85 வயது முதியவர் உட்பட 7 பேர் முதல் முறையாக ஓட்டளிக்க தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

85 வயது முதியவர் உட்பட 7 பேர் முதல் முறையாக ஓட்டளிக்க தயார்

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (1)
 85 வயது முதியவர் உட்பட 7 பேர் முதல் முறையாக ஓட்டளிக்க தயார்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில், 85 வயது முதியவர் உட்பட, ஏழு பேர், முதன் முதலாக, தேர்தலில் ஓட்டளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமம், இருளர் காலனியைச் சேர்ந்தவர், கன்னியப்பன், 85. இவரது இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள், மகள், சம்பந்தி என, ஏழு பேரும், 2004ல் இருந்து, 13 ஆண்டுகளாக, வந்தவாசி அடுத்த, வீரம்பாக்கம் புதுார் கிராமத்தில், மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமையாக இருந்து, 2017ல், மீட்கப்பட்டனர்.

செயல் விளக்கம்

இவர்கள் ஏழு பேரும், இதுவரை எந்த தேர்தலிலும் ஓட்டு போட்டதில்லை. இதை கண்டறிந்த மாவட்ட நிர்வாகம், இரண்டு மாதங்களுக்கு முன், அவர்களது பெயரை, வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்தது. இதனால், 85 வயதான கன்னியப்பன் உட்பட ஏழு பேரும், முதன் முறையாக ஓட்டளிக்க உள்ளனர்.இந்நிலையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஒரு குழுவினர் சென்று, மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிக்க, செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட, கன்னியப்பன் உட்பட ஏழு பேர், முதன் முறையாக, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்து ஓட்டளிக்க உள்ளனர். இதேபோன்று, போளூர் பகுதியில், சிலர் ஓட்டளிக்க உள்ளனர்.

'டோக்கன்'

தேர்தலன்று, கோடை வெயிலில், வரிசையில் நின்று காத்து கிடக்காமல், வாக்காளர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப்படும். அவர்களை நிழற்கூரையில் அமரவைத்து, அமைதியாக ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் அதிகமுள்ள, 240 ஓட்டுச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதியும், அவர்களை அழைத்து செல்ல, தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X