பதிவு செய்த நாள் :
இலங்கை,எட்டு இடங்களில், தொடர்,குண்டு வெடிப்பு

கொழும்பு:அண்டை நாடான இலங்கையில், 'ஈஸ்டர்' தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 'இலங்கை வரலாற்றில், பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இப்படியொரு, தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை' என, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை, முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவர்களின் பண்டிகை தினமான, ஈஸ்டர், உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அண்டை நாடான, இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், சிறப்பு வழிபாடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரார்த்தனை


மக்கள், கூட்டம் கூட்டமாக, குடும்பத்துடன் வந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.தலைநகர் கொழும்பில் உள்ள, புனித அந்தோணியார் தேவாலயம், கடற்கரை நகரமான, நீர்கொழும்பில் உள்ள, புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள, சீயோன் தேவாலயம் ஆகியவற்றில், காலை, 8:45 மணியளவில், அதிபயங்கர குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. இதனால், தேவாலய மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. தேவாலயங்கள் முழுவதும், ரத்த வெள்ளமாக காட்சி அளித்தன.

பிரார்த்தனைக்கு வந்த மக்கள், ஆங்காங்கே உடல் சிதறி பலியாகி கிடந்தனர். எந்த பக்கம் திரும்பினாலும், அழுகுரல்கள் ஒலித்தன. படுகாயம் அடைந்தவர்கள், உதவி கேட்டு கதறினர். உயிர் பிழைத்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளை, அழைத்துக் கொண்டு, எந்த திசையில் ஓடுவது என, தெரியாமல், திகைத்து நின்றனர்.

திகைப்பு


இந்த குண்டு வெடிப்புகள் நடந்த சற்று நேரத்தில், கொழும்பு நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டல்களான ஷாங்ரிலா, சின்மோன் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய இடங்களில், சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.இந்த ஓட்டல்களில், இந்திய சுற்றுலா பயணியர் அதிக அளவில் தங்குவது வழக்கம். ஈஸ்டர் விடுமுறை என்பதால், வழக்கத்தை விட, சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இந்த பயங்கரத்துக்கு பின், கொழும்பு மிருகக்காட்சி சாலையின் எதிரே உள்ள கட்டடத்தில், ஏழாவது குண்டு வெடிப்பு நடந்தது; இதில், இரண்டு பேர் பலியாகினர். சிறிது நேரத்தில், கொழும்பின் வடக்கு புறநகர் பகுதியான ஒருகோடவட்டா என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு குடியிருப்பில் நுழைந்தபோது, அங்கே இருந்த பயங்கரவாதி, வெடிகுண்டை வெடிக்கச் செய்து, தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டான். இதில், மூன்று போலீசார் பலியாகினர்.

அடுத்தடுத்து நிகழ்ந்த, இந்த தொடர் குண்டு வெடிப்புகளில், 225 பேர் பலியாகி உள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, இலங்கை முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்று அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன; பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இலங்கை பொருளாதார சீர்திருத்த துறை அமைச்சர், ஹர்ஷா டி சில்வா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொழும்பு மருத்துவமனையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஒன்பது சுற்றுலா பயணியரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு, தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பலர் படுகாயம் அடைந்திருப்பதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த கொடூர தாக்குதல் களுக்கு, இதுவரை, எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்க வில்லை.

இது குறித்து, இலங்கை ராணுவ அமைச்சர், விஜயவர்தன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையின் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் களையும்,ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் செய்துள்ளனர். அவர்கள், தற்கொலைப் படை தாக்குதல்களையே நிகழ்த்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஏழு பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த பயங்கர தாக்குதல் குறித்து, இலங்கை அதிபர் சிறிசேன கூறியதாவது: சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல், அதிர்ச்சி அளிக்கிறது. நிலைமையை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:இது ஒரு கோழைத்தனமான செயல். இந்த நேரத்தில், இலங்கையில் உள்ள அனைவரும், ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த, அனைத்து பணிகளையும், அரசு செய்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான சண்டை, 2009ல் முடிவுக்கு வந்த பின், பெரிய வன்முறை சம்பவங்கள் எதுவுமின்றி, அந்நாடு அமைதியாக இருந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், அந்த மண்ணில் வெடிகுண்டு சத்தம் கேட்டதை அடுத்து, அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.அண்டை நாடுகளில் நடந்து வரும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள், இந்திய மக்களையும், அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்தி உள்ளதாக, பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையில், இதற்கு முன், பல்வேறு பயங்கரவாத தாக்குதல் களை, விடுதலைப்புலிகள் நடத்தியுள்ளனர். குறிப்பாக, அரசியல் தலைவர்கள் பலர், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.ஆனால், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்களை குறிவைத்து, ஒரே நேரத்தில், அடுத்தடுத்து, இது போன்ற பயங்கர தாக்குதல்கள், இதுவரை நடந்தது இல்லை என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த இக்கட்டான நேரத்தில், இலங்கைக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக இருக்கிறது.
-நரேந்திர மோடி பிரதமர்
இலங்கை நிலவரம் குறித்து, அந்நாட்டுக்கான இந்திய துாதருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அங்கு நடப்பவற்றை, மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
-சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சர், பா.ஜ.,

உயிர் தப்பிய ராதிகா!


இலங்கையில், சின்னமோன் கிராண்ட் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில், நேற்று காலை,வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இங்கு, தமிழ் திரைப்பட நடிகை யும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான, ராதிகா, நேற்று தங்கி இருந்தார். குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சில

நிமிடங்கள் முன், அவர் தன் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு புறப்பட்டதாக, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், அதிர்ச்சியுடன் தகவல் பதிவு செய்துள்ளார்.

தனுஷ்கோடியில் கண்காணிப்பு தீவிரம்


இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக, தமிழக கடற்கரை பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, நேற்று ராமேஸ்வரம் அருகே, மண்டபத்தில் உள்ள, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான, 'ஹோவர் கிராப்ட்' கப்பலில், வீரர்களும், மாநில மரைன் போலீசாரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.எச்சரித்த உளவுத்துறை!இலங்கையை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு, பல்வேறு தேவாலயங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, அந்த நாட்டு உளவுத்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா, கடந்த, 11ல், அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த எச்சரிக்கை, உதாசீனப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த கோர சம்பவம் நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவி எண்கள்!


இலங்கை வெடிகுண்டு விபத்தில், கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த, ரசீனா என்ற பெண் பலியாகி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் இலங்கை செல்வதால், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. எனவே, விபத்து குறித்து தகவல்கள் அறிய, இந்திய துாதரகம் சார்பில், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவல்கள் பெற விரும்புவோர், +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரித்த உளவுத்துறை!


இலங்கையை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு, பல்வேறு தேவாலயங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, அந்த நாட்டு உளவுத்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா, கடந்த, 11ல், அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த எச்சரிக்கை, உதாசீனப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த கோர சம்பவம் நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியர்கள் பலி


இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் - தெரிவித்து உள்ளார். பலியானோரில், லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக, அவர் கூறினார்.குண்டு வெடிப்பு சம்பவத்தில், சீனாவை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணியர் பலியாகி உள்ளதாக, இலங்கையில் உள்ள, சீன துாதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்


இலங்கையில் நடந்த, குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர் செல்வம்:


இலங்கை தேவாலயங்களில், ஈஸ்டர் விழாவை கொண்டாட கூடியிருந்த மக்கள் மீது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அறிந்து, வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.தமிழ் கிறிஸ்தவர்கள், அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, துயரத்தை தாங்கும் சக்தியை, இறைவன் அருள வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலமடைய, இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:


ஈஸ்டர் நாளில், திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல், கடும் கண்டனத்திற்குரியது. மத சிறுபான்மையினரின் மனதில், நிரந்தர பயத்தை உருவாக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக, இலங்கை அரசு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலின் பின்னணியில் உள்ள, மதவெறி, இனவெறி உள்ளிட்ட, எந்த சக்திகளாக இருந்தாலும், உடனடியாக அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பை போதித்த இயேசு, உயிர்த்தெழுந்த நாளில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பது, வேதனை அளிக்கிறது.காயமடைந்தவர்களுக்கு, தரமான மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும். குண்டு வெடித்த பகுதிகளில் உள்ள, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை, பாதுகாப்பாக மீட்டு, தாய்நாட்டிற்கு அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து, அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கோழைத்தனமானவை. இத்தகைய நடவடிக்கைகளை, எதன் பெயராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற காட்டுமிராண்டித் தனங்களுக்கு, முடிவு கட்டியே தீர வேண்டும்.

-வி.சி., தலைவர், திருமாவளவன்


ஐ.நா., மனித உரிமை கவுன்சில் வழியே, எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு, இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகள் துணையுடன், அதிகாரத்தை கைப்பற்ற, பேரினவாத சக்திகள் முனைந்து உள்ளன.இதை, சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கக்கூடாது. உடனடியாக இலங்கை பிரச்னையில், ஐ.நா., தலையிட்டு, அங்குள்ள, மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ


பயங்கரவாதத்தில் ஈடுபட்ட, கொலை பாதகர்களை கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும். காயமடைந் தோரை காப்பாற்ற, உரிய நடவடிக்கையை, இலங்கை அரசு எடுக்க வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை:


இலங்கையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது துரதிருஷ்டவசமானது. எந்த நாடாக இருந்தாலும், கலவரம் கூடாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-201920:44:43 IST Report Abuse

ஆப்புஇலங்கையிலிருந்து இன்னொரு ரோஹிங்கியா மாதிரி அகதிகள் இங்கே வரப்போறாங்க...வரவேற்போம்.

Rate this:
Athany -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201917:18:45 IST Report Abuse

Athany

Rate this:
Raja -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201917:17:36 IST Report Abuse

Raja

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X