தமிழக வணிக வரி துறை, 2018 - 19ல், நிர்ணயிக்கப்பட்ட, 84 ஆயிரம் கோடி ரூபாய் வரி இலக்கை எட்டியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுக்கு, வணிக வரித்துறை வழியாக, ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருவாய், அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு பின், இந்த வருவாய் மேலும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வணிக வரி துறையின், 2018 - 19ம் நிதியாண்டின் வருவாய் இலக்கு, 84 ஆயிரம் கோடி ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டி விட்டோம். வணிகர்களுக்கு வழங்க வேண்டிய திருப்பு தொகையை தவிர்த்து, நிகர வருவாய், 81 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஜி.எஸ்.டி., வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், பெட்ரோல், டீசலுக்கான, 'வாட்' வரி வாயிலாக, 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் கிடைத்துள்ளது. சரியான புள்ளி விபரங்கள் கிடைக்க தாமதமாகும்.
இது, 2017 - 18 மார்ச் வரையிலான மொத்த வருவாய், 73 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. வணிக வரி வருவாயின் ஒட்டுமொத்த வளர்ச்சி, 15 சதவீதமாகவும், ஜி.எஸ்.டி., வளர்ச்சி, 7.8 சதவீதமாகவும் உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.- நமது நிருபர் -