்திய தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டியிருந்தாலும், முதல் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற, சுகுமார்சென், முன் அனுபவம் ஏதுமின்றி, அந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இத்தேர்தலில், 401 தொகுதிகளில் இருந்து, 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள், 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகவும், 86 தொகுதிகளில், தலா, இரண்டு உறுப்பினர்களும், ஒரு தொகுதியில் இருந்து, மூன்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாடு முழுவதும், 1 லட்சத்து, 96 ஆயிரத்து, 84 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 489 தொகுதிகளிலும், 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 17.3 கோடி பேர், ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்த போதிலும், 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இக்கால கட்டத்தில், இந்திய விடுதலை போராட்டத்திற்கு தலைமை வகித்த, இந்திய தேசிய காங்கிரஸ், முன்னணி கட்சியாக விளங்கியது.அடுத்து, 1957ல் நடந்த, இரண்டாவது மக்களவைத் தேர்தலில், 403 தொகுதிகளில் இருந்து, 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள், 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள், 91 தொகுதிகளில் இருந்து, தலா, இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரத்து இது தவிர, இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள், மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். இந்தத் தேர்தலில் தான், மாநில கட்சிகள் எழுச்சி பெறத் துவங்கின. நேரு மீண்டும் பிரதமரானார். காங்கிரஸ் கட்சி, முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்தது.முதன் முதலாக, பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாஜ்பாய், எதிர்க்கட்சி தலைவர் ஆனார். கடந்த, 1962ல் நடந்த மூன்றாவது மக்களவை தேர்தலில், இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ரத்து செய்யப்பட்டு, ஒரு தொகுதிக்கு, ஒரு உறுப்பினர் முறை மட்டுமே, அமலுக்கு வந்தது. காங்கிரஸ், 361 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைத்தது. பிரதமர் நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
1964ல் பிரதமர் நேரு மரணமடைந்ததை தொடர்ந்து, குல்சாரிலால் நந்தா, இடைக்கால பிரதமரானார்.பின், லால்பகதுார் சாஸ்திரி, அதே ஆண்டு, ஜூன் 9ல், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஜனவரி, 11ம் தேதி சாஸ்திரி மரணமடைய, மீண்டும் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமரானார். ஜன., 24ல், இந்திரா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.அதற்கு முன், 1962ல் நடந்த இந்திய- - சீனப் போர், 60களின் மத்தியில் நிலவிய கடும் உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, இந்திராவுக்கு, தன் தந்தையை போல தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமை போன்ற காரணங்களால், காங்கிரசுக்கு வலுவான எதிர்க்கட்சிகள் உருவாகி இருந்தன.

இந்திராவின் தலைமை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன், இந்திராவுக்கு எதிராக, மொரார்ஜி தேசாய் போர்க்கொடி உயர்த்தினார். இதன் எதிரொலியாக, 1967ல் நடந்த தேர்தலில், மிகக் குறைவான அளவு வாக்குகளையும், இடங்களையும் வென்று, காங்கிரஸ் ஆட்சியமைத்தது. 520 தொகுதிகளில், 283 தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, 1969ல், காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. பிரதமர் இந்திரா தலைமையில் ஒரு கட்சியும், காமராஜர் தலைமையில், நிறுவன காங்கிரஸ் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில், மற்றொரு கட்சியும் உருவானது.
பிரதமர் இந்திரா, பதவிக்காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே, ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்தித்தார். கடந்த, 1971ல் நடந்த அந்த தேர்தலில், 'வறுமையை ஒழிப்போம்' என்ற கோஷத்துடன், அவர் செய்த பிரசாரம், மக்களை மிகவும் கவர்ந்ததன் வாயிலாக, இந்திரா காங்கிரஸ், 352 இடங்களில் வென்றது. நெருக்கடி நிலைதொடர்ந்து, 1975ல், பிரதமர் இந்திரா, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால், தாமதமாக, 1977ல் தான் தேர்தல் நடந்தது. மேலும், அதிகாரத்தை இந்திரா தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்த தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி, மொத்தமுள்ள, 542 இடங்களில், 345 இடங்களில் வெற்றி பெற்று, மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

