எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஏன்?
தி.மு.க.,வை ஏன் பிடிக்கவில்லை?

தமிழகத்தில் மக்கள் விரோத கட்சி என்று நீங்கள் ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் முதல் இடத்தில் திமுக இருக்கும். திராவிட பாரம்பரியம், சித்தாந்தம், பெரியாரியம் அது இது என்று ஆயிரம் ஆயிரம் வியாக்கியானம் பேசுவோரின் வசனங்களுக்கு மயங்காது உண்மையைத் தேடினால் நான் சொல்வதன் நியாயம் புரியும்.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


காரணம் 1: இந்து மத உணர்வை மட்டும் காயப்படுத்துதல்:


தீபாவளி , பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மதுரை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் பண்டிகைகள் ஆரம்பித்து எந்த ஹிந்துக்களின் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்காத தி.மு.க., தலைமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடத்துவதும் , இஸ்லாமியருக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிப்பதிலும் என்றுமே தவறியதில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிவிட்டு ஹிந்துக்களிடம் மட்டும் கடவுள் மறுப்பு பேசி திரிவது என்ன சரி?

இதற்கு ஒரு படிமேல் சென்று சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில், பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கியதை, ஐயப்ப பக்தர்கள் உணர்வுகளை மதிக்காது, ஆதரித்து அங்கே தமிழகத்தில் இருந்து பெண்களை அனுப்பி வைத்தனர் தி.மு.க., ஆதரவாளர்கள். ஆனால் இதே தி.மு.க., ஆட்சியிலிருந்த போது 2006ல் Da Vinci Code என்ற திரைப் படத்தை வெளியிடத் தடை செய்தார் கருணாநிதி. என்ன காரணம் தெரியுமா? அது கிறிஸ்தவர்கள் மத நம்பிக்கையை காயபடுத்துகிறது என்று.

இதைத் தாண்டி தி.மு.க., தலைவர் ஸ்டாலின், திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் அருவருப்பானவை என்று பல கல்யாண வீடுகளுக்குச் சென்று பேசி வருகிறார் , அதுவும் இஸ்லாமியர் வீட்டுக் கல்யாணங்களில் சென்று ஹிந்துக்களின் உணர்வை அவமானம் செய்யும் தேவை இல்லை. பலமுறை தி.மு.க.,வினர் ஹிந்து கடவுள்களை அவமதித்த கதை எல்லாம் நமக்கு தெரிந்தது தான். ஹிந்து என்றால் என்ன வேண்டுமானாலும், அவமானமாகப் பேசலாம் என்று ஒரு கீழ்த்தரமான பகுத்தறிவு பேசும் கூட்டமாக மாறிவிட்டனர்.இது ஒரு கட்சிக்கு நாகரீகம் தானா?

காரணம் 2: ரவுடித்தனமும், நில அபகரிப்பும்


தி.மு.க., ஆட்சியில் இருந்த போது எத்தனை நிலஅபகரிப்பு சம்பவங்கள் நடந்தன... உங்களுக்கு நினைவிருக்கிறதா. கேட்பாரற்ற நிலங்கள் , முக்கிய இடங்களில் உள்ள நிலங்கள், கட்டடங்களை அபகரிப்பு செய்வது, மிரட்டி வாங்குவது என்று மாநிலம் முழுவதும், ரியல் எஸ்டேட் மாபியாக்களுடன் சேர்ந்து செய்வது ஒரு சர்வ சாதாரணமான காரியமாகவே மாறிவிடும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால்! கோயில் நிலங்கள் என்றால் இவர்களுக்கு குஷி. தங்கள் ரவுடித்தனத்தின் உச்சபச்ச முகத்தை நில அபகரிப்பில் காட்டியதால் தான், பின்னர் பொறுப்பேற்ற ஜெயலலிதா, போலீசில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவைத் தொடங்கினார். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. எனக்குத் தெரிந்து நில அபகரிப்பு புகார் இல்லாத தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் இல்லை. நிரூபிக்கப்படவில்லை என்று கூறுவது எளிது - மிரட்டி எழுதி வாங்கிய பின் வழக்கு எப்படி நிற்கும்?

