வித்தியாசமான தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வித்தியாசமான தேர்தல்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (12)

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தரையில் கால் படாமல் மிதப்பில் இருந்த தலைவர்கள், ஐந்து ஆண்டுகளாக தொகுதி மக்களை எட்டிப் பார்க்காத, எம்.பி.,க்கள், கோடீஸ்வர வேட்பாளர்கள் கோடை வெயிலில், வீதி, வீதியாக அலைந்து, ஓட்டு கேட்டு, தோல் கறுத்து, நாக்கு வறண்டு கிடக்கின்றனர்.

நேற்று மாலையோடு முடிந்த பிரசாரம் இவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். இன்று பிரசாரம் கிடையாது. ஆனால் ரோட்டில் வருகிற ஒவ்வொருவரையும், வீட்டிலிருந்து எட்டி எட்டி பார்ப்பார்கள். இவராக இருக்குமோ? அவராக இருக்குமோ? எவ்வளவாக இருக்கும்? ஒரே நோட்டா, நாலைந்து நோட்டா? கவரில் வைத்து தருவார்களா? சுருட்டி உருட்டி தருவார்களா? அப்பப்பா, எதிர்பார்ப்புக்கு எந்த எல்லையும் இல்லை.
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது குற்றம், பணத்துக்கு ஓட்டை விற்பது பாவம் என்று சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். வருவது நம் பணம் என்ற எண்ணம், அடிமனதில் ஆழமாக புதைந்து கிடப்பதால், மக்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லை.
தேர்தல் கமிஷனும், தேர்தலின்போது சுறுசுறுப்பு காட்டும் மத்திய ஏஜென்சிகளும், பறந்து பறந்து பண மூட்டைகளை பிடித்தாலும், பட்டுவாடா தொய்வடையவில்லை. 300 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கம் பிடிபட்டது. 1,400 கிலோ தங்க நகைகள் சிக்கின. எல்லாம் பனிமலையின் நுனி மட்டும்தான்.
இது வித்தியாசமான தேர்தல் என்று சொல்வதற்கு, பல காரணங்கள் உண்டு.
* சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே தமிழக வாக்காளர்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு தான், லோக்சபா தேர்தலில், முழு ஆதரவை தெரிவித்து வந்துள்ளனர். இந்த தேர்தலில் அப்படி நடக்குமா என்பதை சொல்ல முடியவில்லை.
* மோடிக்கோ, ராகுலுக்கோ ஆதரவான அலை இல்லை. பொருளாதார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள், பா.ஜ., மீது அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனால், அது மோடிக்கு எதிரான அலையாக மாறும் அளவுக்கு வீரியமாக இல்லை. இந்த மக்கள், மோடி மீதான அதிருப்தியை வெளிப்படுத்த, காங்கிரசுக்கு ஓட்டளிப்பார்கள் என நம்ப முடியாது.
* தமிழகத்தில், கருணாநிதி, ஜெயலலிதா என்ற, இரு ஆளுமைகள், இந்த தேர்தலில் இல்லை. அதனால், தலைவர்களை பார்த்து, அவர்களது ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, ஓட்டளிக்கும் சூழ்நிலையும் இப்போது இல்லை.
* இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் பழனிசாமி ஆட்சி மீது, மக்களுக்கு பல வகையிலும் அதிருப்தி இருக்கிறது. என்றாலும், அதற்காக அவர்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை. காரணம் - கடந்த காலங்களில், தி.மு.க.,வினர் செய்த தவறுகளை, மக்கள் மறக்க தயாராக இருந்தாலும், அவர்களே மீண்டும் நினைவுபடுத்தி விட்டனர்.
* அ.ம.மு.க., என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் தினகரன், மூன்றாவது சக்தியாக உருவெடுக்க முயற்சி செய்கிறார். சசிகலாவின் பெயரை முன்னிலைப்படுத்தாத சாமர்த்தியத்தால், செல்லும் இடங்களில் அவருக்கு ஓரளவு கூட்டம் திரள்கிறது. கூட்டத்தில் குறிப்பிட்ட ஜாதி மக்களே அதிகம். இது, மற்ற ஜாதியினர் ஓட்டுகளை அவருக்கு பெற்றுத்தர, முட்டுக்கட்டை போடும். அவரது கட்சி பெறும் ஓட்டுகளால், அ.தி.மு.க.,வுக்குதான் அதிக பாதிப்பு இருக்கும். ஆனால், தி.மு.க.,வையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.
* கட்சி தொடங்கியிருக்கும் கமல்ஹாசனும் சோதனைச் சாலையில்தான் நிற்கிறார். ஜெயலலிதா இல்லாததால், அ.தி.மு.க.,வுக்கும், கருணாநிதி இல்லாததால், தி.மு.க.,வுக்கும் ஓட்டு போட விரும்பாத பொது வாக்காளர்களை, அவரது மக்கள் நீதி மையம் குறி வைக்கிறது. வெற்றி கிடைக்காமல் போனாலும், ஒவ்வொரு தொகுதியிலும், பரவலாக ஓட்டுகள் கிடைத்தால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். தவறினால், கமலின் அரசியல் முன்னெடுப்பு மட்டுமல்ல; ரஜினியின் அரசியல் பிரவேசமும் ஸ்தம்பிக்கக்கூடும்.
பழக்கப்பட்ட கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த வாக்காளர்களுக்கு, கமல் கட்சி ஒரு, 'ஆப்ஷனை' தருகிறது. அதுவும் பிடிக்காமல், 'நோட்டா'வுக்கு போடும் ஓட்டுகள், இந்த தேர்தலில் அதிகரித்தால், தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் மனம்விட்டு விவாதிக்க நேரம் வந்துவிட்டதாக அர்த்தம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X