முடிந்தது தேர்தல் தெருக்கூத்து!
மொத்தம், 90 கோடி வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரும், தேர்தல் திருவிழாவில், இரண்டாவது கட்டம் முடிந்துள்ளது; ஐந்து கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது.நடந்து முடிந்த, இரண்டு கட்டங்களிலும், நடைபெற்ற ஜனநாயக மீறல்களை பார்க்கும் போது, எதிர்கால தேர்தல் எப்படி இருக்குமோ; நாட்டின் ஜனநாயகம், இன்னும் எவ்வளவு மோசமாக பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.
சாதாரண, நடுநிலையான, சராசரி வாக்காளனாக, இந்த தேர்தலில் நான் கண்ட, ஜனநாயக விரோதங்கள், புனிதமான தேர்தலை, புரையோடச் செய்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.நடந்து முடிந்த தேர்தலை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்...நாட்டின் உயரிய தலைவரான, பிரதமர் மோடியை, 'திருடன்' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறினார். அவர் போலவே, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் முதற்கொண்டு, அனைத்து கூட்டணி கட்சியினரும் வழிமொழிந்தனர்.இதை, பிற நாட்டினர் அறிய நேர்ந்தால், நம் நாட்டைப் பற்றியும், நம் பிரதமரைப் பற்றியும் என்ன நினைப்பர்...அது போலவே, எதிர்க்கட்சித் தலைவர்களில், பிரதமர் வேட்பாளராக கருதப்படும், காங்கிரஸ் தலைவர், ராகுலை, பா.ஜ.,வினர், 'பப்பு' என, கிண்டல் செய்தனர்; ஒன்றும் தெரியாத சின்னப் பையன் என்றனர். ஒரு வேளை அவர், பிரதமராக வந்து விட்டால், பிற நாடுகள், நம்மை என்ன நினைக்கும்?ராகுலின் குடும்பத்தினரை, ஊழல்வாதிகள் என, ஆளும் தரப்பினர் வசை பாடினர். இதனால், இதற்கு முன் இருந்த ஆட்சி மற்றும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மீது, சந்தேகப் பார்வை தானே விழுகிறது!'நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது; பிற நாடுகளைக் காட்டிலும் முன்னேற்றப் பாதையில் இந்திய பொருளாதாரம் செல்கிறது' என, சர்வதேச அமைப்புகள் கூறியுள்ளன. எனினும், தேர்தல் பிரசாரத்தில், 'நாடு படுபாதாளத்திற்கு சென்று விட்டது' என, கட்சிகளின் தலைவர்கள், பொய் பிரசாரம் செய்தனர்.உச்ச நீதிமன்றமே மறுத்த போதிலும், 'ரபேல்' விமான கொள்முதலில், ஊழல் நடந்தது என, காங்கிரஸ்காரர்கள், வீதிக்கு வீதி பிரசாரம் செய்தனர்.
நீதிபதிகளின் தீர்ப்பையே, தங்களுக்கு சாதகமாக, சில கட்சித் தலைவர்கள் மாற்றி, பிரசாரம் செய்த கூத்தெல்லாம், இந்த தேர்தல் திருவிழாவில் தான் நடந்தது!இதையெல்லாம் பார்த்து, 'இது தான் தேர்தலா... இப்படித் தான் ஜனநாயகம் நமக்கு கற்றுக் கொடுத்ததா...' என, மனம் வேதனை அடைகிறது.தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் துாவி, வாக்காளர்களின் கைகளில் பணத்தைத் திணித்தே தீருவது என முடிவெடுத்து, அதில் சில கட்சிகள் வெற்றியும் பெற்றன; கொள்ளையடித்த பணத்தில், மக்களையும் பங்காளியாக்கி விட்டன.'ஒரு ஓட்டிற்கு, 500 ரூபாய்; எங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் உள்ளனர்; ஆகவே, இவ்வளவு ரூபாய் கொடுங்கள்' என, வாக்காளர்களே வேட்பாளர்களை தேடிச்சென்று கேட்கும் அளவுக்கு, நிலைமை போய் விட்டது. பணம் கிடைக்காதோர், சாலை மறியல் செய்யும் அளவிற்கு கூட, நிலைமை சென்றது கேவலமே!தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, துவங்கிய தேர்தல் தொடர்பான அரசியல் விளையாட்டுகள், ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கின. கூட்டணி சேர்ப்பதில் நடந்த குழப்பங்கள், அதற்காக நடந்த பேச்சுகள், தொகுதி பங்கீடு இழுபறிகள், இந்த தேர்தல் இப்படித் தான் நடத்தப்படத் தான் வேண்டுமா என்ற கேள்வியை எனக்குள் ஏற்படுத்தியது.கட்சிகளின் வேட்பாளர் தேர்வில், நல்ல மனிதர்களுக்கு இடமில்லாமல் போனது; நேர்மையானவர்கள், 'கட்டம்' கட்டப்பட்டனர். மாறாக, ஜாதி, மதம் ரீதியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; பண பலம் மிக்கவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.அவர்களுக்கு ஆதரவாக, அரசியல் தலைவர்கள் நிகழ்த்திய பிரசாரங்களில், நியாயம் செத்துப் போனது; பொய்யும், புரட்டும் முன் நின்றன.
