தென்னையில் ஊடுபயிராக இலை வாழை சாகுபடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ஊடுபயிராக இலை வாழை சாகுபடி

Added : ஏப் 19, 2019

உடுமலை:பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடையால், தென்னந்தோப்புகளில், ஊடுபயிராக, இலை வாழை சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், ஏழு குள பாசனப்பகுதியில் மட்டுமே வாழை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கதளி, நேந்திரன் உட்பட பல்வேறு ரக வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கேரளா உட்பட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
ஆனால், பிற பகுதிகளில், அதிக தண்ணீர் தேவை, பல மாதங்கள் பராமரிப்பு உட்பட காரணங்களால், வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு, அரசு தடை விதித்தது. இதையடுத்து, உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் பார்சல் செய்ய, பயன்படும், வாழை இலைக்கான தேவை அதிகரித்தது. பிற மாவட்டங்களில் இருந்து வாழை இலை வரத்து குறையும் போது சிக்கல் ஏற்படுகிறது.இவ்வாறு, வாழை இலைக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், இலை வாழை ரக கன்றுகளை நடவு செய்து, சாகுபடியை துவக்கியுள்ளனர்.
குறிப்பாக, தென்னந்தோப்புகளிலும், காய்ப்புக்கு வராத தென்னங்கன்றுகள் உள்ள விளைநிலங்களிலும் இவை அதிகரித்துள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'தென்னை மரங்களுக்கு இடையே வாழையை ஊடுபயிராக பராமரிப்பதால், மண் வளம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வாழை இலைக்கு தேவை அதிகரித்துள்ளதால், அந்த ரகத்தை தேர்வு செய்துள்ளோம். பருவமழை ஒத்துழைத்தால், வாழை சாகுபடி பரப்பு பல மடங்கு கூடுதலாகும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X