இதை தவிர, தி.மு.க., ஆட்சிக்கு வரும் காலங்களில் எல்லாம், ரவுடிகள் மிக சர்வ சாதாரணமாக மாநிலத்தில் சுதந்திரமாக நடமாட முடியும். சொந்த கட்சிக்காரனைக் கொலை செய்வது ஆரம்பித்து இவர்கள் செய்யாத ரவுடித் தனமே இல்லை. எனவே ஒரு நடுத்தர குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு தி.மு.க., போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது. அனைத்து கட்சியிலும் ரவுடிகள் உண்டு. ஆனால் ஒரு கட்சியே ரவுடியாக இருப்பது தி.மு.க., என்பது ஆச்சரியம்.

முன்னாள் தி.மு.க., மத்திய அமைச்சர் ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மர்ம மரணம், அதன் பின்னணி நாம் அறிந்ததே. தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களுக்குள் மோதி கொலை செய்யப்பட்ட பட்டியல் நீளமானது. மதுரை லீலாவதி போன்ற சமூக போராளிகளையும் கொலை செய்துவிடவும் தயக்கம் காட்டாத கூட்டம் இந்த தி.மு.க., கூட்டம். லீலாவதி கொலை செய்யப்பட்ட போது, மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசிய வசனங்கள் இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் மதுரையில் இன்று வெட்கம் எதுவும் இல்லாமல், அவர்கள் தி.மு.க.,வுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருகிறார்கள். தி.மு.க.,ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளில் வாழ்க்கையைத் தொலைத்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பலரும், இன்று தி.மு.க.,விற்கு ஓட்டு கேட்க விருப்பம் இல்லாமல் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

காரணம் 3: சமச்சீர்க் கல்வித் தரமும் & நீட் தேர்வு குழப்பமும்


கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர்க் கல்வி என்ற கல்விக் கொள்கை மூலம் மாநிலத்தில் கல்வித் தரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

அந்த கல்வித் தரத்தை மக்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்பதை அறிந்த தி.மு.க., அந்த மன ஓட்டத்தை மடைமாற்றவும், தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கவும் கையில் எடுத்தனர் நீட் எதிர்ப்பு. நீட் தேர்வு என்பது ஒரு நுழைவுத் தேர்வு மட்டுமே. அது இட ஒதுக்கீட்டைப் பறிக்க முடியாது, ஆனால் தவறாகப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அது கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆகும் எண்ணத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் என்று பரப்பிவிட்டனர். பின் மாநிலத்தில் இருக்கும் இடங்களை வட மாநிலத்தவர் எடுத்துக் கொள்வர் என்றும் பரப்பினர். போராட்டத்தைத் துாண்டினர்.

எதை திமுக மறைத்தது என்றால் நீட் தேர்வு கொடுக்கும் பாடத்திட்டம், CBSE கொண்ட பாடத்திட்டம் அல்ல; அது medical council of india கொடுக்கும் பாடத்திட்டம் - அந்த தரத்தில் பிளஸ் 2 முடித்து வந்தால் தான் மருத்துவம் நடத்த முடியும் என்ற medical council of india வழிகாட்டுதலுக்கு இணங்க CBSE , State Board என்ற எல்லா பள்ளிகளும் தங்கள் பள்ளி பாடத் திட்டத்தை மேம்படுத்தி கொண்டால் வேலை முடிந்தது. இது தரத்தை உறுதி செய்யும் தேர்வு தான். அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வினை ஏற்றுக் கொண்டன. ஆனால் இதில் முழுமையாக அரசியலை நுழைத்தது தி.மு.க., தான்.

அனிதா என்ற குழந்தைக்குத் தரமான கல்வி கொடுக்கவில்லையே என்று, யோசிக்க வேண்டிய மக்களை, அந்த தரத்தை உறுதி செய்ய வந்த நீட் தேர்வை,அதே அனிதாவை கொண்டு எதிர்க்க வைத்தார்கள்... பாருங்கள், அங்கே தான் தி.மு.க., நிற்கிறது. ஒரு குழந்தையைத் தவறாக வழி நடத்தி, அந்த குழந்தை தற்கொலை செய்ய அழுத்தம் உருவாக்கி, பின் இறந்த குழந்தையை வைத்து அரசியல் தேடும் ஒரு கொடூரமான அதிகார பசி கொண்டு அலையும் தி.மு.க., எந்த காலமும் நாட்டிற்கும் மாநில மக்களுக்கும் நல்லதே அல்ல.

