பொது செய்தி

தமிழ்நாடு

ஆகாயம் பார்த்த அணைகள் காணாமல் போகும் கண்மாய்கள்; அழிவின் விளிம்பில் மதுரையின் நீர் ஆதாரங்கள்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஆகாயம் பார்த்த அணைகள் காணாமல் போகும் கண்மாய்கள்; அழிவின் விளிம்பில் மதுரையின் நீர் ஆதாரங்கள்

மதுரைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வறண்டு கிடக்கிறது. நகரில் மாடக்குளம், செல்லுார், விளாங்குடி, கொடிக்குளம், வண்டியூர், முத்துப்பட்டி, தென்கால், நாராயணபுரம், நாகனாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம் உள்ளிட்ட கண்மாய்களும், சாத்தையாறு, விரகனுார், மாவூர் அணைகளும் உள்ளன. இதோடு தல்லாகுளம், டவுன்ஹால் ரோடு, மாரியம்மன் கோயில் பகுதியில் தெப்பக்குளங்களும் உள்ளன. இத்தனை நீர் ஆதாரங்கள் இருந்தும் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. அணை, கண்மாய்க்கு நீர் கொண்டு வரும் கிருதுமால், சாத்தையாறு, பெரியாறு பாசனக் கால்வாய்கள் கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் தேக்க தடுப்பணை கட்டுவது ஆறுதலான விஷயம். இருந்தாலும் மழைக்காக ஆகாயம் பார்த்து காத்திருக்கும் அணைகள், காணாமல் போகும் கண்மாய்களை பாதுகாக்க வேண்டும்.


மதுரையின் ஒரே அணை சாத்தையாறு:

மதுரைக்குள் உள்ள ஒரே அணை அலங்காநல்லுார் சாத்தையாறு அணை தான். 29 அடி கொள்ளளவு கொண்ட அணை பல ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தையாறு சிறுமலையில் தோன்றி வைகையில் கலக்கும் துணையாறு. சிறுமலை, வகுத்துமலை, காட்டுநாயக்கன் ஓடையில் இருந்து வரும் நீர் சாத்தையாறு அணைக்கு வருகிறது. அணை நிரம்பினால் எர்ரம்பட்டி, சின்னணம்பட்டி, கோவில்பட்டி, ஆதனுார் உட்பட 11 கண்மாய்கள் நிரம்பும். 29 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3 அடி மீன் வளர்க்கவும், 27 அடி பாசனத்திற்கும் திறக்கப்படும். மதுரை, சிறுமலையில் மழை பெய்யாததால் அணை வறண்டுள்ளது. அணையில் மணல் குவிந்துள்ளதால் மழை பெய்தால் கூட 29 அடிக்கு தண்ணீர் தேக்க முடியாது.


கழிவுநீர் தேங்கிய விரகனுார் மதகு அணை:

விரகனுார் மதகு அணை வைகை அணையில் இருந்து வரும் நீரை தேக்கி மதுரை, சிவகங்கையில் உள்ள 87 கண்மாய்களுக்கு அனுப்பி 40,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற கட்டப்பட்டது. அணையை காண சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு இல்லாததால் அணையின் தடுப்புச்சுவர், ஷட்டர்கள் உடைந்துள்ளது. அணைக்குள் தேங்கிய கழிவுநீரில் பாசி படர்ந்து, ஆகாய தாமரை மலர்ந்துள்ளது. அணைக்குள் கழிவுநீர் தேங்குவதை தடுக்காவிட்டால் நிலத்தடி நீர் நச்சு தன்மை கொண்டதாக மாறிவிடும். எனவே, அணையை துார்வாரி, ஷட்டர்களை பழுதுநீக்கி தண்ணீர் தேக்க வேண்டும்.


சிதைந்து போன செல்லுார் கண்மாய்:

செல்லுார் கண்மாய் தரையோடு தரையாக மாறி சிதைந்து போனதால் மழை காலங்களில் தேங்கும் மழைநீர் மறுகால் பாய்கிறது. இக்கண்மாய் 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்தது. சாத்தையாறு அணை நிரம்பி சிக்கந்தர் சாவடி, முடக்கத்தான் கண்மாய் வழி செல்லுார் கண்மாய்க்கு தண்ணீர் வரும். 125 ஏக்கராக இருந்த கண்மாய் தற்போது 54 ஏக்கராக சுருங்கியது. 1993ல் 10 அடி ஆழம் இருந்த கண்மாய் தற்போது 2 அடி ஆழமாக குறைந்தது. தன்னார்வ அமைப்பு, பொதுப்பணி துறையால் கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கண்மாயில் நீர் தேக்க வேண்டும்.


குளமாக மாறிய மாவூர் அணை:

திண்டுக்கல் பள்ளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் ஒரு கி.மீ., நீளம் 25 அடி உயரத்தில் மாவூர் அணை 1965ல் கட்டப்பட்டது. காமராஜர் ஆட்சியில் நீர்வீழ்ச்சி உள்ள சிறுமலை மீன்பட்டியில் நீர் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டப்பட்டது . இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் மழையால் நீர் வீழ்ச்சியில் பெருக்கெடுக்கும் நீரை கொண்டு மின் உற்பத்தி செய்து மதுரை, திண்டுக்கல் மின்தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். மாவூர் அணையால் வாடிப்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,386 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. பருவமழை பொய்த்ததால் அணை வறண்டு குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த தண்ணீரும் அணையின் கீழேயுள்ள கால்வாய் வழி வெளியேறி வீணாகிறது.


