தஞ்சாவூர், தெரு விளக்கில் படித்து, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு, தஞ்சை கலெக்டர், தன் சொந்த செலவில், இரு சோலார் விளக்கும், 10 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி கணேசனின், மகள் சஹானா, 17. இவர், பிளஸ் 2வில், 600க்கு, 524 மதிப்பெண் எடுத்து, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மின்சாரமே பார்த்திராத கூரை வீடு, கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு என்ற நிலையிலும், தெருவிளக்கில் படித்த சஹானா, அதிக மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளதால், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.போதிய பணம் இல்லாததால், மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில், மாணவி சஹானா இருப்பது குறித்து, கடந்த, 25ல், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, பலரும் மாணவிக்கு உதவிகரம் நீட்டியுள்ளனர்.இந்நிலையில், தஞ்சாவூர் கலெக்டர், அண்ணா துரை, சஹானாவின் குடிசை வீட்டுக்கு, தன் சொந்த செலவில், சோலார் விளக்கு இரண்டு, அமைத்து கொடுத்துள்ளார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றால், மேலும் உதவி கள் வழங்கவும் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து மாணவி சஹானா கூறியதாவது:பலரும், தேவையான உதவிகளை செய்கிறோம் என, கூறி வருகின்றனர். டாக்டராக வேண்டும் என்பது, என் கனவு. இதற்காக, நீட் தேர்வுக்கான பயிற்சியை, எங்கள் ஊரைச் சேர்ந்த கவுதமன் என்பவர் அளித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் என்னிடம், கலெக்டர், அண்ணாத்துரை போனில் பேசினார். நீட் தேர்விற்கான பயிற்சிக்கும் உதவுவதாக கூறியுள்ளார். கலெக்டர், தன் சொந்த பணத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இதை வெளியே சொல்ல வேண்டாம் என்றார். உடனே, சோலார் விளக்குகள் இரண்டை அமைத்து கொடுத்தார். முதல்வரிடமும் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE