பதிவு செய்த நாள் :
இலங்கை,குண்டு வெடிப்பு,பலி எண்ணிக்கை,அதிகரிப்பு

புதுடில்லி:இலங்கையில் நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலில் உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் பண்டிகையான 'ஈஸ்டர்' உலகம் முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அண்டை நாடான இலங்கையில் உள்ள தேவாலயங்களிலும், இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து விடுமுறையை கொண்டாட வந்திருந்த வெளிநாட்டு மக்களும் இந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்றனர்.அப்போது, தலைநகர் கொழும்பில் உள்ள புனித அந்தோனியர் தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதையடுத்து, கொழும்பு மிருககாட்சி சாலைக்கு எதிரே உள்ள கட்டடத்திலும் கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும் குண்டுகள் வெடித்தன. அடுத்தடுத்து நடந்த இந்த எட்டு குண்டு வெடிப்புகளிலும் நேற்று முன்தினம் மட்டும் 225 பேர் பலியாகினர். நுாற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
இலங்கை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் பலர் நேற்று உயிரிழந்தனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 500க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 'இவர்களில் பலரது நிலைகவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்புக்கும் பொறுப்பேற்காத நிலையில் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னா கூறியதாவது: குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், தீவிர விசாரணை நடந்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு, இந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை படை தாக்குதல்களே. மனித வெடிகுண்டாக ஏழு பேர் செயல்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள் தான். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இலங்கை அதிபர் சிறிசேன தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடந்தது. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை மேலும் சில நாட்களுக்கு தொடர்வது என, முடிவு செய்யப்பட்டது. தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய, மூன்று உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தாக்குதல் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புகளில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசு 1 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு அறிவித்துள்ளது. இதற்கிடையே கொழும்பில் கொச்சிகடை என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை பாதுகாப்பு படையினர் நேற்று சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால் பெரிய அசம்பாவிதமும் உயிர்ச் சேதங்களும்

தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இலங்கை பார்லிமென்ட் இன்று அவசரமாக கூடி தாக்குதல் சம்பவம் குறித்து விவாதிக்கவுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு தகவல் தெரியாதா


இலங்கை சுகாதார துறை அமைச்சர் சேனரத்னா கூறியதாவது:ஏப்ரல் 11க்கு முன் இலங்கையில் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம் என தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்திருந்தது. அதேபோல் சர்வதேச புலனாய்வு அமைப்பும் 4ம் தேதி இதுபோன்ற ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. ஆனால் போலீசார் போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. இதற்கு பொறுப்பேற்று இலங்கை போலீஸ் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர்கள் கொழும்பு பனடுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று மாதங்களாக தங்கியிருந்த தகவலும் தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகையில் ''புலனாய்வு அமைப்புகள் எச்சரித்தும் போலீசார் போதிய நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரணை நடத்தப்படும்'' என்றார். இதற்கிடையே 'புலனாய்வு அமைப்புகளின் எச்சரிக்கை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் போலீஸ் உயரதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை' என இலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலோர பகுதிகளில் கண்காணிப்பு


இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, நம் நாட்டில், கடலோர காவல் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மண்டம், காரைக்கால், துாத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள கடலோர காவல் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள், கடலோர பகுதிக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்களும், தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர, தென் மாநிலங்கள் முழுவதும், கண்காணிப்பும், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karnan - madurai,இந்தியா
23-ஏப்-201920:47:51 IST Report Abuse

P Karnanமதத்தின் பேரில் கொலை தாக்குதல் நடத்திய அமைப்பை மிகவும் கொடூர தீவிரவாத அமைப்பாக கருதி அவர்களுக்கு துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு எந்த நாடு சப்போர்ட் பண்ணினாலும் அவர்களையும் சர்வேதேச நீதி மன்றத்தில் கொண்டு சென்று தனிமை படுத்தவேண்டும்

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
23-ஏப்-201916:35:31 IST Report Abuse

dandyஎரியும் கொள்ளியை எடுத்து தலையை சொரிந்த வேலையை செய்து விட்டார்கள் இந்த மார்க்க ரசிகர்கள் ..முதலில் தேவாலய தாக்குதல் உலக அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் ...இரண்டாவது மேல் நாட்டு உல்லாச பிரயாணிகளின் மரணம் இதில் சில அமெரிக்க பிரஜைகள் ..அமெரிக்க பிரஜைகள் கொல்ல படுவதை அமெரிக்கா சகித்து கொள்வதில்லை கடைசியில் கண்டு பிடித்த தொலை பேசி ...பாவனை ...இன்று இந்த தொலை பேசிகளை வைத்து பயன்பாட்டாளரை சில மணி நேரங்களில் கண்டு பிடிக்கலாம் இனி என்ன மரண ஓலம் தான்

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
23-ஏப்-201915:34:26 IST Report Abuse

Mohamed Ilyas

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X