பொது செய்தி

தமிழ்நாடு

நூல்களே நல்ல நண்பர்கள்! இன்று உலக புத்தகம், காப்புரிமை தினம்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 நூல்களே நல்ல நண்பர்கள்! இன்று உலக புத்தகம், காப்புரிமை தினம்

எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசமே எல்லையில்லாத மகிழ்ச்சிஅடையும் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இந்தச் சமூகத்தின் திறவுகோல் அறிவார்ந்த எழுத்தாளர்களிடம் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவம் நம் நுால்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் உண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது.


சமூகத்தை புரட்டும் நெம்புகோல்


உலகின் தலைசிறந்த நுால்கள் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் கருவியாக பார்க்கப்படுகிறது. நுால்கள் என்பதை நாம் பெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக் கூடாது. அது சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல்கள் என உணர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான யுனெஸ்கோ 1995 ஏப்., 23ம் தேதியை 'உலக புத்தகம், காப்புரிமை தினமாக' அறிவித்தது.எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பு, மறைவு தினமும் ஏப்., 23 என்பது அந்த நாளின் சிறப்பு. ஒவ்வொரு நாளும் நாம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நாம் படிப்பை மேம்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் நமக்கு பிடித்த நுால்களை எளிய முறையில் படிக்க வேண்டும். பெரிய மேதைகள் தங்களுக்கு துணையாக கொண்டிருந்தது நுால்களையே.


புத்தக திருவிழாக்கள்இன்றைய நவீன உலகில் நுால்களை படிப்பது குறைந்து வருகிறது. ஆனால் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அதிகமாக உருவாகி விட்டனர் என்பதை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் உறுதி செய்கிறது. புத்தகங்கள் படிப்பை இன்றைய இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்ல புத்தகத் திருவிழாக்கள் உதவி செய்கின்றன. நவீன ஊடகங்கள் பெருகிய பின்பும் நுால்கள் மின்னாக்கம் செய்யப்பட்ட பின்னரும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் படிக்கும் ரசனை, சுகம் அனுபவிப்பவருக்கே உணர முடியும்.ஒரு நூலகம் திறக்கப்படும் போது நுாறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற பிரபல வாசகத்தை உதிர்த்தவர் முதல் பிரதமர் நேரு. சிறையிலிருந்த அவர் தன் மகளான இந்திராவுக்கு எழுதிய கடிதங்களே இந்தியாவின் அன்றைய வரலாறு கூறிய “டிஸ்கவரி ஆப் இந்தியா” ஆகும்.
எட்டையபுர அரசருடன் சென்னைக்கு சென்று திரும்பி வந்த பாரதியார் மூடை மூடையாக புத்தகங்கள் வாங்கி வந்தார் என்பது அவனுடைய வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. இரவல் வாங்கிய புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகிவிட்ட காரணத்தால் அதை ஈடு செய்யும் விதமாக மாட்டுத் தொழுவத்திலே வேலை பார்த்தவரே முன்னாள் அமெரிக்க ஐனாதிபதி ஆபிரகாம் லிங்கன். சட்ட மேதை அம்பேத்கர் குறைந்தது 18 மணிநேரம் ஒரு நாளில் புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டவர்.


வாழ்வின் மிகச்சிறந்த துணைஅறிவை விரிவு செய் என்பார் பாரதியார். எட்டையபுர அரண்மனையில் ஒரு மிகப்பெரிய நுாலகம் பாரதியரால் உருவாக்கப்பட்டது. எட்டையபுரம் மன்னருடன் பாரதியாருக்கு பல இடங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவருடைய குணங்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தது புத்தகம் வாங்க பாரதியார் பணம் கேட்கும் போதெல்லாம் முகமலர்ச்சியோடு பணம் தந்து உதவியதே ஆகும்.'என்னை ஆளில்லாத தீவில் வேண்டுமானாலும் கொண்டுபோய் விடுங்கள். படிப்பதற்கு நான் விரும்பும் சில நல்ல நுால்களை மட்டும் கொடுத்து விடுங்கள்' என வெளி நாட்டு அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். நம் வாழ்வின் மிகச்சிறந்த துணையாக எப்போதும் நம்முடன் இருக்க வேண்டியது நல்ல புத்தகங்களே. ஒவ்வொரு முறையும் நம் மனம் சோர்வடையும் போதும் நமக்கு துணையாக இருப்பது நுால்கள் தான். சில புத்தகங்கள் எழுத்தாளர்களுடைய பல ஆண்டு தவம். அவர்களுடைய அனுபவம், நம்பிக்கையை நம்மிடையே விட்டுச் செல்வதை நாம் ஏற்க வேண்டும். படிப்பதை நேசிக்கும் பலரும் இன்று இருக்கிறார்கள் என்பதையே ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் புத்தகங்களின் விற்பனை அதிகரிப்பதை வைத்து அறியலாம்.


