ஓட்டு இயந்திரத்துடன், போட்டோ ஆளும் கட்சி பிரமுகர் அதிரடி கைது| Dinamalar

ஓட்டு இயந்திரத்துடன், 'போட்டோ' ஆளும் கட்சி பிரமுகர் அதிரடி கைது

Added : ஏப் 14, 2019
 ஓட்டு இயந்திரத்துடன், 'போட்டோ' ஆளும் கட்சி பிரமுகர் அதிரடி கைது

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுத்த, ஆளும் கட்சி பிரமுகர், கைது செய்யப்பட்டார்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. அத்துமீறல்இங்குள்ள லோக்சபா தொகுதிகளுக்கு, 11ல், தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுகள், அடுத்த மாதம், 23ல், எண்ணப்படுகின்றன. மால்காங்கிரி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், போகோகிராமில் உள்ள புனித மேரி கல்லுாரியில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதியில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி சார்பில், ராஜசேகர ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், தெலுங்கானா மாநில, வேலை வாய்ப்பு துறை அமைச்சர், மல்லா ரெட்டியின் மருமகன்.ராஜசேகர ரெட்டியின் பூத் ஏஜென்டான, வெங்கடேஷ், சமீபத்தில், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், அத்துமீறி நுழைந்தார். போலீசார் தடுத்த போதும், அவர்களை மிரட்டி, உள்ளே புகுந்த அவர், ஓட்டுப் பதிவு இயந்திரங்களுடன் புகைப்படம் எடுத்து, அதை, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்;

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், தேர்தல் அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் மட்டுமே செல்ல முடியும். அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்டுகள் செல்ல, அனுமதியில்லை. வழக்குஇதையடுத்து, வெங்கடேஷ், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தது, பாதுகாப்பு படையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ், வெங்கடேஷ் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X