அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - பா.ஜ., 'டெண்டர்' கூட்டணி!

Added : ஏப் 15, 2019
Advertisement
 அ.தி.மு.க., - பா.ஜ., 'டெண்டர்' கூட்டணி!

எங்கள் குடும்ப உறவுக்குள் எந்த விரிசலும் இல்லை; விரிசலும் ஏற்படாது. என் கட்சியின் கொள்கை அடிப்படையில், என் கருத்தை உரக்க சொல்லியாக வேண்டும். குடும்பத்தையும், அரசியலையும் இணைத்து பார்ப்பது சரியல்ல. நாங்கள் குடும்ப உறவையும் போற்றுவோம்; கட்சி கொள்கையையும் தாங்கி பிடிப்போம்டாக்டர் கே.விஷ்ணுபிரசாத்செயல் தலைவர், தமிழக காங்கிரஸ்.

பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்னிறுத்தாதது, காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா?

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி உள்ளார். ராகுலை, நாட்டு மக்களும் பிரதமர் வேட்பாளராக, ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரசாரத்தில், பிரதமர் மோடியை விட, ராகுலுக்கு தான், அதிக வரவேற்பை காண முடிகிறது. தேர்தல் முடிந்த பின், அவர் தான் பிரதமர். காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் இதயங்களில், ராகுல் பிரதமராகி விட்டார்.

பா.ஜ., ஆட்சியை விட, காங்., ஆட்சியில் தானே, அதிக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன?
எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. காங்., ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் இருந்தது. தற்போது, பா.ஜ., ஆட்சியில் நடக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை எழுதினால், பத்திரிகையாளர்கள் காணாமல் போய்விடுகின்றனர்; கொலை செய்யப்படுகின்றனர்.
ஐந்தாண்டு, பா.ஜ., ஆட்சி எப்படி இருந்தது?

நரக வேதனை எப்படி இருக்கும் என்பது, இறந்த பின் தெரியும் என்பர். ஆனால், வாழும் போது, நரக வேதனையை, நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

நாட்டில் இன்னமும் வறுமை உள்ளது; இதற்கு, 40 ஆண்டுகளாக, ஆட்சியிலிருந்த காங்கிரசும் காரணம்இல்லையா?

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது, நம் வளங்களை எல்லாம் சுரண்டி சென்று விட்டனர். நாட்டை எதிரியின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்; வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்க வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி, இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் தான், காங்கிரசின் கவனம் இருந்தது.வளர்ந்த நாடுகளில், ஆட்சி செய்வது சுலபம். மிகவும், ஏழ்மை நிலையில் இருந்த இந்தியா, தன்னந்தனியே, தன் சொந்தக் காலில் நிற்க, பார் போற்றும் நாடாக தலை நிமிர வைக்க, குறைந்தபட்சம், 100 ஆண்டுகள் தேவை. ஆனால், இந்தியாவை, காங்., ஆண்டதால், 35 ஆண்டுகளில், பொருளாதாரம், விஞ்ஞானம் வளர்ச்சியில், ஆசியாவில் இரண்டாவது முதன்மை நாடாக, இந்தியாவை உருவாக்கி காட்டியுள்ளது.அடுத்த கட்டமாக, வறுமையை ஒழிக்கவே, குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு மாதந்தோறும், 6,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், திராவிட கட்சிகளை நம்பியே, காங்கிரஸ் இருப்பது ஏன்?

பா.ஜ., என்ற பாசிச ஆட்சியை, மீண்டும் ஒரு முறை ஆட்சியில் அமர வைத்தால், அது, நம் நாட்டிற்கு செய்த துரோகமாகி விடும். அதனால், ஒரே எண்ணம் உடைய கட்சிகள் இணைந்து, பா.ஜ.,வை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

சந்தர்ப்பவாத கூட்டணி மட்டுமல்ல; அது, 'டெண்டர்' கூட்டணி.

தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கு இடையே, நேரடி போட்டி உள்ளது; யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?

எங்களுக்கு, அ.தி.மு.க., வுடன் தான் நேரடி போட்டி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியும், மத்தியில், பா.ஜ.,வும் பெரும்பான்மை பெறும் என, கருத்து கணிப்புகள் கூறுகிறதே?
தமிழக மக்களின் உணர்வு களை சரியாக புரிந்து கொண்டதால், தமிழகத்தில், தி.மு.க., - காங்., கூட்டணிக்கு வெற்றி என்ற கருத்து கணிப்பு சரி. ஆனால், மற்ற மாநிலங் களின், மக்கள் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே, தேசிய அளவில் கூறப்படும் கருத்து கணிப்புகள் ஏற்புடையதாக இல்லை.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளில், பிடித்தது எது, பிடிக்காதது எது?

பிடித்தது அவருடைய உழைப்பு; பிடிக்காதது அவருடைய எண்ணம்.

தமிழக காங்கிரசில், ஒரே நபர்களுக்கு, 'சீட்' கொடுப்பது ஏன்; தகுதி யானவர்கள் இல்லையா; எம்.எல். ஏ., வாக உள்ள வசந்தகுமாருக்கு, எம்.பி., சீட் வழங்கியது சரியா?

இது, மேலிடம் முடிவு செய்கிற விஷயம்; இதை, நான் விமர்சிக்க முடியாது; விமர்சிக்கவும் கூடாது.

இலங்கை தமிழர் படுகொலைக்கு, தி.மு.க., - காங்., தான் காரணம் என, அ.தி.மு.க., குற்றம் சாட்டுகிறதே?

அது, அவர்களின் தவறான பிரசாரம்; தேர்தல் முடிவில், தவறான முடிவை தான் தரும்.
'நீட்' தேர்வை அறிமுகம் செய்தது, காங்கிரஸ் தான். 'நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது' என, சிதம்பரம் மனைவி நளினி தான், உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். தற்போது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்போம் என, ராகுல் கூறுவது ஏற்புடையதா?
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிற வகையில், தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு விலக்கு பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இது, வரவேற்கத்தக்கது.
மீத்தேன் திட்டம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., என அனைத்தையும் எடுத்து வந்த காங்கிரஸ், தற்போது, பா.ஜ.,வை குறை கூறுவது சரியா?
ஆதாரையும் நாங்கள் தான் எடுத்து வந்தோம்; அதில், நாங்கள் எந்த குறையும் சொல்லவில்லையே. ஆனால், ஜி.எஸ்.டி.,யை உரிய முறையில் செயல்படுத்தி இருந்தால், நாங்கள் குறை கூறுவது தவிர்க்கப்பட்டிருக்கும். திட்டம் என்னவோ எங்களுடையது தான்; ஆனால், செயல் வடிவம் தந்த முறை தவறானது.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இணைந்தது தவறான முடிவு என, நீங்கள் விமர்சித்ததை, உங்கள் மைத்துனர், அன்புமணி கடுமையாக விமர்சித்தாரே... குடும்ப உறவு பாதிக்காதா?
எங்கள் குடும்ப உறவுக்குள் எந்த விரிசலும் இல்லை; விரிசலும் ஏற்படாது. என் கட்சியின் கொள்கை அடிப்படையில், என் கருத்தை உரக்க சொல்லியாக வேண்டும். குடும்பத்தையும், அரசியலையும் இணைத்து பார்ப்பது சரியல்ல. நாங்கள் குடும்ப உறவையும் போற்றுவோம்; கட்சி கொள்கையும் தாங்கி பிடிப்போம்.
ஆரணி தொகுதியில், உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

மிகவும் பிரகாசமாக உள்ளது. வேட்பாளர் தேர்வு சரியாக உள்ளதும், காங்., - தி.மு.க., தேர்தல் அறிக்கையும், எனக்கு நல்ல வெற்றியை பெற்றுத் தரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X