புதுடில்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக, முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகாரில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு எதிராக, பொய் வழக்கு ஜோடிக்க, 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக, வழக்கறிஞர் ஒருவர் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்றார், நீதிபதி, ரஞ்சன் கோகோய். இந்தாண்டு, நவம்பரில் அவர் ஓய்வு பெற உள்ளார்.
அதிர்ச்சி
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வீட்டில், இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண், அவர் மீது சமீபத்தில், பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின், 22 நீதிபதிகள் வீடுகளுக்கு, அவர், மனு அனுப்பினார்.இது தொடர்பான செய்தியை, ஆங்கில இணையதள செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. இது, அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி,
ரஞ்சன் கோகோய் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.அப்போது, 'இது பொய் குற்றச்சாட்டு. முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், மிரட்டும் வகையில், இந்த பொய் புகார் கூறப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மிகப் பெரிய சக்தி உள்ளது.'நீதித் துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது' என, நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார்.
மனு
'இது போன்ற புகார்கள் குறித்து விசாரித்து, நியாயமான மற்றும் நேர்மையான முறையில் செய்திகள் வெளியிட வேண்டும்' என, அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது.இந்த பரபரப்பு சம்பவங்கள் அடங்குவதற்குள், வழக்கறிஞர், உத்சவ் சிங் பெய்ன்ஸ் என்பவர்,
உச்ச நீதிமன்றத்தில், ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளார்.
அதில், ரஞ்சன் கோகோய் மீது பொய் வழக்கு தொடருவதற்கு, 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது, மேலும் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் சார்பில், அஜய் என்பவர் என்னை தொடர்பு கொண்டு, 'தலைமை நீதிபதி மீது, ஒரு பொய் புகாரை ஜோடிக்க வேண்டும். இது குறித்து, பத்திரிகையாளர் கள் சந்திப்பையும் நடத்த வேண்டும்' என, கூறினார். இதற்காக, முதலில், 50 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். ஆனால், நான் மறுத்து விட்டேன். அதைத் தொடர்ந்து, ரூ.1.50 கோடி வரை பேரம் பேசினார்.
குறிப்பிட்ட சில வர்த்தக
நிறுவனங்கள், இதன் பின்னணியில் உள்ளன. இது போன்ற பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்வதற்கென, சில புரோக்கர்கள் உள்ளனர். மேலும், நீதிமன்றத்தில், சாதகமான தீர்ப்பு வருவதற்காகவும், இது போன்ற புரோக்கர்கள் செயல்பட்டுவருகின்றனர். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இன்றுஇந்த வழக்கு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நரிமன், தீபக் குப்தா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், உத்சவ் சிங் பெய்ன்ஸ் ஆஜராகவில்லை. அதையடுத்து, இன்று காலை, 10:30 மணியளவில், விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நேரில் ஆஜராகி, தன் மனு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி, வழக்கறிஞர், பெய்ன்ஸ்க்கு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், பொய் வழக்கு ஜோடிக்க, 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (53)
Reply
Reply
Reply