மதுரையில் தி.மு.க., செயலர் கொலை பழிக்குப்பழியாக தொடருது அரசியல் பகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் தி.மு.க., செயலர் கொலை பழிக்குப்பழியாக தொடருது அரசியல் பகை

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (6)
மதுரையில் தி.மு.க., செயலர் கொலை பழிக்குப்பழியாக தொடருது அரசியல் பகை

மதுரை, மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.க.,வை சேர்ந்த மாஜி மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் மருமகன் எம்.எஸ். பாண்டி 46, அரசியல் பகை காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.குருசாமிக்கும், அ.தி.மு.க.,வை சேர்ந்த மாநகராட்சி மாஜி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் 2001 முதல் அரசியல் பகை இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலின்போது, போஸ்டர் ஒட்டியதில் ஆரம்பித்த பகை, இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்ட உயிர்களை 'காவு' வாங்கி இருக்கிறது. இந்நிலையில் நேற்று குருசாமியின் மகள் விஜயலட்சுமியின் கணவரான வழக்கறிஞர் பாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த இவர், அப்பகுதி தி.மு.க., கிளை செயலாளராக இருந்தார். இவர் மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2017ல் ராஜபாண்டியின் மகன் முனியசாமி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குருசாமி மகன் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஆள் மாறி கொலை இதற்கு பழிக்குப்பழியாக பாண்டியை கொலை செய்ய திட்டமிட்ட ராஜபாண்டி தரப்பினர், கடந்தாண்டு ஜூன் 14ல் கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே ரேஷன் கடையில் இருந்த அ.ம.மு.க., வட்ட செயலாளர் முனியசாமியை, பாண்டி என தவறுதலாக வெட்டிக்கொன்றனர். இவ்வழக்கில் ராஜபாண்டி மகன் கண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.தற்போது குருசாமியும், அவரது மகன் மணியும் சிறையில் உள்ளனர். ராஜபாண்டி மதுரை பக்கமே தலை வைக்காமல் உள்ளார். கொலைகள் நடப்பதை தடுக்க இருதரப்பிலும் உறுதிமொழி பத்திரங்களை போலீசார் எழுதி வாங்கி வந்தாலும் தடுக்க முடியவில்லை.சமீபத்தில் வழக்கு ஒன்றில் இருந்து ஜாமினில் வந்த பாண்டி, சில நாட்களாக காமராஜர்புரம் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டார். நேற்று காலை ஓட்டளித்துவிட்டு, நாகுபிள்ளை தோப்பு பகுதியில் பூத் சிலிப் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.பகல் 1:00 மணிக்கு ஆட்டோவில் வந்த 5 பேர், அவரை வெட்டினர். தப்பி ஓடிய பாண்டி, சந்து வழியாக ஓடி வீடு ஒன்றில் நுழைந்தார். பின்தொடர்ந்து வந்த கும்பல், அவரை அங்கேயே பல இடங்களில் வெட்டி 'குதறி' கொன்று தலைமறைவானது. ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த காளி உள்ளிட்டோரை கீரைத்துரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X