பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மனம் தளர விடாதீர்கள் செல்லங்களே!

பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன. 'பெயில்' ஆனாலும் பிரச்னையே இல்லை. ஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி பெறலாம்.
வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நினைக்கவேண்டாம்; ஏராளமான படிப்புகள் உள்ளன; சுய தொழிலும் செய்யலாம். எனவே, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையோ, 'பெயில்' ஆன மாணவர்களையோ பெற்றோர் கடிந்து கொள்ளாமல், அவர்கள் மனதைத் தேற்றி, எதிர்காலம் சிறப்பாக அமைய வழி செய்ய வேண்டியது அவசியம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியான நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம் படிப்புகளில் சேர்வர். அதே நேரம், குறைவான மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொள்வது அவசியம்.

35 மதிப்பெண்ணே போதும்


சென்னை பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரியும், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வருமான திருமகன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், மாணவர்களும், பெற்றோரும் கவலையே பட வேண்டாம். அனைத்து கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மட்டுமே போதும்.

அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில், 'சீட்' கிடைக்கா விட்டால், தனியார் கல்லுாரிகளில், நிச்சயம் இடம் கிடைக்கும்.எவ்வளவு மதிப்பெண் உள்ளதோ, அதற்கேற்ற பட்டப்படிப்பில் சேரலாம். அந்த படிப்பின் வழியே, அரசு துறை வேலைவாய்ப்பு தேர்வுகள் எழுதி, அரசு அதிகாரி ஆகலாம்.மொழி சார்ந்த படிப்புகளுக்கு, எல்லா மாணவர்களுக்கும், கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்.

தமிழ், ஆங்கிலம் என, மொழியியல் முடித்தவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு, பிளஸ் 2 மதிப்பெண், ஒரு தடையாக இருக்காது.ஊடகங்கள், நாளிதழ் கள், விளம்பர துறைகளில், மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த பாடங்களையும் தேர்வு செய்யலாம்.
பட்டப் படிப்புக்கு, கட்டணம் செலுத்த முடியாதவர்கள், எளிய முறையில், வங்கிகளில், கல்வி கடன் பெறலாம்.ஒரு மாணவருக்கு, ஆண்டுக்கு, 2,000 ரூபாய் வரை தான் வட்டி வரும். படிப்பு முடித்து, வேலைக்கு சென்ற பின், கடனை, மாத தவணையாக செலுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

40 - 45 போதுமே!


அண்ணா பல்கலையின், இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 தேர்வில், பொது பிரிவு மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற பிரிவு மாணவர்கள், 40 சதவீதம் மட்டும் பெற்றாலே போதுமானது.அவர்கள், ஏதாவது ஒரு, இன்ஜி., கல்லுாரியில், பி.இ., அல்லது, பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். தமிழக அரசின், கவுன்சிலிங் வழியாக இட ஒதுக்கீடு அடிப்படையில், இந்த இடங் பெறலாம்.

கலைக்கு, 35 போதும்


பிளஸ் 2வில், வெறும் தேர்ச்சி மதிப்பெண்ணான, 35 மதிப்பெண் மட்டும் எடுத்தால் கூட, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பில்சேரலாம். ஒவ்வொரு படிப்புக்கும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.
பி.ஏ., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட, இளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர முடியும்.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கலை கல்லுாரிகளில், விண்ணப்ப

பதிவு துவங்கியுள்ளது. மதிப்பெண்ணை தர வரிசைப்படுத்தி, மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு சேர்க்கை வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றவர்கள், ஏதாவது, ஒரு பல்கலையில், பட்டப்படிப்பு மட்டும் முடித்த பின், குரூப், 1, 2, 3 என, அரசு பணிகளுக்கான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுதி, அரசு பணியில் சேரலாம்.

