ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்பதிவு: சபாஷ்... இதுவல்லவோ, ஜனநாயக கடமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்பதிவு: சபாஷ்... இதுவல்லவோ, 'ஜனநாயக கடமை'

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (1)
Share
ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்பதிவு: சபாஷ்... இதுவல்லவோ, 'ஜனநாயக கடமை'

கோவை சாய்பாபாகாலனி அண்ணாவீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் நடந்த விபத்தில் தனது வலது கையை இழந்தார்; வலது காலில் கடுமையான காயம் உள்ளது. அதற்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.


நடக்கமுடியாத சூழலில் உள்ள ராஜேந்திரன், தன்னுடைய நிலை குறித்து மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி ஆம்புலன்ஸ் வாகனத்தில், மருத்துவ குழுவோடு, ராஜேந்திரன் வீட்டுக்கு நேற்று காலை சென்றார். அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து வந்து, வெங்கிட்டாபுரம் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்கச்செய்தார்.திருப்பூர், ஷெரீப் காலனியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 85. சமீபத்தில், அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், அவர் தற்போது, மருத்துவமனையில் உள்ளார்.ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்ற அவரது ஆவலை பூர்த்தி செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனை ஆம்புலன்ஸ்சில் அவர், ஓட்டுப் பதிவு செய்ய வேண்டிய, அரண்மனைப்புதுார் பள்ளி ஓட்டு சாவடிக்கு அழைத்து வரப்பட்டார். அவருடன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். ஸ்டெரச்சரில் படுத்த நிலையில் அவர் ஓட்டுச் சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் தனது ஓட்டை மகிழ்வுடன் பதிவு செய்தார்.

பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில் உள்ள எட்டிமடை பேரூராட்சி, மாதா காலனியில் வசிக்கும் கன்னியம்மாள், 80, என்பவர் நடமாட இயலாத நிலையில் இருந்தார். ஆனால், தனது ஓட்டை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, விரும்பினார். தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்சை ஏற்பாடு செய்து மூதாட்டியை ஓட்டுச்சாவடி அழைத்து சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற உதவினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X