மாயமாகும் மாடக்குளம் கண்மாய்:

மாடக்குளம், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்கள் பல ஆண்டுக்கு முன் இணைந்து இருந்தது. இந்த கண்மாய் 2,800 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதி, 619 ஏக்கர் நீர் பரப்பு கொண்டது. 5 கி.மீ., நீளமுள்ள கரையுடன், 3 மதகு, ஒரு கலுங்கினை கொண்டது. கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிக்கு மேற்கே கொடிமங்கலம் அருகே வைகை வரத்து கால்வாய் ஒன்று இருந்தது. வைகையில் வெள்ளம் வரும் போது இக்கால்வாய் வழி நீரை கண்மாய்க்கு கொண்டு சென்றனர். மாடக்குளம் கண்மாயில் நீர் நிரம்பிய காலத்தில் அப்பகுதியின் நிலத்தடி நீர் 15 அடி ஆழத்தில் இருந்தது. காலப்போக்கில் கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்ததால் தென்கால் - மாடக்குளம் கண்மாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கண்மாயின் கரைகளை பலப்படுத்தி மழைக் காலங்களில் தண்ணீர் தேக்க வேண்டும். கண்மாயின் பாசன கால்வாய்களை பராமரித்தால் தான் கண்முன்னே மாயமாகும் கண்மாயை காக்க முடியும்.


வறண்டு கிடக்கும் வண்டியூர் கண்மாய்:

வண்டியூர் கண்மாய் 687 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய் 1995க்கு பின் துார்வாரததால் தண்ணீர் தேங்காமல் வறண்டுள்ளது. கண்மாயை நம்பி இருந்த 510 ஏக்கர் விவசாய நிலங்கள் இன்று 100 ஏக்கராக சுருங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் கண்மாயை சீரமைக்க 1.38 கோடி ரூபாய் ஒதுக்கி பின் நிறுத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கண்மாயை துார்வாரி, சுற்றுலாதலமாக மாற்ற ஒதுக்கிய 62 கோடி ரூபாயை மீண்டும் அரசு வழங்க வேண்டும். கண்மாய்க்கு நீர் கொண்டு வரும் சாத்தையாறு, பூ மார்க்கெட், பெரியாறு பாசனக் கால்வாய்களை சீரமைத்து கண்மாயை துார் வாரி நீரை தேக்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். 2 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jana - rajapalayam,இந்தியா
16-ஏப்-201912:01:36 IST Report Abuse
Jana தமிழ் நாட்டில் 90% நீர் ஆதார கண்மாய்கள் புதர் மண்டி கிடக்கின்றன, என்றைக்கு இந்த திராவிட கட்சிகள் இலவசங்களை வழங்க ஆரமித்ததோ அன்ரே விவசாயத்தின் அடிப்படை நீர் நிலை பாதுகாப்பு முற்றிலுமாக நிறுத்தி விட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஞானம் இல்லாத காலத்திலேயே நீண்டகால உபயோக அடிப்படையில் அருமையாக நீர் பிடிப்பு பகுதிகளை ஆராய்ந்து குளங்களை உண்டாக்கினார்கள் ஆனால் கடந்த அறுபது வருடங்களில் கட்சி வேறுபாடு இல்லாமல் அணைத்து அரசியல் வாதிகளும் விவசாய ஆதாரங்கள் அனைத்தையும் சூறையாடி விட்டு இன்று மோடிதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்று மேடை தோறும் பேசுகிறார்கள். அதையும் மக்கள் நம்புகிறார்கள். மக்களுக்கு இலவசமாக தற்போது என்ன கிடைக்கிறது என்று யோசிக்கிறார்களே ஒழிய நம் வருங்கால சந்ததிகளை பற்றிய கவலை இல்லை. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன் உழைப்புக்கு முக்கியதத்துவம் கொடுத்த நம் அப்பாக்களும் தாத்தாக்களும் இருந்தார்கள் ஆனால் இப்போது அரசின் இலவசங்களுக்கு மட்டுமே பிச்சைக்காரர்கள் போல் இன்றைய சந்ததிகளை அரசியல் வாதிகள் ஆக்கிவிட்டனர் பொது மக்கள் விழித்து கொள்ளாதவரை இன்றைய அரசியல் வாதிகள் மக்களை முட்டாளாக்கி தங்கள் வீட்டு பிள்ளைகலே உலக பணக்காரர்கள் ஆக்கி தேர்தல் வரும்போது சிறிய எலும்புத் துண்டுகளை போட்டால் இந்த சோம்பேரி மக்கள் மீண்டும் அவர்களை ஆட்சி கட்டிலில் ஏற்றி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள் அன்று பட்டுக்கோட்டையார் திருடராய் பார்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றார் இன்று சோம்பேறியாய் இருக்கும் குடிமக்கள் திருந்தா விட்டால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. விவசாயிகளின் சாவுக்கு காரணம் அரசல்ல அதை தேர்தெடுக்கும் நாம்தான்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
16-ஏப்-201919:00:22 IST Report Abuse
Darmavanஇதைப்புரிந்து கொள்ளும் அளவுக்கு மூளையில்லாதவர்கள் பல அடிமட்ட அப்பாவிகள் இருக்கின்றனர்.இதை அவர்கள் மனதில் பதிய வைக்க பெரிய பிரச்சாரம் தேவை.அந்த முயற்சி தன்னலம் இல்லாத ஒரு தலைமையால்தான் முடியும்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201909:16:19 IST Report Abuse
Srinivasan Kannaiya எழுபதுக்கு முன்பாக இருந்த எல்லா நீர்நிலைகள், நீர்வழி தாரைகள், நீர் பிடிப்பு பகுதிகள், எல்லா வகையான பொறம்போக்குகள் அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் மீட்டு எடுத்தால் மீண்டும் தமிழகம் நீரில் தன்னிறைவு பெரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X