காங்.,குக்கு, ஜூட் விட்ட பிரியங்கா; சிவசேனா கட்சியில் ஐக்கியம்| Dinamalar

காங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா கட்சியில் ஐக்கியம்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (14)
Share

புதுடில்லி : காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி அடைந்த, பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகி, நேற்று சிவசேனாவில் சேர்ந்தார்.



latest tamil news



மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்தவர் பிரியங்கா சதுர்வேதி, 39. காங்., கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக பதவியில் இருந்த அவர், நேற்று, கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இது குறித்து, காங்., தலைவர் ராகுலுக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்., கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் சேர்ந்தேன். இதில், பல்வேறு பொறுப்புகளை ஏற்று, அவற்றை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றினேன். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஆகியவற்றுக்கு கட்சி முக்கியத்துவம் தந்தும் கூட, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். இது குறித்து புகார் அளித்தேன். இதையடுத்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.


latest tamil news



ஆனால், உ.பி., மாநில மேற்கு பகுதி பொதுச்செயலர் ஜோதிராதித்யா சிந்தியாவின் சிபாரிசால், அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அவர்களால், எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதன் பிறகும், கட்சியில் நீடிப்பது பெருத்த அவமானம் என்பதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர், உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காங்., கட்சியில் இருந்து விலகுவது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்திலும், பிரியங்கா பதிவிட்டு உள்ளார். இதையடுத்து, மும்பையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை நேற்று சந்தித்த பிரியங்கா, அவர் முன்னிலையில், சிவசேனா கட்சியில் இணைந்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X