தவறான ஆண் நண்பர்களிடம் சிக்கிய பெண்கள் பற்றிய செய்தி, கலங்கச் செய்கிறது. தவறான பாலியல் உறவுக்கு அடிமையான, ஆண் நண்பர்களிடம் சிக்கிய இளைஞன், சமீபத்தில் கொலை செய்யப் பட்டான்.
அந்த செய்தி, இளைய சமுதாயம் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது.தம் சுகத்தை எல்லாம் சுருக்கி, தன் மகன் அல்லது மகளை, உயர்ந்த படிப்பு படிக்க வைத்து, அது, அவர்களுக்கு போதிய அறிவையும், சிந்திக்கும் திறனையும் கொடுக்கும் என, பெற்றோர் நம்புகின்றனர்.
'அவர்களுக்காக நாம் பட்ட சிரமங்கள், அவர்களுக்கு தெரியும்... வழி தவறி போக மாட்டார்கள்...' என, பெற்றோர் நம்புகின்றனர்.அந்த நம்பிக்கையால் தான், சென்னை, பெங்களூர், ஏன், வெளி
நாட்டுக்குக் கூட தங்கள் பிள்ளைகளை, அனுப்பி வைக்கின்றனர்.
நகரங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள், பெற்றோரிடமிருந்து ஏற்பட்ட பிரிவை, பாசப் பிரிவாகக் கருதாமல், பெற்றோரின் கண்டிப்பிலிருந்து கிடைத்த சுதந்திரமாக, கருதி விடுகின்றனர்.
அப்போது, தவறு எனும், குழிக்குள் வீழ்ந்து விடுகின்றனர். இதில், விதி விலக்காக இருக்கும் சில குழந்தைகள், பாதுகாப்பாக இருக்கின்றனர்.
பெற்றோரின் நம்பிக்கையை வீணடித்தவர்கள், தவறானவர்கள் மீதும், தவறான வழிகள் மீதும் நம்பிக்கை வைத்து, தங்கள் வாழ்வைத் தொலைத்து விடுகின்றனர்.'பக்கத்து வீட்டுக்காரனிடம் நெருங்கி பழகு; வேலியை எடுத்து விடாதே' என்கிறது, ஒரு பழமொழி. ஆனால், அது பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், அறிவைப் பயன்படுத்தாமல், நம்பிக்கையை, நயவஞ்சகர்கள் மீது வைத்து, சமுதாயச் சூழலை மட்டும், குற்றம் சொல்லி என்ன பயன்?
நல்லவர்களும், நயவஞ்சகர்களும் சேர்ந்த கலவை தான், இந்த சமுதாயம். நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து பழகும் பகுத்தறிவும், விழிப்புணர்வும், முழுக்க முழுக்க நம்முடையது.
'உன்னையே நீ அறிவாய்' என்றார், கிரேக்க தத்துவ ஞானி, சாக்ரடீஸ். நல்லவர்களை அடையாளம் கண்டு, நட்பு ஏற்படுத்திக் கொள்ளத் தான், மாபெரும் சக்தியை இயற்கை கொடுத்துள்ளது.
அதை கூர்மையாக வைத்துக் கொள்வதும், தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதும் நம் பொறுப்பு.
தவறான நம்பிக்கைகள் தான், பிரச்னைகளுக்கு காரணமாகின்றன.பாதுகாப்பாக முடிவெடுக்க, நம் அனுமானம் துணை செய்யவில்லை அல்லது நம் அனுபவ அறிவைப் பயன்படுத்துவதில் அவசரப்பட்டு விடுவோம். எது எப்படியோ... இழப்பைச் சந்தித்து விட்டோம் என்பது தான் உண்மை.
தங்கள் பிள்ளைகளின் அடக்கமான, அமைதியான நடவடிக்கைகளைப் பார்த்து, பழகிப் போன காரணத்தால், அவர்கள், தங்களுக்குத் தெரியாமல், புதிய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது பெற்றோருக்கு தெரிவதில்லை; அதை அந்த பிள்ளைகள், திறமையாக மறைத்துக் கொண்டிருப்பதும் புரிவதில்லை.அதனால் தான், எல்லாம் நடந்து முடிந்து விட்ட பிறகு கூட, அவர்களது மனம், அதை நம்ப மறுக்கிறது. 'அவனா செய்தான்... இருக்காது. அப்படி எதுவும் நடந்திருக்க முடியாது; பழிசுமத்துகின்றனர்' என, வாதிடுகின்றனர்.
பெண் குழந்தைகளிடம், பெற்றோரின் இந்த நம்பிக்கை, சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு. ஆனால், அதுவும், சமீப காலமாக பொய்த்துப் போய் விடுவது தான் வருத்தமளிக்கும் செய்தி.
ஆண்களில் ராமனும் உண்டு; ராவணனும் உண்டு. சீதை, பொய் மானைக் கண்டு ஏமாந்ததையும், இலக்குவன் இட்ட கோட்டைத் தாண்டியதையும், காரணமாக வைத்து, இங்கு யாரும், ராவணனின் செயலை நியாயப்படுத்துவதில்லை.
