கவுகாத்தியில் மோதும் ராணிகள் எம்.பி.,யாக போட்டா போட்டி| Dinamalar

கவுகாத்தியில் மோதும் ராணிகள் எம்.பி.,யாக போட்டா போட்டி

Added : ஏப் 20, 2019
 கவுகாத்தியில் மோதும் ராணிகள் எம்.பி.,யாக போட்டா போட்டி

அசாம் மாநிலம், கவுகாத்தி லோக்சபா தொகுதியில், பா.ஜ., மற்றும் காங்., சார்பில், இரண்டு, 'ராணிகள்' மோதுகின்றனர். இவர்களில் எந்த ராணி, கவுகாத்தி கோட்டையை பிடிக்கப் போகிறார் என, வாக்காளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் முக்கிய நகராக கருதப்படும், கவுகாத்தி லோக்சபா தொகுதி, எப்போதும் பிரபலமானதாகவே இருந்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில், கவுகாத்தியில் வென்ற, எம்.பி.,க்கள் மத்திய அரசில் முக்கிய பதவியை பிடித்து உள்ளனர்.

ஹேம் பரூவா என்ற, எம்.பி., பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில், வெற்றி பெற்றார். இவர், நேரு பிரதமராக இருந்த போது, லோக்சபாவின் எதிர்க் கட்சி தலைவராக இருந்தார்

மொரார்ஜி தேசாய் ஆட்சியின் போது, ரேணுகா தேவி என்ற, எம்.பி., அமைச்சராக பதவி வகித்தார்; அவர், இங்கிருந்து வென்றவர் தான் காங்கிரஸ் சார்பில், இந்த தொகுதியில், 1971ல் வெற்றி பெற்ற, எம்.பி., தினேஷ் கோஸ்வாமி, அசாம் மக்களிடையே பிரபலமானவர். இந்த வரிசையில், தற்போதைய, எம்.பி., - பா.ஜ.,வை சேர்ந்த, பிஜோயோ சக்ரவர்த்திக்கு, 85 வயது ஆகிவிட்டதால், அவருக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை; குயின் ஓஜா என்ற பெண் போட்டியில் உள்ளார். முன்னணி சுய தொழில் முனைவோர் மற்றும் விளையாட்டு நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். கவுகாத்தி மேயராக, அசாம் கண பரிஷத் கட்சியின் சார்பில் பதவி வகித்தவர் இவர் என்பது, கூடுதல் தகவல்.

காங்கிரஸ் சார்பில், பொபிதா சர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் சுயதொழில் செய்கிறார். மேலும், அசாம் மாநில, 'டிவி'க்களில் பிரபலமான தொடரில் நடித்து புகழ் பெற்றவர்; இவரை தெரியாத பெண்களே இல்லை என்ற அளவுக்கு, சீரியலில் பிரபலமானவர். மேலும், 'கவுகாத்தி குயின்' அழகு போட்டியில், 1980ல் வெற்றி பெற்று, கவுகாத்தி ராணியானவர்.இவர்கள் இருவரும் கடுமையாக போட்டி போட்டு, பிரசாரம் செய்கின்றனர்.

இரண்டு தரப்பிலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர்.பட்டப்படிப்பு முடித்துள்ள, பொபிதா சர்மா, எதிரணியில் உள்ள, குயின் ஓஜாவின் கல்வி தகுதி குறித்து, பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 'திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றதாக கூறியுள்ள குயின் ஓஜா, பிளஸ் 2 மட்டுமே முடித்துள்ளார்' என, பொபிதா சர்மா பிரசாரம் செய்கிறார்.இதை கண்டு கொள்ளாத ஓஜா, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி, ஓட்டு கேட்டு வருகிறார்.

- சமுத்ர குப்த காஷ்யப் -
சிறப்பு செய்தியாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X