புதுடில்லி : 'விரைவில், புதிய 20 ரூபாய் நோட்டுகள், வெளியிடப்பட உள்ளன' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.பணிமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புதிதாக, 2,000 ரூபாய் நோட்டும், 500 ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின், புதிய, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த வரிசையில், புதிய 20 ரூபாய் நோட்டுகள், அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான, மாதிரி நோட்டை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வெளிர் மஞ்சள் நிறத்தில், இந்த ரூபாய் நோட்டு வெளியிடப்படும். நோட்டில், ஒரு பக்கம், மகாத்மா காந்தி படமும், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும்.
காந்தி படத்தை ஒட்டி, உறுதிமொழி, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், அசோகர் தூண் படம் அச்சிடப்பட்டிருக்கும்.மறு பக்கம், எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றிருக்கும். மேலும், மற்ற ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல், தமிழ் உள்பட 15 மொழிகளில், 20 ரூபாய் என, அச்சிடப்பட்டிருக்கும். புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், பழைய, 20 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில் இருக்கும்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்