'ஓசி'யில் சாப்பிட சொன்ன தாசில்தார்... ஓயாமல் 'சரக்கில்' கிடக்கும் அதிகாரி யார்?

Added : ஏப் 30, 2019
Share
Advertisement
''அடடே... பரவாயில்லையே! இதிலும், பர்ஸ்ட். திருப்பூர்தான் பெஸ்ட்,'' என்றவாறு வீட்டுக்குள் நுழைந்த சித்ராவிடம், ''என் னக்கா.. வரும்போது, சந்தோஷமா ஏதோ சொல்லிட்டே வர்றீங்களே...!'' என்றாள் மித்ரா.''அட... உனக்கு விஷயம் தெரியாதா? பிளஸ் 2வில், 95.37 சதவீதம் வாங்கி, திருப்பூர்தான் முதலிடம். அதேமாதிரி பத்தாம் வகுப்பு தேர்ச்சியிலும், 'டாலர்' சிட்டி, மாவட்டம், 98.53 சதவீதம் பெற்று
'ஓசி'யில் சாப்பிட சொன்ன தாசில்தார்... ஓயாமல் 'சரக்கில்' கிடக்கும் அதிகாரி யார்?

''அடடே... பரவாயில்லையே! இதிலும், பர்ஸ்ட். திருப்பூர்தான் பெஸ்ட்,'' என்றவாறு வீட்டுக்குள் நுழைந்த சித்ராவிடம், ''என் னக்கா.. வரும்போது, சந்தோஷமா ஏதோ சொல்லிட்டே வர்றீங்களே...!'' என்றாள் மித்ரா.

''அட... உனக்கு விஷயம் தெரியாதா? பிளஸ் 2வில், 95.37 சதவீதம் வாங்கி, திருப்பூர்தான் முதலிடம். அதேமாதிரி பத்தாம் வகுப்பு தேர்ச்சியிலும், 'டாலர்' சிட்டி, மாவட்டம், 98.53 சதவீதம் பெற்று 'டாப்போ டாப்''

''கேட்கறதுக்கே, ரொம்ப சந்தோஷமாக இருக்குதுங்க்கா. பனியன் துறையில, சர்வதேச அளவில் புகழ் பெற்ற நம்ம திருப்பூர், கல்வியிலும் முன்னேறி வருதுங்கிறது, சூப்பரான விஷயங்கா,''

அப்போது வந்த மித்ராவின், அம்மா 'ரெண்டு பேரும், 'ஸ்னாக்ஸ்' சாப்பிட்டே பேசுங்க,' என்ற, பிஸ்கெட் இருந்த தட்டுகளை வைத்தார்.

''கனிம வளத்துறையில விவசாயிகளுக்கு இவ்வளவு நெருக்கடி ஏன் கொடுக்கறாங்களாம்,'' என்று, பிஸ்கெட்டை கடித்தபடி கேட்டாள் சித்ரா.

''குளம், குட்டையில இருந்து மண் திருடறது முழுசா நிறுத்தப்படல; அங்கங்க திருடிட்டுத்தான் இருக்காங்க; மக்கள் வாழ முடியாத அளவுக்கு, பாறைக்குழியில, குவாரி இயங்குது. இதையெல்லாம் விட்டுடறாங்க; விவசாயிகளை மட்டும் 'லாக்' பண்றாங்க''

''பொங்கலுாரில் ஒரு விவசாயி, தன்னோட நிலத்துல இருந்து, மற்றொரு இடத்துக்கு கட்டட கழிவு மண் எடுத்திட்டு போயிருக்காரு. கனிமவளத்துறை ஆர்.ஐ., அதைய பிடிச்சு; தெற்கு தாலுகாவுல கொண்டு போய் நிறுத்திட்டாங்க''

''ரொம்ப நாளாகியும் டிராக்டரை விடுவிக்கலையாம். விவசாயிகள், கலெக்டர்கிட்ட, 'மண் லாரி விஷயத்துல, வருவாய்த்துறையும் இப்படி கண்டுக்காம இருக்கலாமானு', புகார் கொடுத்துட்டாங்களாம். இதே 'மைன்ஸ்', அதிகாரிகள், கலெக்டர் ஆபீசுக்கு பின்னாடி, 2 ஆயிரம் லோடு மண் வெட்டி எடுத்ததை கண்டுக்கல, விவசாய கட்டட கழிவு கொண்டு போனதுதான், பெரிசா தெரியுது என, விவசாய சங்கங்கள் வெளிப்படையாவே கேட்டாங்களாம்,'' என, விளக்கினாள் மித்ரா.

