பொது செய்தி

தமிழ்நாடு

உங்கள் வேட்பாளர் கிரிமினலா?

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (19)
Advertisement
வேட்பாளர்கள், கிரிமினல், அரசியல் கட்சிகள்

சென்னை: நாளை மறுநாள் லோக்சபா தேர்தல், ஓட்டு போடுவது ஜனநாயக கடமை. வேட்பாளர்களின் தகுதிகளை சீர்துாக்கி பார்த்து, இருப்பதில் நல்லவருக்கு ஓட்டு போடுவது குடிமக்கள் பொறுப்பு.

குறைந்தபட்சம், ஒரு கிரிமினலுக்கு ஓட்டு போட்டு லோக்சபாவுக்கோ, சட்டசபைக்கோ அனுப்பாமல் இருந்தாலே, போதும். ஜனநாயகம் பிழைக்க வழி கிடைக்கும்.கிரிமினலா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?கோர்ட் தீர்ப்பின்படி, ஒருவர் தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே, அவரை குற்றவாளி அல்லது கிரிமினல் என்று சொல்லலாம் என்பர். நடைமுறையில் அது சாத்தியம் இல்லை. ஊர் அறிந்த, உலகம் அறிந்த குற்றவாளிகள், ஒவ்வொரு கோர்ட்டாக அப்பீல் செய்து, வாய்தா வாங்கி, விசாரணையை இழுத்தடித்து, கடைசிவரை உண்மை வெளியே வராமலே தடுத்து விட முடியும், நமது நீதி பரிபாலன கட்டமைப்பில், கல்லறைக்குள் போனபிறகுகூட, குற்றவாளி என்ற முத்திரை, தன் மீது விழாமல் தடுக்கும் ஆற்றல், நமது அரசியல்வாதிகளுக்கு இருப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.


எனவே, கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அது குறித்த வழக்கு நிலுவையில் இருந்தாலே, அத்தகைய வேட்பாளரை தவிர்த்து விடுவது உத்தமம். கட்சிகளே அத்தகைய நபர்களை வேட்பாளராக நிறுத்தாமல் தவிர்ப்பது முறையாக இருக்கும். ஆனால், முறைப்படி எதையும் செய்வது அரசியலுக்கு அழகல்ல. ஆகவே, தேர்தல் ஆணையமே, இந்த தடவை புது முயற்சியை எடுத்திருக்கிறது. ஒவ்வொரு வேட்பாளரும், தன் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், அதன் தன்மை, விசாரணை நிலவரம் போன்ற தகவல்களை வேட்புமனு தாக்கல் செய்யும் போதே தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறை.

வேட்புமனுவோடு இணைப்பாக இந்த தகவல்களை கொடுத்தால், அது ஆணையத்தின் அலுவலர்களுக்கு தெரியுமே தவிர, தொகுதியின் வாக்காளர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரியாமல் போகுமே? அதற்கு ஒரு தீர்வாக, இந்த வழக்குகள் குறித்த தகவல்களை, மூன்று பிரதான நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டு, அதன் பிரதிகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.வேட்பாளர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால், தங்கள் வேட்பாளரின் குற்ற வழக்கு பின்னணி, அவருக்கான சொத்து விவரங்களை, தேர்தலுக்கு முன், பிரதான நாளிதழில், சம்பந்தப்பட்ட கட்சியும் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் அது ஆணையிட்டுள்ளது.

இருப்பினும், பல வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும், அவரவர் கட்சி நாளிதழ்களிலும், பிரபலம் ஆகாத சிறு பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து, தேர்தல் ஆணையத்தை, 'சமாளித்து' உள்ளனர். இந்த நிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு, தேர்தல் கண்காணிப்பகம் என்ற, இரு சமூக அமைப்புகள் இணைந்து, வேட்பாளர்களால், தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த விவரங்களையும் திரட்டி எடுத்து, தொகுப்பாக வெளியிட்டுள்ளன. ஆனால், மொத்த வேட்பாளர்களையும் இந்த அமைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

* திண்டுக்கல் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஆர்.ஈஸ்வரன் மீது அதிகபட்சமாக, 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* பா.ம.க., இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி லோக்சபா தொகுதி வேட்பாளருமான அன்புமணி மீது, 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சி வேட்பாளர்களில், அன்புமணி மீதுதான், அதிக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* தே.மு.தி.க., வேட்பாளர்கள், நான்கு பேரில், 3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

* மக்கள் நீதி மையம் வேட்பாளர்களில், 5 பேர் மீது கிரிமினல் வழக்குள் உள்ளன.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், 35 பேரில், 23 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

* மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள், இரண்டு பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன

* விடுதலை சிறுத்தைகள் சார்பில், இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் மட்டுமே, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து, இதை தொகுத்துள்ளோம். தேர்தல் கமிஷனுக்கே காட்டாமல், எத்தனை பேர், தங்கள் மீதான குற்ற வழக்குகளை மறைத்திருக்கின்றனர் என்பது தெரியாது என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்த பின், தோற்றவர்களில் பலரும், வெற்றி பெற்றவர்கள் மீது குற்றச்சாட்டு வைப்பதற்காக, வழக்கு விவரங்களை தோண்டி எடுக்கும்போது, பல உண்மைகள் அம்பலத்துக்கு வரலாம். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை, தேர்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. வழக்கு விசாரணை முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கப்படுவர். இதனால், அந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் வரிப் பணம் வீணாகும்.
-வி

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஏப்-201906:08:17 IST Report Abuse
meenakshisundaram அநேகமாக எல்லா வேட்பாளர்களும் அப்படி இருக்க வாய்ப்புள்ளது.அதனால் தேர்தல் கமிஷன் குற்ற சாட்டு இல்லாத வாய்ப்பாளர்களின் லிஸ்ட் வெளி இடுவது எளிது.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
17-ஏப்-201905:19:19 IST Report Abuse
Gnanam நல்ல தொகுப்பு. தொடரட்டும் ஆய்வு.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201901:47:38 IST Report Abuse
Mani . V கிரிமினல் என்று தெரிந்து என்ன செய்யப்போகிறோம்? டாப் (டெல்லி) டு பாட்டம் (தமிழ்நாடு) எல்லாமே கிரிமினல்கள்தான். கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், ரயில் எரித்தவர்கள், மணல் திருடுபவர்கள்,.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X