சட்டம், சி.ஏ.,வுக்கு, 45 போதும்


அதேபோல், அம்பேத்கர் சட்ட பல்கலையின், இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., - எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.ஏ., - பி.பி.ஏ., - எல்.எல்.பி., போன்ற படிப்புகளில் சேரலாம். இதற்கு, பொது பிரிவினர், பிளஸ் 2வில், 45 சதவீதமும், மற்ற பிரிவினர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றால் போதும். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் படித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். தொலைநிலையில், சி.ஏ., படிப்பும், கல்லுாரியில், பி.காம்., படிப்பும் படிக்கலாம்.

'டிப்ளமா'வுக்கு, தேர்ச்சி போதும்


மூன்றாண்டு பட்டப்படிப்பு சேராதவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால், 'டிப்ளமா' இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரலாம். இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்து, பி.இ., - பி.டெக்., போன்ற, இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் சேரலாம். இதன்படி, நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்ந்தவர்களுக்கு இணையான பட்டத்தையும், வேலைவாய்ப்பையும் பெறலாம்.

மருத்துவமும், துணை படிப்புகளும்


மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், பொது பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் போதும்.பொது பிரிவில் உள்ள மாற்று திறனாளி மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும்.
மற்ற அனைவரும், 40 சதவீதம் பெற்றிருந்தால் போதும். 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், தரவரிசையில் இடம்பெற்று, மருத்துவ படிப்பில் சேரலாம்.'நீட்' தேர்வு மதிப்பெண் குறைவு காரணமாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர முடியாவிட்டால், மருத்துவம் சார்ந்த, பி.பார்ம்., கண் மருத்துவத்துக்கான, 'ஆப்தால்மாலஜி' உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேரலாம். மாணவியர், 'நர்சிங்' படிப்புகளில் சேர்வதன் வழியே, அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில், நல்ல சம்பளத்தில், பணி வாய்ப்பை பெற

முடியும்.

தோல்வியே வெற்றியின் முதல் படி!


சேலத்தை சேர்ந்த, உளவியல் ஆலோசகர், கதிரவன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், வரும் தேர்வில் தேர்ச்சி பெற உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள், வரும் துணை தேர்வில், சிறந்த மதிப்பெண் எடுக்க முடியும்.
இப்போதைய சிறிய தோல்வி, அடுத்த இமாலய வெற்றிக்கு படிக்கல்.விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், பள்ளி படிப்பு கூட முடிக்காதவர். அவரது தாய் அளித்த ஊக்கத்தால், உலகம் போற்றும் விஞ்ஞானியானார். இன்னும் எத்தனையோ, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சியே பெறாமல், இரண்டாவது முயற்சியில், பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதேபோல், இன்ஜினியரிங்கும், மருத்துவமும் மட்டும், உயர்ந்த படிப்புகள் அல்ல. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் போன்ற பலர், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பும், அந்தஸ்தும் உள்ளது. இந்த படிப்பில், மதிப்பெண் வரவில்லையா; வேறு எந்த படிப்பிற்கான திறமை, நம்மிடம் இருக்கிறது என தெரிந்து கொண்டால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட, வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
வாழ்க்கையில் இத்தனை வழிகள் இருப்பதைப் பற்றித் துளியும் சிந்திக்காமல், தற்கொலை செய்து கொள்வது, வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக நினைப்பது, மற்றவர்கள் கிண்டலடிப்பரே என, தாழ்வு மனம் கொள்வது ஆகியவை, வாழ்வில் முன்னேற, எந்த வகையிலும் உதவாது. மாணவர்கள், நம்பிக்கையுடன், நல்ல, நேர்மறையான முடிவு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

துணை தேர்வு எப்போது?


பிளஸ் 2வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன் மாதம், துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு தேர்வு துறை சார்பில், ஜூன், 6 முதல், 13ம் தேதி வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்கள், இப்போதிருந்தே பாடங்களை படித்து, தயாராக வேண்டும்.
ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வுக்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்; எளிதில் தேர்ச்சி பெறலாம். தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். ஏதாவது ஒருபடிப்பில், உங்களுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது.பிளஸ் 2வில், மதிப்பெண் குறைந்தாலும், கல்லுாரி படிப்பில், உங்கள் கவனத்தை செலுத்தி,

முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள். கல்லுாரியிலேயே, 'கேம்பஸ்' வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

'படி படி' என, அழுத்தம் தராதீர்!


பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரின், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எங்கள் பிள்ளைகள், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அவர்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் காரணம். இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் என, நாங்கள் வற்புறுத்தவில்லை.
மாறாக, 'நேரத்தை வீணடிக்காமல், பாடங்களை புரிந்து படித்து விட வேண்டும்' என அறிவுறுத்தினோம்.தினமும், பள்ளியில் நடத்தும் பாடங்களை, வீட்டில் படித்து, அதே நாளில், தேர்வு எழுதி, பார்த்து விட வேண்டும். அந்த பாடங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், அதை குறிப்பெடுத்து, மறுநாள் பள்ளிக்கு சென்றதும், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் பெற வேண்டும் என, வழிகாட்டினோம்.
சரியான நேரத்தில் உணவு, துாக்கம் என்பதும், மாணவர்களுக்கு முக்கியமானது. எனவே, மதிப்பெண் குறைந்த மாணவர்கள், கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளுக்கு, எந்த விதத்திலும், படிப்பின் காரணமாகவோ, மதிப்பெண் காரணமாகவோ, அழுத்தம் தரவில்லை; தரவும் கூடாது. உரிய நேரத்தில், உணவு, துாக்கம், விளையாட்டு என, திட்டமிட்டால் போதும். இதன்பிறகும், மதிப்பெண் குறைந்தால், அதற்கேற்ற படிப்பில் சேர்ந்து சாதிக்கலாம் என, நினைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திறந்தநிலை பள்ளியும் இருக்கு!


பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாமலோ, மதிப்பெண் குறைவாகவோ உள்ளவர்கள், தொலைநிலை பள்ளியிலும் படிக்கலாம். மத்திய அரசின், தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில் சேர்ந்து, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம்.இதில், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பின்பற்றப்படும். இதில் படிப்பவர்கள், 'நீட்' தேர்வில் கூட பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
என்.ஐ.ஓ.எஸ்., பள்ளி படிப்பில் சேர்பவர்கள், www.nios.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட, என்.ஐ.ஓ.எஸ்., கல்வி முறையில், பிளஸ் 2 வகுப்பில் சேரலாம்.நேரடி பள்ளியில் படித்ததற்கு நிகரான சான்றிதழ், மத்திய அரசால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பயன்படுத்தி, கல்லுாரிகளில் நேரடியாக, பட்டப் படிப்புகளில் சேரலாம்.இதன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம், சென்னை, ராணிமேரி கல்லுாரி அருகில், லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ளது. அங்கு சென்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கைகொடுக்கும் தொலைநிலை பல்கலை!


பிளஸ் 2 தேர்ச்சி பெறா விட்டால், கல்லுாரியில் சேர முடியாதே என நினைப்பவர்களுக்கு, அடைக்கலம் தரும் வகையில், மத்திய அரசின், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையும், தமிழக அரசின், திறந்த நிலை பல்கலையும் உள்ளன.இங்கு, பிளஸ் 2 முடிக்காதவர் களுக்கு, ஆறு மாதம் தகுதி தேர்வு பயிற்சியும், தேர்வும் நடத்தப்படும்.
இதில், மாணவர்கள் எளிதாக தேர்வாகலாம்.அதன்பின், மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை, அதே பல்கலையில் தொலைநிலையில் படிக்கலாம். இந்த படிப்புக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு வேலைக்கும், போட்டி தேர்வுக்கும் தகுதியானதாகும். இதற்கான விபரங்களை, rcchennai.ignou.ac.in மற்றும் www.tnou.ac.inஎன்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
20-ஏப்-201916:51:27 IST Report Abuse

oceகல்வி ஆண்டில் முக்கால்வாசி காலம் பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதிலை. அதிகாலையில் எழுந்து படிப்பது மில்லை. இரவில் படுக்க போகும் நேரம் வரை டிவி பார்க்கின்றனர். தேர்வு நேருங்கும் நேரத்தில் மட்டும் விழுந்து விழுந்து படித்து பாடங்களை நெட்டுரு செய்து அவசர கதியில் தேர்வு எழுதினால் எப்படி அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.படிப்பில் ஒழுக்கம் இல்லை. ஆசிரியர்களும் ஒயிட் காலர் ஜாப் செய்கிறார்கள்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201906:21:27 IST Report Abuse