ஜன சங்கத்தின் வலதுசாரிகளும், சோஷலிச கொள்கை உடையவர்களும் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சி, கருத்து வேறுபாடுகளால் பிளவுற்றது. பார்லிமென்டில் பெரும்பான்மையை இழந்ததால், பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகினார்.பின், 1980ல் நடந்த மக்களவைத் தேர்தலில், 'சேவை செய்யக் கூடிய அரசிற்கு ஓட்டளியுங்கள்' என்ற புதிய கோஷத்தின் மூலமும், ஜனதா கட்சியின் நிலையற்ற தன்மையையும் சுட்டிக்காட்டி, மக்களின் ஆதரவை பெற்று, மீண்டும் இந்திரா பிரதமரானார். அதிருப்திபதவியில் இருந்த போதே, 1984ல் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1984ல் நடந்த எட்டாவது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, இந்திராவின் மகன் ராஜிவ் பிரதமரானார்.அவரது ஐந்தாண்டு கால ஆட்சியில், பஞ்சாபில் தொடர்ந்து நடந்து வந்த பிரிவினை போராட்டம், அயோத்தி சிக்கல், போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்னைகளால், மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார். இதன் மூலம் காங்கிரசின் செல்வாக்கு சரிந்தது. இதனால், 1989 தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்தது.போபர்ஸ் விவகாரத்தில், ராஜிவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அவரது அமைச்சரவையில் இருந்து விலகிய, வி.பி.சிங் தலைமையில் அமைந்த ஜனதா தளம் கூட்டணி, பா.ஜ., ஆதரவுடன், 1989ல் ஆட்சி அமைத்தது.

கூட்டணி அரசுமண்டல் கமிஷன் விவகாரத்தில், வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவை, பா.ஜ., வாபஸ் பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன், சமாஜ்வாதி ஜனதாவின் சந்திரசேகர் தலைமையில், புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது.ஆனால், அந்த அரசும் விரைவிலேயே பதவி இழந்தது. 16 மாதங்களில், இரு கூட்டணி அரசுகளும் முடிவுக்கு வந்தன. 1991ல் ராஜிவ் படுகொலை நடந்தது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில், இடதுசாரி கட்சிகளின் ஆதரவில், நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து, முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்தது.
அடுத்து, 1996ல் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மாநில கட்சிகள் இணைந்து, ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை துவங்கி, காங்கிரஸ் ஆதரவுடன், தேவகவுடா பிரதமரானார். பத்து மாதங்களில் அவர் பதவி விலக, ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக்கப்பட்டார். ஆயினும், அந்த கூட்டணி அரசு, 1998ல் முடிவுக்கு வந்தது.அடுத்து, 1998ல் நடந்த தேர்தலில், வாஜ்பாய் தலைமையில், ஆட்சி அமைந்து, 13 மாதங்களில் கவிழ்ந்தது. 1999ல் நடந்த தேர்தலில், மீண்டும் வாஜ்பாய் அரசு அமைந்து, ஐந்தாண்டுகள் நீடித்தது.

கடந்த, 2004 தேர்தலில், காங்கிரஸ் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்து, மன்மோகன் சிங் பிரதமரானார்.ஆணிவேர்அடுத்து வந்த, 2009ம் ஆண்டு தேர்தலிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியை தக்க வைத்து, மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆனார்.கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி, 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில், பா.ஜ., மட்டும், 282 இடங்களைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. மோடி பிரதமர் ஆனார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின், 1951 முதல் 2014 வரையிலான, 16 மக்களவைத் தேர்தல்களும் அமைதியான முறையில் நடந்தது சாலச் சிறந்தது.இந்தியாவில், மாபெரும் ஜனநாயகம் உறுதியான முறையில் கட்டி எழுப்பப்படுவதற்கு, பார்லிமென்டில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என, இரு அவைகளும் ஆணிவேராக திகழ்கின்றன. மக்களவையின் ஆயுட்காலம் முடிந்தோ அல்லது ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்ததாலோ, ஜனநாயக ரீதியிலேயே அரசுகள் முடிவுக்கு வந்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
15-ஏப்-201911:47:49 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Was it Sukumar Sen or KVK Sundaram who was the first Chief Election Commissioner? I think KVK Sundaram was the second Chief election Commissioner.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X