பெரும் சக்திகளாக மாறும் இணையதள இளைஞர்கள் : | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரும் சக்திகளாக மாறும் இணையதள இளைஞர்கள் :

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (35)
பெரும் சக்திகளாக மாறும் இணையதள இளைஞர்கள் :

தமிழகத்தில், முதல் முறையாக ஓட்டளிக்க உள்ள, 12.12 லட்சம் பேர், வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளனர். அவர்களை குறி வைத்து, அரசியல் கட்சியினர், சமூக வலைதளங்களில், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.தமிழகத்தில், 2.95 கோடி ஆண்கள்; 3.02 கோடி பெண்கள்; 5,790 திருநங்கையர் என, மொத்தம், 5.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

பெரிய சக்திகள்


இவர்களில், 12.12 லட்சம் பேர், 18 முதல், 19 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் முதன் முறையாக, தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில் சிலர், தங்கள் பெற்றோர் சார்ந்துள்ள கட்சியிலும், மற்றவர்கள் கட்சி சாராதவர்களாகவும் உள்ளனர்.இவர்களே தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். இதை அறிந்த அரசியல் கட்சியினர், இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக நேரம் செலவிடும், சமூக வலைதளங்கள் வாயிலாக, தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.


பெண்கள் அதிகம்அ.தி.மு.க., சார்பில், அரசின் திட்டங்களை விளக்கும் வீடியோ, ஜெ., ஓட்டு கேட்கும் வீடியோ, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் செய்த தவறுகள், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் போன்றவற்றை விளக்கும் வீடியோக்களை, வெளியிட்டு வருகின்றனர்.அதேபோல, தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள், துாத்துக்குடி துப்பாக்கி சூட்டை விளக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரும், கருத்துகள் அனைத்தையும் பார்க்கும் இளைஞர்கள் எடுக்கும் முடிவே, தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றியை, நிர்ணயிப்பதாக உள்ளது

அதேபோல, பெண்கள் ஓட்டும் முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், மொத்த ஆண் வாக்காளர்களை விட, 6.74 லட்சம் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி தொகுதிகளில் மட்டுமே, பெண் வாக்காளர்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களை கவர, முக்கிய கட்சி கள், 'கவனிப்பு'களை துவக்கி உள்ளன.- நமது நிருபர் -


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X