Manianபொதுவாக, படிப்பறிவுக்கு முக்கியம் கொடுக்காத வீடுகளித்தான் இதை காணலாம். தகப்பன் குடிகாரனாக இருந்தாலும் இதுதான் கதி. கண்டிப்போடு, ஆனால் அன்போடு வளரும் குழந்தைகள், வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்ய சொல்லி கொடுக்கும் பெற்றோர்கள் இருந்தால் குழந்தைகள் தன் நம்பிக்கையோடுடு நன்கு படிக்கிறார்கள் என்று சுமார் 10,00 குழந்தைகளை கண்டு சர்வே எடுத்துள்ளார்கள். இதனால்,சுமார் 70 % குழந்தைகள் கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்களாம்.ஏழ்மை, சுழ்நிலையே பொதுவாக படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கிராமங்களில் இது அதிகம்.மேலும், தாங்கள் பட்ட துன்பங்கள்,தங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று தவறுதலாக கண்டிப்ப-அன்பு கலந்த திட்டம் இல்லாதவர்களே பிள்ளைகளை சோம்பேரியாக்குகிறார்கள். வெளி உலக பௌதீக,ரசாயான தொடர்புகளை,சிந்திக்கும் திறமையை வளர்க்கவே, வேலைக்கு இல்லை, ஆளுமைத் திறமையை கூடுதலாக வேலைக்குத் தேவை என்பதை தனிப்படுத்தி, அதை கற்க வழி சொல்வதில்லை. நீ படிச்சா வேலைகிடைக்குமா என்று கல்வியை மட்டம் தட்டுகிறார்கள். பள்ளி மூலம் பௌதீக உலக அறிவு-புரிதல் அதில் இணைந்து வாழ்தல், ஆளுமைத் திறமையை வளர்த்தல், இரண்டும் வாழ்க்கைக்கு தேவையான இரு-பக்கம் உள்ள நாணயம் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள். இவர்கள் வெறும் உடல் உழைப்பால் வேலை செய்ய மட்டுமே முடியும்(சுமார் 95%). இது உலகம் பூராவும் கண்ட உண்மை. பில்கேட் போன்றவர்கள் ஆளுமைத்திறன், பள்ளி கல்வி மூலமே முன்னேரியவர்கள். அவர்களிடம், 'காரியத்திலிருந்த காரணம் அறியும் தர்கநிலை -ஏன் என்று அறிதல்' அதிகம் -எது மக்களுககு விலை அதிகம் இல்லாமல் தேவை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதற்கான மென்பொளுளை கண்டு பிடித்தார். ஆனால்,காரணத்திலிருந்து காரியம் செய்யும் தர்க நிலை 'எது,எப்படி' என்பதையே பள்ளிகளில் கற்கிரோம்.- விவசாயம் தெரியும், ஆனால் ஏன் லாபத்தில் விற்க முடியவில்லை என்பது.இது ஒற்றைக்கண் பார்வை. பிறறை குறைகூற மட்டுமே உதவும் தர்க அறிவு. ...

