மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், தமிழர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த தேர்தல் நேரத்தில், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரல், ராஜாஜி; முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், சேஷன் போன்றவர்களை, அவர்கள் நினைவு கூறுகின்றனர்.

வலிமையான, ஊழலில்லாத அரசு அமைய வேண்டும் என்பதே, மும்பை வாழ் தமிழர்களின் எண்ணமாக உள்ளது. வழக்கறிஞர், எழுத்தாளர், மிகச் சிறந்த நிர்வாகி என, பன்முகங்களை உடைய ராஜாஜி, நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்; காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
ஆசிரியர் தினம்:
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியராக இருந்து, படிப்படியாக உயர்ந்து, நாட்டின் ஜனாதி பதியானவர். மிகச் சிறந்த கல்விமானான இவர், ஒழுக்கமான ஆசிரியர்களின் பிம்பமாக உள்ளார். அவர் பிறந்த நாளை, ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். திருநெல்வேலி நாராயண ஐயர் சேஷன் எனப்படும், டி.என். சேஷன், 1990 - 1996ல், தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர். தேர்தலில் துாய்மையை வலியுறுத்தி, பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்; அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.
மும்பையில் உள்ள தமிழர்களிடம், தேர்தல் குறித்து பேசும்போது, இவர்கள் போன்ற தலைவர்களே, நாட்டுக்கு தற்போது தேவை என்று அங்கலாய்க்கின்றனர். பிரதமராக இருந்த, இந்திரா, தற்போது இருந்தால், அவதுாறாக பேசும் அரசியல் இருந்திருக்காது என்றும், மும்பை வாழ் தமிழர்கள்நம்புகின்றனர்.
கல்வியாளரான, கே.ஏ.விஸ்வநாதன், 65, பேசும்போது, அரசியல்வாதிகள் மிகவும் தரக்குறைவாக பேசுவது குறித்து வருத்தம் தெரிவித்தார். 'நாட்டின் பிரதமரை, திருடன் என, எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். இவ்வாறு இவர்களே அவதுாறாக பேசும்போது, கீழ்நிலையில் உள்ள தொண்டர்களை என்ன சொல்வது... அரசியல் தரம் கெட்டுபோய்விட்டது. 'இந்த நேரத்தில், ராஜாஜி போன்ற தலைவர்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிய வில்லை' என்கிறார்.'தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும்.
அமெரிக்காவில், 23 அரசியல் கட்சிகளே உள்ளன. அங்குள்ள அரசியல்வாதிகள், நன்கு படித்தவர்களாக உள்ளனர். படித்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், அரசியல் தரம் உயர வாய்ப்புள்ளது' என்றும், விஸ்வநாதன் கூறுகிறார்.மும்பையில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானோர், வலிமை யான, ஸ்திரமான அரசு அமைய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள மோடி அரசு, பல நல்ல திட்டங்களை செய்துள்ளதால், மற்றொரு வாய்ப்பு அளிக்கலாம் என்றும், இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வலுவான தலைவர்:
'பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இன்னும் நிறைய செய்ய வேண்டி யுள்ளது. மீண்டும் வாய்ப்பு அளிக்கலாம் என்று, கருதுகிறேன்' என, தொழிலதிபராக உள்ள, வெங்கடேஷ் வீரப்பன் கூறியுள்ளார்.இதையே, சியானில் வசிக்கும், ஆர். ஸ்ரீதர், 57, என்பவரும் கூறுகிறார். 'வலுவான தலைவர் நாட்டை ஆள வேண்டும். மோடியின் தலைமை தொடர வேண்டும் என்பதே, நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது' என்கிறார், அவர்.ராஜாஜி, ராதாகிருஷ்ணன், சேஷன் போன்ற தலைவர்களின் திறமை, தகுதி, ஆளுமை சக்தி, அரசியல் நாகரிகத்தை, தற்போதுள்ள அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதே, பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.
யார் வேட்பாளர்?
லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மஹாஜன், மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் இருந்து, 30 ஆண்டுகளில், தொடர்ந்து, எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இந்த முறை, அவர் போட்டியிடவில்லை. அதனால், இந்தத் தொகுதிக்கு, பா.ஜ., வின் வேட்பாளர் யார் என்பதில், பெரிய போட்டி நிலவுகிறது.இதற்கிடையே, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தொகுதியை கைப்பற்ற, காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, 'கிரிக்கெட் கடவுள்' சச்சின் டெண்டுல்கருடன் பேசியுள்ளனர்; ஆனால், அவர் போட்டியிட மறுத்துவிட்டார்.அடுத்ததாக, இந்துாரைச் சேர்ந்தவரான, பிரபல பாலிவுட் நடிகர், சல்மான் கானிடம் பேசியுள்ளனர். அவரும், அரசியலில் தனக்கு விருப்பவில்லை என்று ஒதுங்கி கொண்டார். அதனால், வலுவான வேட்பாளரை, காங்., தேடி வருகிறது.
- குமுத் தாஸ் -
சிறப்பு செய்தியாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE