கொழும்பு : இலங்கை மக்கள் பீதியடைய வேண்டாம் ; புரளிகளை நம்பவேண்டாம் ; நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளிநாட்டிலிருந்தபடியே பேட்டியளித்துள்ளார்.
இலங்கையில், ஈஸ்டர் திருநாள் வழிபாடுகள் நடந்துகொண்டிருந்த தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று மொத்தம் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் 150 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நடவடிக்கை
இந்த மோசமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா செய்தியாளர்களிடம் பேசுகையில்,இலங்கை அதிபர் மைத்ரிபால் சிறிசேனா கூறுகையில், இந்த சதி செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். வழிபாட்டு தலங்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியையும் வேதனையையம் அளிக்கிறது. இந்தநேரத்தில் வதந்திகள், பொய் செய்திகளை நம்பாமல், மக்கள் அனைவரும் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

உத்தரவு
இதனிடையே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அமைப்புகள் மற்றும் ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஒற்றுமையுடன்
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகையில், மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இந்த மோசமான நேரத்தில் இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் வலிமையாகவும் இருக்க வேண்டும். தேவையற்ற செய்திகள் மற்றும் யூகங்களை பரப்ப வேண்டாம். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

தண்டனை
இலங்கை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான ராஜபக்சே கூறுகையில், புனித நாளில் குண்டுவெடிப்பு நடந்தது மோசமான சம்பவம். இதற்கு பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளது. இது போன்ற வன்முறை, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்களை பொறுத்து கொள்ள முடியாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மித்த குரலில் குரல் எழுப்புவோம். ஒற்றுமையாக இருப்போம் என்றார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE