தள்ளுவண்டி அகற்றத்தை கண்டித்து பெண் சாலை மறியலால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தள்ளுவண்டி அகற்றத்தை கண்டித்து பெண் சாலை மறியலால் பரபரப்பு

Added : ஏப் 15, 2019

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்ததாகக் கூறி, தள்ளுவண்டியை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண் தனி ஆளாக சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதித்தது.கள்ளக்குறிச்சிபகுதியை சேர்ந்தவர் தேவராஜ் . கச்சிராயபாளையம் ரோடு, காந்தி வீதியில் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வந்தார். உடல் நலக்குறைவால் தேவராஜ் இறந்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாந்தி கூழ் கடையை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், போக்குவரத்திற்கு இடையூறாக தள்ளுவண்டியை நிறுத்தியிருப்பதாகக் கூறி, வண்டியை டாடா ஏஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.இதையறிந்த சாந்தி, நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தள்ளுவண்டியை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.
அங்கு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், பகல் 1:00 மணியளவில் கச்சிராயபாளையம் சாலையில் தண்ணீர் பானை, கற்களை அடுக்கி வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டார்.தடையை மீறி செல்ல முயன்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், கச்சிராயபாளையம் சாலையில் போக்குவரத்து பாதித்தது.போலீசார், தள்ளுவண்டியை பெற்றுத் தருவதாகக் கூறியும் சாந்தி சம்மதிக்காததால், அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், சாலையின் குறுக்கே கிடந்த பானை, கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X