Rate this:
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
20-ஏப்-201909:21:37 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyஎனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் இவ்வளவு பள்ளிகளில் நூற்றுக்கு நூறு பேர் பாஸ். தொண்ணுன்னுருக்கும் மேல் மதிப்பு ஏன் வாங்கும் மாணவ மாணவிகள் பலப்பல ஆயிரம் அதுவும் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி , மேத்தமேட்டிக்ஸ் ,பயாலஜி போன்ற சப்ஜெக்ட்டுகளில். ஆனால் நம் மாணவ மனைவிகள் எண்ணிக்கை கிட்ட தட்ட சைபர் [ ஸிரோ ] ஐ ஐ டி. மற்றும் நீட் தேர்வுகளில். இது ஏன் . மதிப்பு எங்களை ஆசிரியர்கள் ' தாராளமாக வழங்குகிறார்களா / இல்லை நம் படிப்பு முறை தவறானதா ,தரமற்றதா ? ஆந்திரா ,தெலுங்கானா , கர்நாடகம் கேரளா வடக்கத்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது , அவர்களும் இதே தேர்வுகளை எழுதுகிறார்கள் . இது பற்றி நம் தினமலர் குறைந்தது ஒரு மாதம் நம் ஆசிரியர்கள் ,படித்தவர்கள் , கல்வி நிபுணர்கள் , மற்றும் படிப்புத்தரம் பற்றி தெரிந்தவர்கள் எழுத வேண்டும் தினமும் .எனது கவலை நம் மாணவ செல்வங்களை 'தரமற்ற நம் தமிழக படிப்பு முறை முன்னேறவிடாமல் தடுக்கிறது '

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-ஏப்-201907:29:12 IST Report Abuse

Manianஉண்மை சுடும். ஜாதீய வெறியை தூண்டி, ஆசிரியர் என்பவர் யாராகவும் இருக்கலாம், தகுதியே மூக்கியம் என்பதை மறைத்து,கருணா தனது அரசியல் ஆதாயத்திற்காக, பார்ப்பனர்கள் ஒழிக என்று அவர்களை ஆசிரியர்களா வர விடவில்லை. ஏழ்மையிலும் கல்வி கற்பிப்பதை பொதுவாக தங்கள் கடமையாக பரம்பரை பரம்பரையாக நினைத்தார்கள். பொற்கொல்லர், சிற்பிகள், தச்சர், சங்கீத வித்வான்கள் என்ற ஆழ்ந்த திறமை சார்ந்த தொழில்களிலும் அவர்கள் பிள்ளைகள் ஏகலைவன் போல் தன் தந்தையோடு இருந்து பள்ளியில் கற்க முடியாத அனுபவ நுணுக்கங்களை கற்று தேர்ந்தே பிரகாசித்தார்கள். இந்த இன்டேன்ஷிப் ( ) போல் நாள் முழுவதும் கற்றுக்கொண்ட பின், சிறந்த பொற்கொல்லர்கள், சிற்பிகள், தச்சாரக்ள், சங்கீத வித்வான்கள் ஆகிறார்கள். அந்த அனுபவ படிப்பை கொடுக்கும் வழி செய்யாமல், கொடுத்து எல்லா ஜாதியினரையும் ஆசிரியர் ஆக்க முயற்சிக்காமல், சிறந்தவர்களை விரட்டினதின் பலன், இன்று தகுதி இல்லா குப்பன், சுப்பன், மடையாண்டி என்ற போலி ஜாதி சான்று மூலம் லஞ்சம் கொடுத்தே ஆசிர்யர்களாக தமிழ் நாட்டில் 90 % இருக்கிறார்கள். அவர்களிடம் படித்த மாணவர்கள் உருபடுவார்களா? சிபிஎஸ் போன்ற தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுபவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் ஏன் இப்படி கருணாவின் ஜாதீய வெறியை எதிர்க்கவில்லை, எங்கள் பேரன் பேத்திகளின் வருங்காலத்தை நாசமாக்கி விட்டீர்களே என்று கேட்பார்களா? ...

Rate this:
King of kindness - muscat,ஓமன்
20-ஏப்-201909:19:57 IST Report Abuse

King of kindnessமதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது அல்ல.உன் திறமையே உன்னை தீர்மானிக்கிறது.முக்கியமாக மற்றவர்களிடம் எப்படி பேசுகிறோம் எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.என்பன இங்கு முக்கியமானவை.

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201906:22:40 IST Report Abuse

Manianஆளுமை திறமை. அதை முதலில் கற்க வேண்டும். சமூக வேசை மூலமே அதை பெற முடியும். ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X