ஜனங்க குறைகேட்க மட்டும் தடுக்குதாம் ரூல்சு... | Dinamalar

ஜனங்க குறைகேட்க மட்டும் தடுக்குதாம் ரூல்சு...

Added : ஏப் 29, 2019
Share
சூலுாரில் நடக்கும் இடைத்தேர்தல் வேலைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில், திருச்சி ரோட்டில் பயணித்தனர்.ஒண்டிப்புதுார் பக்கம் போனதும், கார்களில் சென்றவர்களை ஓரங்கட்டி நிறுத்தி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அதை பார்த்த சித்ரா, ''என்ன, கொடுமை இது? சூலுார்ல நடக்குற இடைத்தேர்தலுக்கு நம்மூர்ல சோதனை
 ஜனங்க குறைகேட்க மட்டும் தடுக்குதாம் ரூல்சு...

சூலுாரில் நடக்கும் இடைத்தேர்தல் வேலைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில், திருச்சி ரோட்டில் பயணித்தனர்.ஒண்டிப்புதுார் பக்கம் போனதும், கார்களில் சென்றவர்களை ஓரங்கட்டி நிறுத்தி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அதை பார்த்த சித்ரா, ''என்ன, கொடுமை இது? சூலுார்ல நடக்குற இடைத்தேர்தலுக்கு நம்மூர்ல சோதனை நடத்திக்கிட்டு இருக்காங்களே,'' என, நொந்து கொண்டாள்.''ஆமாக்கா, சூலுார் தொகுதிக்குள்ள நுழையும் வாகனங்களை மட்டும் சோதனை செஞ்சா நல்லா இருக்கும்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறையை காரணமாச் சொல்லி, மக்களை ரொம்பவே இம்சிக்கிறாங்க. பாருங்க, எல்லோருமே திட்டிட்டுதான் போறாங்க...'' என்றாள்.''இதே மாதிரிதான், கலெக்டர் ஆபீஸ்லயும் நடக்குது. தேர்தல் முடிஞ்சிருச்சுல்ல, குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும்னு, இன்னைக்கு (நேற்று) நிறைய பேரு மனு கொண்டு போயிருக்காங்க. இன்னும் தேர்தல் விதிமுறை இருக்கு; அதனால, கூட்டம் நடக்காதுன்னு சொல்லி, திருப்பி அனுப்பியிருக்காங்க.
ஏகப்பட்ட பேரு ஏமாற்றத்தோட திரும்பிப் போயிருக்காங்க. ''சில பேரு, கலெக்டரை பார்த்தே ஆகணும்னு அடம் பிடிச்சு காத்திருந்து, புகார் சொல்லிட்டு போயிருக்காங்க....'' என, சித்ரா பதில் சொன்னாள்.''மக்களுக்கு ஒரு சட்டம்; அவுங்களுக்கு ஒரு சட்டம்னு வச்சிருக்காங்க போலிருக்கு. குறைதீர்ப்பு கூட்டம் நடத்துறதுக்கு, மாவட்ட நிர்வாகம் தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்கலை; ஆனா, அரசு பொருட்காட்சி நடத்துறதுக்கு மட்டும், ஸ்பெஷல் அனுமதி வாங்கியிருக்கு. இதுல யாருக்கு என்ன லாபம்னு தெரியலை,'' என நோண்டினாள் மித்ரா.''இதுல இருக்கற சூட்சுமம் புரியலையா? கோடிக்கணக்குல கரன்சி புழங்குற பிசினஸ் ஆச்சே; அதுக்காகவே, அனுமதி வாங்கியிருப்பாங்க.
குறைதீர்ப்பு கூட்டத்துல பெட்டிசன் மட்டும்தான கொடுப்பாங்க. மக்கள் அலைஞ்சா என்னன்னு நெனைச்சிட்டாங்க போலிருக்கு...'' என, சித்ரா அங்கலாய்த்தாள்.பேசிக்கொண்டே, சூலுார் தாசில்தார் ஆபீசை அடைந்தனர். ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, அருகில் இருந்த பேக்கரிக்குள் சென்று, இஞ்சி டீ, முந்திரி பக்கோடா ஆர்டர் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், பரபரப்பாக இருந்தது.