காரணம் 4: மின்தடை போன்ற நிர்வாகத் திறமை இன்மை


நிர்வாகத் திறன் என்பது சுட்டு போட்டாலும் தி.மு.க.,வினருக்கு வராது. கொள்ளை அடிப்பதில் இருக்கும் திறமை இவர்களுக்கு நாட்டை நிர்வாகம் செய்வதில் வரவே வராது. இந்த கலர் டி.வி., கொடுக்கும் திட்டம் இருக்கிறதே, இதை விட ஒரு கேடுகெட்ட முட்டாள் தனமான திட்டம் வேறு இல்லை. இதற்காக தி.மு.க., சுமார் 7000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணடித்தது. அந்த டி.வி., ஓரிரு ஆண்டுகளில் குப்பை ஆனது. இந்த 7000 கோடியைச் சரியான உற்பத்தி முதலீடாக, மக்களுக்கு உழைக்க வைக்கும் முதலீடாக, ஒரு அரசு நிர்வாகம் முதலீடு செய்திருந்தால் மாநிலத்தின் உற்பத்தித் திறன் கூடியிருக்கும்.

இப்போது தமிழகத்தில் எங்காவது மின்தடை இருக்கிறதா. தி.மு.க., ஆட்சியின் போது, கோடை காலத்தில் மட்டுமல்ல எப்போதும் மின் தடை தான். அடுத்த வாரம் சரியாகும்; அடுத்த மாதம் சரியாகும் என்று 5 ஆண்டுகளில் எந்த தீர்வும் எட்ட வழி இல்லாமல், ஒரு நாளைக்கு 12 , 14 மணி நேரம் மின்தடை செய்து மக்களை வதைத்தது தி.மு.க., திட்டம் அமல்படுத்தல் , அதைச் சரியாக நீடித்த நலன் மக்களுக்கு கிடைக்கத் திட்டமிடல் என்று எந்த திறமையும் சுட்டுப் போட்டாலும் தி.மு.க.,விற்கு வராது.

காரணம் 5: கட்சி குடும்பத்தின் சொத்து


அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கும்; அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தி.மு.க., என்ற ஒரு பெரும் இயக்கத்தை மொத்தமாக ஒரு குடும்பத்தின் சொத்தாக மாற்றும், அந்த வேலையைச் செய்து முடித்தவர் கருணாநிதி. இதனை இரண்டாக பிரித்து பார்க்க வேண்டும். கருணாநிதிக்கு முன்: தி.மு.க., என்ற இயக்கத்தில் அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ.வே.கி.சம்பத், என்.வி.நடராசன் போன்றவர்கள் ஐம்பெரும் தலைவர்கள். இவர்கள் தெருத்தெருவாக வீடு வீடாகச் சென்று கூட்டங்கள், போராட்டங்கள் என்று உயிரைக் கொடுத்து உழைத்து உருவாக்கிவிட்ட ஒரு கட்சி இன்று?

கருணாநிதிக்குப் பின்: தி.மு.க., வின் ஐம்பெரும் தலைவர்கள் இன்று ஸ்டாலின் , ஸ்டாலின் மகன் உதயநிதி, கனிமொழி , ஸ்டாலின் மருமகன் சபரீசன், தயாநிதி மாறன் என்று தனிப்பட்ட குடும்ப சொத்து போல் மாறிவிட்டது. அக்கட்சி முன்வைத்த சுயமரியாதை என்ற வார்த்தைக்கு இன்று அர்த்தமே கிடையாது அந்த இயக்கத்தில். உதயநிதி மகனுக்கு போஸ்டர் அடிப்பதும், உதய நிதிக்கு வியர்வை துடைத்து விடுபவரும் கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். இப்படியே போனால் இந்த கட்சியில் ஜனநாயகம் வருவதற்கான வாய்ப்பே கிடையாது.

