ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல் ஒருவர் பலி; 53 பேர் காயம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல் ஒருவர் பலி; 53 பேர் காயம்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (1)
ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல் ஒருவர் பலி; 53 பேர் காயம்

உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை அருகே, நான்கு ஆம்னி பஸ்கள், அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஒருவர் பலியானார்; 53 பேர் காயம் அடைந்தனர்;திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ், நேற்று அதிகாலை, 4:௦௦ மணிக்கு, உளுந்துார்பேட்டை - விருத்தாசலம் சாலையில், பயணித்தது. மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில், எதிரே பஸ் வந்ததால், ஆம்னி பஸ்சை திடீரென பிரேக் போட்டு, டிரைவர் நிறுத்தினார்.இதனால், பின் தொடர்ந்து வந்த, மூன்று ஆம்னி பஸ்கள், மினி வேன், ஒன்றன் பின், ஒன்றாக அடுத்தடுத்து மோதின. இதில். மூன்றாவதாக மோதிய பஸ்சுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று பஸ்களில் இருந்த பயணிகளில், 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.நெடுஞ்சாலை ரோந்து பிரிவு மற்றும் உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.மூன்றாவதாக மோதிய, ஆம்னி பஸ்சில் பயணித்த, சென்னை மாத்துாரைச் சேர்ந்த பால்ராஜ், 50, என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சம்பவ இடத்தில் விசாரரண நடத்திய, எஸ்.பி., ஜெயக்குமார், 'பயணியர் நடந்து செல்லும் சர்வீஸ் சாலையில், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.சர்வீஸ் சாலையில் அதற்கான தடுப்புகளை வைக்க வேண்டும்' என, 'நகாய்' ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

முழுமை பெறாத சாலைஉளுந்துார்பேட்டை - விருத்தாசலம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, சர்வீஸ் சாலை பணி நடைபெறுகிறது. பணி முழுமை பெறாத நிலையில், அவ்வழியே வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்றும் அது போன்றே விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, முழுமை பெறாத சாலையில் வாகனங்கள் செல்வதை தடுக்கவும், மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X