சற்று நேரத்தில் சுடச்சுட பக்கோடாவும், டீயும் வந்தது. பக்கோடாவை சுவைத்துக் கொண்டே, ''கனகச்சிதமா, ரெண்டு பேரையுமே காலி பண்ணிட்டாங்க...'' என, 'செக்' வைத்தாள் மித்ரா.''என்னப்பா, அரசியல் மேட்டரா...''''ஆமாக்கா, ஆளுங்கட்சி தரப்புல 'மாஜி' மேயரை நிறுத்துவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. 'மாஜி' அமைச்சராவும் இருந்தவரு. தி.மு.க., தரப்புலயும் 'மாஜி' நிக்குறதுனால, போட்டியை ஈசியா சமாளிக்கலாம்னு நெனைச்சாங்க. அவரை நிறுத்துனா, மறுபடியும் செல்வாக்கு கெடைச்சிடும்ங்கிற எண்ணத்துல, வாய்ப்பு குடுக்க மறுத்துட்டாங்க. அதேமாதிரி, 'மாஜி' அமைச்சரா இருந்த பொங்கலுார்காரருக்கும், சூலுார் தொகுதியில செல்வாக்கு இருக்கு. அவரையும் ஒதுக்கிட்டாங்க...''''ஓ...அப்படியா சேதி...''''பொறுங்க... இன்னும் விஷயம் இருக்கு. இறந்த எம்.எல்.ஏ., குடும்பத்துல, ஒருத்தருக்கு 'சீட்' கொடுத்ததுனால, ரெண்டு பேரும் அமைதியா இருந்தாங்க. ஆனா, தேர்தல் பொறுப்புக்குழுவிலும் வாய்ப்பு கொடுக்காததால, அவுங்களோட ஆதரவாளர்ங்க ரொம்பவே 'அப்செட்' ஆகிட்டாங்க.
கட்சி மேலிடத்துல இருக்கறவங்க, நம்பிக்கை கொடுக்கறதுனால, எலக் ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம் முடிவு செஞ்சுக்கிடலாம்னு பொறுமையா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''எதிர்க்கட்சி கூடாரத்திலும், சலசலப்பு இருக்காமே...'' என, நோண்டினாள் சித்ரா.''வேட்பு மனு தாக்கல் செய்றதுக்கு வந்தப்ப, காங்., நிர்வாகிகள கழட்டி விட்டுட்டாங்க. அதனால, கூட்டணி கட்சிக்கு, மரியாதை கொடுக்கலைன்னு ரொம்பவே ஆவேசமாகிட்டாங்க.
தேர்தல் வேலை செய்ய மாட்டோம்னு, சொல்லி இருக்காங்க. காங்., பொறுப்பாளர் சஞ்சய்தத் தலைமையில கூட்டம் நடத்தி, சமரசப்படுத்தி இருக்காங்க. இருந்தாலும், கைகோர்த்து வேலை பார்ப்பாங்களாங்கறது சந்தேகம்தான்,''''அதெல்லாம் சரி... தி.மு.க., வேட்பாளரோட சொத்துக்கணக்கை கேட்டுட்டு, இதெல்லாம் நம்புற மாதிரியாவா இருக்குன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்களாமே...''''ஏன்... அப்படி, என்னத்த காண்பிச்சிருக்காரு...''''தனக்கு, 39 கோடி ரூபாய்க்குதான் சொத்து இருக்குன்னு, கணக்கு காட்டியிருக்காராம். இதுல, 2 லட்சத்து, 61 ஆயிரம் கடன் இருக்குன்னு சொல்லியிருக்காரு. அதை கேள்விப்பட்டுதான், கட்சிக்காரங்க இப்படி பேசிக்கறாங்க,'' என்றாள் சித்ரா.
பக்கோடாவை திருப்தியாக நொறுக்கிய திருப்தியுடன், பேக்கரியை விட்டு, இருவரும் வெளியேறினர். மெல்ல நடந்தனர். அப்போது, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்க விட்டு, அதிவேகமாக கடந்தது.அதை பார்த்த மித்ரா, ''பிரைவேட் ஆஸ்பத்திரி நிர்வாகிங்க சிலர், ரொம்பவே கலக்கத்துல இருக்காங்களாமே...'' என கிளறினாள்.
''ஏன்... என்னாச்சு?''''ராசிபுரத்துல நடந்த குழந்தை விற்பனை விவகாரத்துல, பலரையும் அரெஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவங்கள்ல சில பேரு, குழந்தை பெற, நம்மூருல இருக்கற பல கருத்தரிப்பு மையங்களுக்கு கருமுட்டை தானம் செஞ்சதா சொல்லியிருக்காங்க. இதனால, இங்க இருக்கற கருத்தரிப்பு மைய நிர்வாகிங்க அதிர்ச்சியில இருக்காங்க. விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி., அதிகாரிங்க வருவாங்களோன்னு பயத்துல இருக்காங்க...''''நெருப்புக்குள்ள கையை விட்டா சுடத்தானே செய்யும்,'' என்ற சித்ரா, ''ரூரல் எஸ்.பி.,யா நியமிச்சிருக்கற சுஜித்குமார், டி.எஸ்.பி.,களை கூப்பிட்டு, 'மீட்டிங்' போட்டிருக்காரு.
