பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி இழுபறி !| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி இழுபறி !

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019
  பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி இழுபறி !

உடுமலை:பி.ஏ.பி., பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள பிரதான கால்வாயில், முதல் ஆறு கி.மீ., துாரத்திற்கு அடிக்கடி ஏற்படும் மண் சரிவு, கால்வாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டம் ஆய்வுடன் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மழை காலம் துவங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு, 124 கி.மீ., துாரம் உள்ள பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு வழங்கப்படுகிறது.பிரதான கால்வாயில், வினாடிக்கு, 1,150 கன அடி வரை பாசனத்திற்கு நீர் செல்கிறது. அணையிலிருந்து 1.6 கி.மீ., துாரத்திலிருந்து, 7.1 கி.மீ., துாரம் வரை, ஏறத்தாழ, ஆறு கி.மீ., துாரம் கால்வாயில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.உடுமலை கால்வாய் பிரியும் பகுதி முதல், தீபாலபட்டி கருப்பராயன் கோவில் வரை, மண் கரிசல் மண்ணாக உள்ளதால், கால்வாய் கரைக்கு சிலாப் ஒட்டினாலும், கான்கிரீட் அமைத்தாலும், மண் இளகி, சரிவு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்து விடும் போதும், அபரிமிதமான நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. அதிலும், மழை பெய்தால் கரிசல் மண் என்பதால், கால்வாய் உடைப்பு ஏற்பட்டு நீர் விரயம், பாசன நீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, முதல் மண்டல பாசன காலத்தில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, நிரந்தர தீர்வு காண திட்டமிடப்பட்டது.இதற்காக, தொழில் நுட்ப வல்லுனர் குழு மூலம், ஆறு கி.மீ., துாரத்திலும் உள்ள மண் மாதிரிகள், போர்வெல் அமைத்து சேகரிக்கப்பட்டது. உடைப்பு ஏற்படுவதை தடுக்க விரிவான ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு அடிப்படையில், 'ஜியோ சின்தெடிக்' முறையில் கரை அமைக்க பரிந்துரை செய்தது. இதில், செயற்கை மண் அடுக்குகள் உருவாக்குதல், மணல் மூட்டைகள், பிளாஸ்டிக் தடுப்பு, கான்கிரீட் அமைத்தல் என பணிகள் மேற்கொள்ள, 48 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஒரு ஆண்டாகியும் பிரதானக்கால்வாய் உடைப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.தற்போது கோடை மழையும், அடுத்து தென் மேற்கு பருவ மழையும் துவங்க உள்ளதால், பிரதானக்கால்வாய் உடைப்பு அபாயம் உள்ளது.
நிதி வந்ததும் பணிகள் நடக்கும்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மண் உறுதியில்லாததால், அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. நீர்க்கசிவும் அதிகரித்து வருகிறது. 'ஜியோ சின்தெடிக்' முறையில் உடைப்பை சரி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இது வரை நிதி ஒதுக்கவில்லை. நிதி பெற்று பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X