தகுதியே இல்லாத பலருக்கும், எம்.பி.,யாக, 'சீட்' வழங்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. வேட்பாளர்களாக ஆகும் முன், கட்சிகளில் விருப்ப மனு தாக்கல் செய்யும் போதே, உண்மையை பல மடங்கு மறைத்து, பொய்க்கு புது வேஷம் கட்டி, இருப்பதை மறைத்து, இல்லாததை சொல்லி, கட்சிகளில் ஆள் பிடித்து, எப்படியோ சீட் வாங்கி, அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக பலர் ஆகினர்.பெரும்பாலான வேட்பாளர்கள் தான் இப்படி என்றால், அவர்களை நிறுத்திய கட்சிகளும், ஏராளமான தவறுகளை, முறைகேடுகளை, மோசடி பிரசாரங்களை செய்தன. அதையும் நம் மக்கள், கை தட்டி பாராட்டி, காரசாரமாக விவாதித்தனர்.'இந்தியாவில் வறுமையை ஓட ஓட விரட்டி அடிப்பேன்' என்பது போன்ற, நிறைவேற்றவே முடியாத, பொய்யான வாக்குறுதிகள், கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்தன. அவற்றில் பல கட்சிகள், மாதம் இவ்வளவு ரூபாய் இலவசமாக தருவோம் என அறிவித்து, ஏழைகளை பிச்சைக்காரர்கள் போல எண்ணியிருந்ததை காண முடிந்தது.'நாங்கள் வித்தியாசமானவர்கள்' என அறிவித்து, ஓட்டுகளை பெற்று, ஆட்சிக்கு வந்த சில கட்சிகளும் கூட, இலவசமாக ஒவ்வொருவருக்கும், இவ்வளவு ரூபாய் தருவோம் என அறிவித்து, நடுநிலையாளர்கள், நல்லவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தின.தேர்தல் பிரசாரத்தில் கேட்கவே வேண்டாம். வாய்க்கு வந்ததை பேசிய தலைவர்கள் ஒரு புறம் என்றால், ஆபாசமாக பேசிய, பிரிவினைவாதத்தை துாண்டிய பேச்சாளர்களும், பிரபலங்களும் தான் அதிகம்.வேகாத வெயிலில் கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில், அரசியல் கட்சிகள் அவிழ்த்து விட்ட புளுகுமூட்டையை அள்ளவே, இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.ஏழைகளின் ஓட்டுக்கு, 200, 300 ரூபாய் விலை வைத்து, ரகசியமாக அவற்றை வினியோகித்த கட்சிகள்; அதற்காக, கோடிக்கணக்கில் பதுக்கிய தலைவர்கள்; வருமான வரித்துறையினர் கண்ணில் எண்ணெய் ஊற்றி, பணம் பதுக்கிய அரசியல் பிரமுகர்கள் போன்றவர்களை,இந்த தேர்தலில் காண முடிந்தது.
வாக்காளர்களில் குறிப்பிட்ட சிலர், 'கிடைத்தவரை லாபம்... வாங்க வேண்டியதை வாங்கியாச்சு; போட வேண்டியதைப் போட்டு விடுவோம்' என்ற ரீதியில், பொறுப்பற்ற முறையில், ஓட்டுப்பதிவு செய்ததையும் காண முடிந்தது.அது போல, ஓட்டுக்குப் பணம் கொடுக்க, கட்சிகள் மேற்கொண்ட யுக்திகள், அந்த பணத்தை வினியோகிக்க, கட்சி பிரமுகர்கள் காட்டிய ஆர்வம், அதில், 100, 200 ரூபாயை பெற்று, ஆட்டம் போட்ட, 'குடி'மகன்கள் என, இந்த தேர்தல் களம் வித்தியாசமாகவே இருந்தது.இதற்காகவா, தேர்தல் நடக்கிறது... பொறுப்பற்றோரை தேர்ந்தெடுப்பதற்காகவா, இத்தனை கோடி ரூபாயை இந்தியா இழக்கிறது என்ற கேள்வி, என் நெஞ்சில் ஆழமாக எழுந்தது.ஓட்டுகளை பிரிப்பதற்காக, கிராமங்களில், சகோதரர்களாக வாழ்பவர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, குளிர் காய்ந்த அரசியல் தலைவர்கள்; அவர்களை நம்பிய கட்சியினர் என, இந்த தேர்தல் களம், ரணகளமாகவும் காட்சி அளித்தது.