எல்லாரும் ஒழுக்கமா வேலை செய்யணும்; வசூல் செய்றது; கட்டப்பஞ்சாயத்து செய்றத விட்டுடுங்க. பிரச்னை வந்தா, என்னோட கவனத்துக்கு கொண்டு வரணும்; இல்லேன்னா, அவ்ளோதான்னு, கடுமையா 'வார்னிங்' செஞ்சிருக்காராம்,'' என்றாள்.''ஓ... அப்படியா....''''இருப்பா, இன்னும் முடிக்கலை. இவரு எஸ்.பி.,யா இருந்தா பொழப்பு அவ்வளவுதான்னு முடிவு பண்ணியிருக்குற சில போலீஸ் அதிகாரிங்க, ரகசிய கூட்டம் போட்டுருக்காங்க.
கட்சிக்காரங்க மூலமா காய் நகர்த்த துவங்கியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''நானும் ஒரு போலீஸ் மேட்டர் வச்சிருக்கேன்; சொல்லட்டா'' என கேட்ட மித்ரா, சித்ராவிடம் இருந்து சமிக்ஞை வந்ததும், ''மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன்ல உளவு பார்க்கற அதிகாரி ஒருத்தரு, எப்பவுமே போதையில இருக்காராம். டூட்டியில இருக்கும்போது கூட, புல் 'டைட்டா' தான் இருக்குறாருன்னு சொல்றாங்க. ''தாபா, ஓட்டல்கள மிரட்டி வேண்டியதை வாங்கிக்குறாரு. யாராவது கொடுக்கலைன்னா, அவங்கள பத்தி தப்புத்தப்பா தகவல் சொல்லி, வேட்டு வச்சிருவாராம்.
அதுக்கு பயந்து, போதை போலீசுக்கு மாமூல் கொடுத்துட்டு இருக்காங்க. இதெல்லாம், எஸ்.பி.,க்கு தெரியாது போலிருக்கு,''''இப்ப, தெரிஞ்சிருப்பாருல்ல...''''கார்ப்பரேஷன் மேட்டர் ஏதுமில்லையா... கமுக்கமா இருக்கீங்களே...'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன் வட்டாரத்துல விஷயம் இல்லாம இருக்குமா, என்ன? அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அரசாங்க வீடு ஒதுக்குற மாதிரி, மாநகராட்சியிலயும் ஒதுக்குறாங்க.

துணை கமிஷனரா இருந்த காந்திமதி, ஆர்.எஸ்.புரத்துல இருக்கற வீட்டுல குடியிருக்காங்க. அவுங்க, 'டிரான்ஸ்பராகி' ரெண்டு மாசமாச்சு; இன்னும் காலி செய்யாம இருக்காங்க. அதனால, இப்ப வந்துருக்கிற துணை கமிஷனரு, வேறொரு வீட்டுல குடியிருக்காரு...''''அப்புறம்...''''நகரமைப்பு பிரிவுல உதவியா இருக்கற அதிகாரி, வெளியூர்ல இருந்து டிரான்ஸ்பராகி வந்திருக்காரு. அவருக்கு வீடு காலியில்லைன்னு சொல்லிட்டதால, வாடகைக்கு தங்கியிருக்காரு.
ஆனா, துணை கமிஷனருக்கு உதவியாளரா இருக்கற ஒருத்தருக்கு, கிரேடு-1 ஆபீசர்களுக்கான வீட்டை கொடுத்திருக்காங்க''''ஓகோ''''இவர், 'டிஸ்டர்ப்' ஆகக்கூடாதுன்னு, மேலே இருக்கற வீட்டையும், ஒதுக்கீடு செய்யாம இருக்காங்க. விசாரிச்சா, அந்த ஊழியர், உதவியாளர் கூட இல்லையாம்.
அன்ஸ்கில்டு லேபராம். துணை கமிஷனர் பக்கத்துல இருக்கறதுனால, அதிகாரத்தை முறைகேடா பயன்படுத்தி, 'அலாட்மென்ட்' கொடுத்திருக்காங்க. கார்ப்பரேஷன் முழுக்க, இதத்தான் இப்ப பேசிக்கிறாங்க...''''யாரு அவரு, அவ்ளோ செல்வாக்கா, அவருக்கு''''கையெழுத்துக்கு வந்திருக்கிற பைலில் இருந்து, அதிகாரிக்கே தெரியாம நகலெடுத்து, எதிர் பார்ட்டிக்கு கொடுத்து கரன்சி பார்த்தாரே... அவருதான்... இப்ப, கார்ல தான் வலம் வர்றாராம்.
வரி விதிப்பு விஷயத்துலயும், இப்ப மூக்கை நுழைக்கிறாராம். ஆபீசர்கள் வட்டாரத்துல, இவரைப்பத்தி, பேசிக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்ய, அ.தி.மு.க., வேட்பாளர், ஆதரவாளர்களுடன் தாசில்தார் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.இருவரும், அவர்களை பின்தொடர்ந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X