கோவை: மலிவு விலையில், 'சானிட்டரி நாப்கின்' தயார் செய்யும் இயந்திரம் உருவாக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம், 'பார்ச்சூன்' இதழின், 'உலகின் மிகச்சிறந்த தலைவர்கள்' பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
கோவை, வடவள்ளி, பி.என்.புதுாரை சேர்ந்தவர், அருணாசலம் முருகானந்தம். இவர், மிகக்குறைந்த விலையில், பெண்களுக்கான, 'சானிட்டரி நாப்கின்' செய்யும் இயந்திரத்தை உருவாக்கினார். அதுபற்றி, உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மத்திய அரசு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்துள்ளது.
அவரது வாழ்க்கை சம்பவங்களை தழுவி, உருவாக்கப்ட்ட பாலிவுட் படம், 'பேட்மேன்' என்ற பெயரில் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. முருகானந்தத்தின் பணிகளால் உந்துதல் பெற்று, அமெரிக்காவை சேர்ந்த குழுவினர் தயாரித்த குறும்படம், இந்தாண்டு, ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், உலகின் தலைசிறந்த தலைவர்கள் என, 50 பேர் பட்டியலை, அமெரிக்காவின் 'பார்ச்சூன்' இதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தில், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா உள்ளனர். ஐந்தாம் இடத்தில், முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா உள்ளார். முருகானந்தம், 45ம் இடத்திலும், மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, 47ம் இடத்திலும் உள்ளனர்.