சங்ரூர் தொகுதியில் மங்கி வரும், மான் புகழ்| Dinamalar

சங்ரூர் தொகுதியில் மங்கி வரும், 'மான்' புகழ்

Added : ஏப் 14, 2019
 சங்ரூர் தொகுதியில் மங்கி வரும், 'மான்' புகழ்



பஞ்சாபின், 13 லோக்சபா தொகுதிகளில், சங்ரூரும் ஒன்று. இந்த தொகுதியில், மே, 19ல், கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது. மும்முனை போட்டி நிலவும் இங்கு, இந்த முறை யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு, போட்டி பலமாக உள்ளது.புராண காலத்திலேயே புகழ் பெற்றவை, இந்த தொகுதி அடங்கிய பகுதிகள். மஹாபாரதத்தில் வரும், யாதேயர்கள் எனப்படும், பழங்குடியின மக்கள் வாழ்ந்ததாக கருதப்படும் இந்த பகுதியில், நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள், இதன் வரலாற்று சிறப்பை விளக்குவதாக உள்ளன.சங்ரூர் லோக்சபா தொகுதி, 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. எனினும், ஒரே கட்சியின் கோட்டை என்ற பேச்சுக்கு, இங்கு இடமில்லை. ஏனெனில், சிரோன்மணி அகாலி தளம் - ஐந்து; காங்கிரஸ் - நான்கு முறை, இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட், அகாலி தளத்தின் ஒரு பிரிவான, சந்த் பதே சிங் அகாலி தளம் மற்றும் அகாலி தளம் (மான்) பிரிவை சேர்ந்தவர்கள், தலா ஒரு முறை, இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, சிம்ரஞ்சித் சிங் மான், தன்னை அடுத்து வந்த, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின், சுக்தேவ் சிங் தின்ஷாவை, 2.11 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார்.


பரபரப்பு



அதையடுத்து, மான் பெயரும், சிங்ரூர் தொகுதியின் பெயரும், பார்லிமென்டில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பல கெட்ட காரணங்களும் உண்டு.எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கும் முன், மக்களை கவருவதற்காக, தேர்தல் பிரசாரங்களின் போது, ஆடுவது, பாடுவது, நக்கலாக பேசுவது என, 'காமெடி பார்ட்டி'யாக இருந்த மான், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மதுவுக்கு அடிமையாகி விட்டார்.அரசு நிகழ்ச்சிகள், பார்லிமென்ட் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில், 'ஊத்திட்டு' வந்து ரகளை செய்யத் துவங்கி விட்டார். வாய்க்கு வந்தபடி பேசி, சர்ச்சைகளிலும் சிக்கியதால், மான், 'புகழ்' மங்கத் துவங்கியது.


மன்னிப்பு



அனைத்துக்கும் மேலாக, டில்லியில், லோக்சபா நிகழ்ச்சிகளை, மொபைல் போனில் படம் பிடித்து, அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மொபைல் போனை பறித்த அதிகாரிகள், உரிமை குழு முன், அவரை நிறுத்தினர்.மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, மீண்டும் சபைக்குள் சேர்ந்த மான், அதற்குப் பிறகும் பல முறை, சில்லறை சேட்டைகளில் ஈடுபட்டு, சர்ச்சை நாயகனாகவே வலம் வந்தார்.இப்போதும் அவரையே, ஆம் ஆத்மி கட்சி, இந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக, விதவிதமாக, 'ஆக்டிங்' கொடுத்து வருகிறார்.'நான் இப்போது குடிப்பதே இல்லை...' என, மேடையில் பேசி விட்டு, வேனுக்குள் மறைத்து, மது அருந்துகிறார். இதனால், அவருக்கு இந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.
இவரை எதிர்த்து, சிரோன்மணி அகாலி தளம் சார்பில், சுக்தேவ் சிங் தின்ஷாவின் மகன், பர்மிந்தர் தின்ஷா போட்டியிடுகிறார்; காங்கிரஸ் சார்பில், கேவல் தில்லான் நிற்கிறார்; இவர்கள் மூவருக்கும் இடையே தான் போட்டி!எனினும், பி.டி.ஏ., எனப்படும், பஞ்சாப் ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பகுஜன் சமாஜ், பஞ்சாபி ஏக்தா கட்சி, லோக் இன்சாப் கட்சி, நவன் பஞ்சாப் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்.எம்.பி.ஐ., ஆகிய கட்சிகளின் கூட்டணியும், வலுவான வேட்பாளரையே நிறுத்தியுள்ளது.இதன் சார்பில், பஞ்சாபி பாடகர், ஜஸ்ஸி ஜஸ்ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், யாருக்கு வெற்றி என்பது, சங்ரூரில் கணிக்க முடியாததாக உள்ளது.- ஸ்மிருதி சர்மா - சிறப்பு செய்தியாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X