அப்துல் கலாம் கனவு


கற்க, கசடறக் கற்க என குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். படிக்க வேண்டும் என்பதை தாண்டி நல்லதை பகுத்து அராய்ந்து படிக்க வேண்டும் என்ற திருவள்ளுவர் தான் நாம் அனைவருக்கும் அடிப்படையானவர். ஒரு குறள் போதும் என் வாழ்வு முழுக்க வாழ்வேன் என்பார் முன்னாள் ஐனாதிபதி அப்துல்கலாம். அவர் திருக்குறள், பாரதியார் கவிதைகளை நேசித்தார். மாணவர்களிடம் வீட்டில் சிறிய நுாலகம் அமைய வேண்டும் என்றும் கூறியவர்.'நுால்களை படிப்பது ஒருவரை எப்போதும் தயாரான நிலையிலேயே வைத்திருக்கிறது' என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற அறிஞர். பல அறிஞர்களின் அனுபவங்கள் நம்மைச் சரியான வழிக்கு இட்டுச் செல்லும். வாழ்வில் எத்தகைய ஆபத்தான சூழல்களையும் ஒரு நல்ல புத்தகத்தோடு கடந்து விடலாம்.'காட்டுமிராண்டித்தனமான நாடுகளைக்காட்டிலும் மற்ற நாடுகள் எல்லாம் புத்தகங்களால் ஆளப்படுகின்றன' என்ற பேகனின் கூற்றை உண்மையாக்கும் வரலாற்றுச் சம்பவங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நுாலகம் தீயிட்டு எரிக்கப்பட்டதும் புத்தகங்கள் மேலிருந்த அச்சம் காரணமாகவே என்பதை உணர முடியும். அரண்மனை நுாலகத்தில் ஏராளமான நுால்களைச் சேகரித்து வைத்ததாலே அக்பர் மிகச்சிறந்த சான்றோராக விளங்கினார்.


புத்தகங்களுக்கு நன்றி சொல்லுங்கள்


கிரேக்க நாட்டு சிந்தனையாளர் சாக்ரடிஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்கு கொடுக்கப்படும் வரை படித்து கொண்டிருந்தார். துாக்கு மேடைக்குச் செல்லும் முதல் நாள் இரவு வரை படித்துக்கொண்டிருந்தார் பகத்சிங். லுாபியா நாட்டு புரட்சியாளர் உமர் முக்தர் தன் கழுத்தில் துாக்கு கயிறு மாட்டும் வரை படித்து கொண்டிருந்தார். லண்டன் நுாலகத்தில் 20 ஆண்டு படித்து ஆய்வு மேற்கொண்ட காரல்மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடமைச் சித்தாந்த தந்தையானார்.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் படிப்பதையும், படித்ததைப் பற்றி சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்த பண்பே அப்போதைய ரஷ்ய அதிபரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலின் நன்மதிப்பை பெற காரணமாக அமைந்தது.
இளமையில்தான் சிறந்த பண்புகளுக்கு நாம் பதியம் போட முடியும். அப்படிப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்று தான் புத்தகங்களை படிப்பது. இன்றைய இளம் தலைமுறைகள் நாம் கூறுவதை கேட்பதை விட நாம் செய்வதையே செய்ய விரும்புகின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி நாம் படிக்க துவங்கினால் குழந்தைகளும் படிக்க துவங்குவர். ஒவ்வொரு வரும் சராசரியாக ஓராண்டில் 2000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று சர்வதேச பண்பாட்டு மையம் தெரிவிக்கிறது.சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பு, அட்டைப்படம், தலைப்பில் இல்லை. அது படிப்பவரின் மனதிலே கலந்து ஆள வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடுங்கள். ஏதேனும் ஒரு புத்தகம் உங்களை மாற்றலாம். அது எந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டடிருந்தாலும் அது உங்களுக்காக காத்திருக்கும். அதைத் தேடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு அனைத்துமே படிக்கும் புத்தங்கள் தந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது. நல்ல புத்தகங்களுக்கும் அதை எழுதிய எழுத்தாளருக்கும் நன்றி கூறுங்கள். முடிந்தால் அந்த நல்ல நுால்களை நண்பர்கள், உறவினர்களுக்கு படிக்க பரிந்துரை செய்யுங்கள். வெடிகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்; புத்தகங்கள் புரட்டும்போதெல்லாம் வெடிக்கும். எனவே நுால்களை படிப்பதை சுவாசிப்போம்.-
நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்நாமக்கல். 99941 71074

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deva Indiran - Doha,கத்தார்
23-ஏப்-201914:39:16 IST Report Abuse
Deva Indiran உண்மை அய்யா....நூல் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை செய்தது.....இப்பொது எனக்கு நேரம் இல்லாததால் நூல் படிக்க நேரம் இல்லாமல் போயி விட்டது ...ஆனால் வரும் காலங்களில் நான் நூல்களை படிப்பதை தொடருவேன்.....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஏப்-201909:26:51 IST Report Abuse
Bhaskaran நாளந்தா பல்கலைக்கழக ஏடுகளை மூன்றுமாதத்துக்குமேல் எரித்தார்களாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X