ஓட்டுப்பதிவின் போது தான், எத்தனை களேபரங்கள்... இப்படி எல்லாம், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும், வெனிசுலா, நேபாளம் போன்ற வளரும் நாடுகளிலும் இல்லையே... நம் நாட்டில் மட்டும் ஏன் இப்படி என, எனக்கு எண்ணம் தோன்றியது.வீட்டுக்கு வீடு, 'பூத் ஸ்லிப்' வினியோகிக்க, தேர்தல் அலுவலர்கள் இருந்த போதும், அரசியல் கட்சியினர், அந்தந்த பகுதி குண்டர்களுடன், தெரு தெருவாக, யார் நமக்கு ஓட்டு போடுவர்... யாரெல்லாம் போட மாட்டார்கள் என, சுற்றி வந்ததை காண முடிந்தது.ஒவ்வொரு ஓட்டுச் சாவடி அருகிலும், நான்கைந்து அரசியல் கட்சிகளின் தொண்டர் குழுக்கள் முகாமிட்டிருந்தன. அவர்களை தவிர்த்து, பூத் ஏஜன்ட் என்ற பெயரில், கொஞ்சம் பேர், ஓட்டுச் சாவடிகளுக்குள் அமர்ந்திருந்து, யார் ஓட்டு போட வருகின்றனர் என்பதை, 'கணக்கிட்டு' கொண்டிருந்தனர்.முதல் நாள் துவங்கி, ஓட்டுப்பதிவு நாளின் நள்ளிரவு வரை, ஒவ்வொரு நிமிடமும், தேர்தல் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்த அவமானங்கள், அச்சறுத்தல்கள் தான் எத்தனை... அரசியல் கட்சியினரின் பிடிக்குள் சிக்கி இருந்ததைப் போன்ற நிலையை, பல ஊழியர்கள் அன்று தான் முழுமையாக அனுபவித்தனர்.அருமையான ஜனநாயக நடைமுறையான தேர்தலை, ஏன் இவ்வளவு சிக்கலாக, பிரச்னைக்குரியதாக இருக்க வேண்டும்.
எளிய முறையில் தேர்தலை நடத்தலாமே என்ற எண்ணம் எனக்கு மேலோங்குகிறது.பிரசாரங்களுக்கு பல கோடி ரூபாய் செலவு; நியாயமாக தேர்தலை நடத்த ஏராளமான கெடுபிடிகள்; அதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக வர்த்தகர்கள், பொதுஜனங்கள் சந்தித்த பிரச்னைகள்; தேர்தல் நாளில் ஏராளமான, 'டென்ஷன்' என, இவ்வளவு கெடுபிடிகள் தேவை தானா? இவ்வாறு இல்லாமல், தேர்தலை நடத்த முடியாதா?ஜனநாயகம் காப்பாற்றப்பட, எதிர்காலத்தில் தேர்தல் வன்முறை இல்லாமல் போக, புதிய முறையில் தேர்தலை நடத்துவது, காலத்தின் அவசியம். அந்த பொறுப்பை, சமூகத்தின் அனைத்து தரப்பினரும், முன்னின்று யோசித்து மேற்கொள்ள வேண்டும்.அதற்காக, இப்போதே, இத்தகைய தேர்தல் முறை வேண்டாம் என, சொல்லவில்லை. மாறாக, படிப்படியாக புதிய முறைக்குள் செல்ல வேண்டும். களேபரங்கள் இல்லாத, கட்டுக்கதைகளுக்கு இடமளிக்காத, அமைதியான, சமரசமான தேர்தலை நடத்த வேண்டும்.இந்திய ஜனநாயகம், இதனால் உலகின் கலங்கரை விளக்கமாக விளங்க வேண்டும் என்பது தான், என் எண்ணம்.தொடர்புக்கு: 94447 92188இ-மெயில்:rvsh76@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE