பிரியங்கா : காங்கிரசின் பி பிளான் !| Dinamalar

பிரியங்கா : காங்கிரசின் 'பி' பிளான் !'

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (28)

புதுடில்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது, வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் பிரியங்காவின் முடிவு. வழக்கம்போல, மோடியை எதிர்த்து போட்டியிடாதது பிரியங்காவின் சொந்த முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்னையை முடித்துவிட்டனர்.






ஆனால், பிரியங்கா போட்டியிடாததின் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. காங்., தலைவர் ராகுல் இந்த தேர்தலில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 20 சதவீதமான மக்களுக்கு மாதம் 6 ஆயிரம், ஆண்டுக்கு 72 ஆயிரம் மானியம் தரும் திட்டத்தை மக்களிடம் கொண்டுசெல்லவே பிரியங்காவை தேர்வு செய்துள்ளார். எனவே தான் போட்டியிடவில்லை என்று ஒரு தகவல் இருக்கிறது.


வலுவான நிலையில் மோடி


ஏனெனில், இந்த 'நியாய்' திட்டம் குறித்து ராகுல், 46 லட்சம் மக்களுக்கு நேரடியாக கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அது மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்போது அதே 46 லட்சம் மக்களுக்கு 'ஆடியோ' குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார் பிரியங்கா. அதிலும் குறிப்பாக, இந்திபேசும் இதயப்பகுதி மாநிலங்களான ஜார்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 4ம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப். 29 அன்று நடக்கிறது. இந்த ஆடியோ செய்தி இந்தப் பகுதிகளுக்குத் தான் பெரிதும் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், காங்கிரசின் சீனியர்கள் சிலரோ, வேறு ஒரு திட்டத்தை சொல்கிறார்கள். வாரணாசியில் மோடி வலுவான நிலையில் உள்ளார். எனவே, பிரியங்காவின் அரசியல் நுழைவு தோல்வியில் துவங்கிவிடக்கூடாது. எனவே, தற்போது ராகுல் அமேதி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வயநாட்டை தக்கவைத்துக்கொண்டு, அமேதியை ராஜினாமா செய்வார் ராகுல். அதில், பிரியங்காவை போட்டியிடச்செய்வார் என்கின்றனர். அதற்கு அவர்கள் ஏராளமான உதாரணங்களை வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டுகின்றனர்.எனினும், பிரியங்கா போட்டியிடுவதை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த காங்.,தொண்டர்களுக்கு சீனியர் தலைவர்கள் ஒரு விசயத்தை சுட்டிக்காட்டுகின்றனர். சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான சாம் பிட்ரோடா, பிரியங்கா போட்டியிடாதது குறித்து, ''இது முழுக்க முழுக்க பிரியங்காவின் முடிவு'' என்கிறார்.






வெற்றி, தோல்வி வரலாறு


ஆனால், மூத்த பத்திரிகையாளர்கள் சிலரோ, பிரியங்காவின் அரசியல் பிரவேசம் தோல்வியில் தொடங்ககூடாது என்பதற்காகவே ராகுலும், சோனியாவும் வாரணாசியில் பிரியங்கா போட்டியிடுவதை அனுமதிக்கவில்லை என்கின்றனர். அதற்கு அவர்கள், 1962ல் மிகப்பெரிய சோசலிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியா, நேருவிடம் மூன்றில் ஒருபங்கு ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோற்றுப்போனதையும், காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.கே.பாட்டில், 1967 ல் மும்பை தெற்கு தொகுதியில்ஜார்ஜ் பெர்ணாண்டசால் தோற்கடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், 1971, ரேபரேலி தொகுதியில் இந்திராவால் தோற்கடிக்கப்பட்டவர் ராஜ் நாராயணன். இதனையடுத்து 1977 ல் ராஜ்நாராயணன் , இந்திராவை தோற்கடித்தார். 1980 இந்திரா ராஜ்நாராயணனை தோற்கடித்தார்.
இதுபோன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ள பல்வேறு சம்பவங்களையும் நினைவு கூர்ந்துள்ள மூத்த பத்திரிகையாளர்கள், இவற்றை எல்லாம் பரிசீலித்தே, 'பிளான் பி' யை அதாவது 'தேர்தலுக்குப் பின் அமேதி' என்ற திட்டத்தை காங்கிரஸ் தலைமை வைத்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X