காரணம் 6: தெரிந்தே தமிழகத்திற்குச் செய்த துரோகங்கள்


தமிழர்களின் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதைவிட அரசியல் லாபகணக்கை தான் பெரும்பாலும் கருணாநிதி கணக்கிடுவார். அதற்கு முக்கியமான மூன்று பிரச்னைகளைக் காண்போம். முதலாவது கட்சதீவு பிரச்சனை. இது இன்று பிரச்சனையாகக் காரணமே தி.மு.க , காங்கிரஸ் தான். ஆனால் எதுவும் தெரியாதது போல் மக்களை ஏமாற்றிக் கடந்த அனைத்து தேர்தல்களிலும் கட்சதீவு மீட்பை, ஒரு தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். 1974ல் கச்சதீவை, இலங்கைக்கு எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் எழுதிக் கொடுத்தது காங்கிரசின் இந்திரா. பின்னர் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக' என்ற கருணாநிதியின் லாப கணக்கு காரணமாக மக்கள் நலன் கண்ணுக்குத் தெரியாமல் போனது.

Advertisement

அன்று பாராளுமன்றத்தில் தி.மு.க., பலம் - 23 இருந்தும் ஒருவர் கூட எதிர்த்து பேசி விவாதம் செய்யவில்லை , அடுத்து இதில் 48 எம்.பி., வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் (இதில் தமிழ் நாட்டிலிருந்து 4பேர்) எந்த வாயும் திறக்கவில்லை. பார்வர்டு பிளாக் ராமநாதபுரம் எம்.பி., மூக்கையா, பெரியகுளம் தொகுதி முஸ்லீம் லீக் முகம்மது சரீப் இருவரும் எதிர்த்துப் பேச அதற்கு ஆதரவு அளித்து, கட்சதீவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பும் தெரிவித்தவர் வாஜ்பாய் தான். ஆனால் மொத்த வரலாற்றையும் அப்படியே மாற்றி தனது அரசியலுக்கு இன்றுவரை பயன்படுத்துவது இதே தி.மு.க., தான்.

அடுத்து காவிரி நீர்பகீர்மானம், நடுவர்போன்ற தீர்ப்பு அமல்படுத்தல் இந்த விஷயத்திலும் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே குறிக்கோளாகத் திரிவது தி.மு.க., தமிழகத்தில் வேறு எந்த கட்சியைவிடவும் 15 ஆண்டுகள் மத்தியில் தொடர்ந்து அமைச்சரவையில் பங்கு பெற்ற கட்சி தி.மு.க., தான். கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை கேட்டு பெறுவதில் கறாராக இருக்கும் இவர்கள், தமிழகத்தின் மொத்த பிரச்சனைகளுக்கு முடிந்த மட்டும் தீர்வை கொடுத்திருக்கலாம்.

ஆனால் மாறாக தி.மு.க., பெற்றது கப்பல் துறை , தகவல் தொழில் நுட்பத்துறை என்று நல்ல வருமானம் வரும் துறைகள் தான். அதற்கு பதிலாக நீர்வளத்துறை வாங்கி அதன் மூலம் தமிழகத்தின் நீராதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்காத தி.மு.க., வின் துரோகம் கொடூரமானது. அடுத்து ஈழத்தமிழர்கள் 1.5லட்சம் மக்கள் போரில் பாதிக்கப்பட்டபோது நடந்த, அரசியல் நகர்வுகள் என்று இன்னும் துரோகங்களை வரிசையாக அடுக்கமுடியும்.

காரணம் 7: தி.மு.க., ஒரு கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி


தி.மு.க., என்ற கட்சி எப்படி இயங்குகிறது என்று அதன் ஒட்டுமொத்த வடிவத்தை வைத்து சற்று உற்றுப்பாருங்கள்; அது கச்சிதமாக ஒரு கார்ப்பரேட் Structure உடன் இயங்குவது தெரியும். அதனால் தான் இதை கம்பெனி என்பேன்;ஆனால் கம்பெனி என்றால் எதுவும் தயாரிக்கும் நிறுவனம் அல்ல; இது அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு நிறுவனம். கவுன்சிலர், வட்ட செயலாளர்கள் போன்றவர்கள் வேலை என்ன? பாருங்கள் அந்த அந்த ஏரியாவில் வரும் சிமென்ட் ரோடு போடுவது, தண்ணீர் தொட்டி போடுவது என்று அரசு திட்டங்களில் கமிஷன் வாங்குவது. அதை குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு மேலே உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மேலே இருக்கும் மாவட்டச் செயலாளர்கள்... இவர்கள் வேலை கட்ட பஞ்சாயத்து செய்தல், நில அபகரிப்பு செய்தல், மாவட்டத்துக்குள் வரும் நிறுவனங்களில் வசூல் செய்தல் என்று பணி தொடரும். அடித்த கொள்ளையைத் தலைமையோடு பங்கு போட்டுக் கொள்வது தான், தி.மு.க., என்ற கம்பெனி நிர்வாகம் நடக்கும் லட்சணம். நான்கு முறை கோவா முதல்வராக இருந்து மறைந்த மனோகர் பாரிக்கரின் அண்ணன் தம்பி மளிகைக்கடை வைத்திருக்க, இங்கே கருணா நிதி குடும்பம் கோடிகளில் குளிக்கக் காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.

வெல்லத்தை அள்ளி போடுபவன் கையை சப்ப தான் செய்வான்;அது தான் எதார்த்தமாக நடைபெறும். ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் வெல்லத்தை அள்ளி, இவர்கள் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு கை விரலை நக்க மக்களுக்குக் கொடுப்பர். தி.மு.க., அரசியலில் மக்களை ஏமாற்ற முடிகிறது என்றால் என்ன காரணம்?

டேய் நீங்கள் எல்லாம் படிக்கவே தி.மு.க., தாண்டா காரணம்' என்று கூசாமல் மாணவர்களை உளவியல் ரீதியாகப் பேசி மடக்குவது. தமிழர்களின் உண்மை வரலாற்றை விட, தி.மு.க., தி.க., தலைவர்கள் வரலாற்றை தான் அதிகம் படிக்கவைத்திருப்பர் இவர்கள். உண்மையில் தமிழகத்தில் படிப்பு சதவீதம் அதிகரிக்க காரணம் காமராஜூம், முன்னாள் கல்வித் துறை திருப்பூர் அவினாசிலிங்கம் தான். நடுரோட்டில் சிலையை மக்கள் வரிபணத்தில் வைத்துவிட்டு, வரிப்பணத்தில் கட்டாத படேல் சிலையை மக்கள் பணம் வீணடித்து கட்டப்பட்ட சிலை என்று கூறி மக்களை நம்பவும் வைக்கிறார்கள். படேல் சிலை மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது அல்ல.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று இன வெறியை மக்களிடம் துாண்டிவிடுவது மூலம் அனைத்தையும் திசை திருப்புவதில் கெட்டிக்காரர்கள் இவர்கள். தி.மு.க.,விற்கு ஓட்டளித்து விட்டு, சிங்கப்பூர் மாதிரி நாடு மாறவேண்டும் என்று நினைப்பதைவிட வெகுளியான விஷயம் வேறு இல்லை. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

-மாரிதாஸ், எழுத்தாளர்
maridhasm@gmail.com


Advertisement

வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
24-மே-201918:18:05 IST Report Abuse

Subramanian Narayanaswamythan oru doctor pattam vanga vum yru Udayakumarai kolai seydu, avan yen maganillai yru solla vaitha samarthiyam thiruttu muttal kazakathirku mattume mudiyum

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
18-மே-201915:59:44 IST Report Abuse

Aarkayகட்சித்தலைவரின் வலப்புறமும், இடப்புறமும் நிற்கும் கோஷ்டிகளை பார்த்தாலே, பயமாயிருக்கிறதே

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
12-மே-201901:57:42 IST Report Abuse

Aarkay100% சதவீதம் உண்மை ஆனாலும், அவ்வளவு மெஜாரிட்டி வைத்திருந்தும், ஒரு நயாபைசா திட்டமும் நிறைவேற்றாமல், எவ்வித திட்டங்களும் தீட்டாத துதி மட்டுமே பாடி, கொடிகளை சுருட்டிய அரசைத்தான் ராதாவும் நடத்தினார் என்பதும் உண்மை

Rate this:
மேலும் 111 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X