இலக்குவன் போல, சீதை, தன் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்திருந்தால், ராவணனால் ஆபத்து ஏற்பட்டிருக்காது என்பதைத் தான், வலியுறுத்த விரும்புகிறேன். பெண்கள் தங்களைச் சுற்றி தாங்களே பாதுகாப்பு வளையத்தை இட்டுக் கொள்வது நல்லது என்று தான் அறிவுறுத்துகிறேன்.
இன்று, பாதுகாப்பாக இருக்கும், அதிக விழுக்காடு பெண்கள், அப்படி தங்களைச் சுற்றி, பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான்.
சமூக வலைதளங்களில், முகத்தை மறைத்து, தன்னை ஒரு படித்த இளைஞனாக அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் தான் அதிகம். அந்த உண்மையை, பெண்கள் அறிய வேண்டும்.
ஆசை மேலிடும் போது, அறிவு மழுங்கி விடுகிறது. நட்பு எனும் புனிதமான பண்பிற்கே களங்கம் கற்பிக்கும், ஒரு சிலரை அடையாளம் கண்டு கொள்வது தான் அனுபவ அறிவு.
'பணத்திடம் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையான இடத்தில் பணத்தைப் போட்டு வை'
என்றார், ஒர் அறிஞர். ஆனால், நடப்பது என்ன... ஆசை காரணமாக, சிறிதும் சாத்தியமில்லாத, கவர்ச்சியான வார்த்தைகளை பலர் நம்புகின்றனர்; போலி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து, ஏமாறுகின்றனர்.
ஒரு சிலரை, வெளிநாட்டுக்கு அனுப்பி, நம்பிக்கை ஏற்படுத்தியவன், பலரிடம் பணத்தை
வாங்கிய பின், தலைமறைவாகிறான். அதன் பிறகு தான் தெரிகிறது, அவன் மோசடிப் பேர்வழி என்று!'உங்களுக்கு, ஐந்து கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது... வரி, ஒரு லட்ச ரூபாய் அனுப்பி வையுங்கள்' என, நமக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத முகவரியிலிருந்து கடிதம் வருகிறது.
சிறிதும் யோசிக்காமல் பணத்தை அனுப்பு வது, எழுத்தறிவில்லாத கிராமத்து நபர்களில்லை; மெத்தப் படித்த நகரவாசிகள் தான்!
ஏமாந்ததை வெளியில் சொன்னால் கேவலம் என, நினைத்து, பிறரையும் அந்த குழிக்குள் தள்ளி விடுகின்றனர், இந்த படித்த மேதாவிகள்.போட்ட கும்பிடையும், கொடுத்த பணத்தை யும் நம்பி, தேர்தலில் தவறான நபருக்கு ஓட்டளித்து விட்டு, அவர் வீடு முன் காத்துக் கிடக்கும் மக்களிடம், அந்த அரசியல்வியாதியின் உதவியாளர் கூட, முகத்தைப் பார்த்துப் பேசாமல், அலட்சியமாக பதிலளிக்கும் போது தான், அவர்களுக்கு விளங்குகிறது, 'தவறான நபர் மீது நம்பிக்கை வைத்து விட்டோம்' என்று!
ஊடகங்கள் செய்து கொண்டிருக்கும் மிகப் பெரிய சமூகப் பணி, இது போன்ற அவலங்களை அம்பலப்படுத்தி, சமூக விரோத சக்திகளை தோலுரித்துக் காட்டி, நல்லவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துவது தான்.'உன்னை ஒருவன், ஒரு முறை ஏமாற்றினால், அது உன் குற்றமில்லை; மறுமுறையும் ஏமாற்றினால், அது உன் குற்றமே' என்றார் அறிஞர் ஒருவர்.
அனுபவத்தில் பாடம் கற்றுக் கொள்பவன் சாதாரண மனிதன்; அடுத்தவனின் அனுபவத்தை பாடமாக எடுத்து, தன்னை நெறிப்படுத்திக் கொள்பவன் அறிவாளி.ஒவ்வொரு பாலியல் பலாத்கார குற்றம் பற்றிய செய்தியும், ஏமாந்து போகும், பலவீன நிலையில் இருக்கும் பெண்களுக்கும், பெண்களை போகப்பொருளாக நினைக்கும் ஆண் மிருகங்களுக்கும், பெற்றோருக்கும் எச்சரிக்கை.
நல்லவர்கள் மீதும், நல்லவை மீதும் நம்பிக்கை வைக்க, நம் அனுபவமும், அறிவும் துணை நிற்க வேண்டும். அதற்கு நாம் விழிப்புணர்வூட்டும் தகவல்களை விருப்பத்துடன் ஏற்று, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடையது மட்டுமின்றி, அடுத்தவரின் அனுபவங்களையும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நம் நம்பிக்கை, அறிவு சார்ந்ததாகவும், பயனளிப்பதாகவும் இருக்கும்!
தொடர்புக்கு
அலைபேசி: 9840488111
இ-மெயில்:spkaruna@gmail.com