''அதிகாரிகளுக்கு எதையெடுத்தாலும் கட்டு கட்டாக வாங்கி பழகிட்டாங்க,''

''அக்கா... யாரை, எதில சொல்றீங்க?''

''மித்து. டாலர் சிட்டி'னு பெருமையா பேசினாலும், கார்ப்பரேஷனில் பல பகுதியில், பஸ் ெஷல்டர் வசதி கூட இல்லை. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்றப்போ, 'எங்க கடைக்கு முன்னாடி வரக்கூடாதுனு, சிலர் பணத்தோட போயி, அதிகாரிகள பார்த்து பேசிடறாங்க,''

''அப்புறம் எப்படி ஜனங்களுக்கு, பஸ் ஸ்டாப், ெஷல்டர் வரும்,'' மித்ரா ஆதங்கப்பட்டாள்.

அப்போது, மித்ராவின் அம்மா, டீயோடு வந்தார். இருவரும் வாங்கி, பருக துவங்கினர்.

''டீயை பார்த்தவுடன்தான், டீ பார்ட்டி நினைவுக்கு வருது மித்து?''

''என்ன, பார்ட்டிங்க்கா, எங்கே, யாரால்?''

''என்னடி, இப்படி கேள்விகளை அடுக்குறே. கலெக்டர்தான். எலக்ஷன் நல்லபடியா முடிஞ்சதால், மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறையினரை வரவழைத்து டீ பார்ட்டி வச்சாராம்,''

''ஏங்க்கா.. வெறும் டீ மட்டும்தானா... 'நான்-வெஜ்' எல்லாம் கிடையாதா?''

''இருக்காம். ஆனா, கவுன்ட்டிங் முடிஞ்சுதானாம்,'' என்றாள் சித்ரா.

''கலெக்டர் டீ-பார்ட்டி கொடுத்து அசத்திட்டார். ஆனா, தாசில்தார் கண்டுக்க மாட்டேங்கறாராம்,'' என, பொடி வைத்து பேசினாள் மித்ரா.

''ஏய்.. எந்த தாசில்தார்டி? விளக்கமா சொல்லு?''

''அக்கா... பக்கத்துல இருக்கிற லிங்கேஸ்வரர் ஊர் தாசில்தாரைத்தான் சொல்றேன். தேர்தல் பணியின் போது, தாலுகா ஆபீசில், எல்லோரும், ராப்பகலா வேலை பார்த்தாங்க. ஓட்டுப்பதிவு முடிஞ்சதும், மெஷின்களை, ஊட்டி அரசு பாலிடெக்னிக்கில சேர்க்கும் வரை, கரெக்டா வேலை பார்த்தாங்க,''

''ஊட்டியில, ஒரு சிங்கிள் டீ கூட, தாசில்தார் வாங்கித்தரலையாம். ஆனா, அவங்களும், இன்னொரு அதிகாரியும், அப்பப்போ வெளியே போய் பசியாத்திட்டு வர்றாங்களாம்,''

''இதற்காக செலவை ஒதுக்காட்டியும்கூட, வேறு ஏதாவதில் அட்ஜெஸ்ட் செஞ்சு வாங்கி கொடுக்கலாம். மத்த எல்லா பக்கமும் இப்டித்தான் நடக்குது. ஆனா, நம்ம தாசில்தாருக்கு அந்த மனசில்லைன்னு புலம்பறாங்களாம்,''

''இதுகூட பரவாயில்லீங்க. எலக்ஷன் அன்னைக்கு, தேரோட்டமும் நடந்துச்சு. அதனால, பல இடங்களில் அன்னதானம் போட்டாங்க. விருப்பப்பட்டவங்க அங்கே போய் சாப்டுக்கங்கன்னு, தாசில்தாரம்மா, சொன்னாங்களாம். இதைகேட்ட, பலரும் சங்கப்பட்டாங்களாம்,''

''அப்புறம் என்னடி ஆச்சு?'

'
'இ.வி.எம்., மெஷின்களை, ஊட்டிக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில ஈடுபடற வி.ஏ.ஓ.,க்களுக்கு, 800 ரூபாய், உதவியாளர்களுக்கு, 600 ரூபாய்ன்னு, தேர்தல் கமிஷன் பணம் தருகிறதாம். இந்த பணத்தை, சரிவர கொடுக்கலையாம். இதையெல்லாம் பத்தி, தேர்தல் கமிஷனும், கலெக்டரும் விசாரிச்சா, நல்லாருக்கும்னு, நெறைய பேரு சொல்றாங்க,''

''என்னடி கொடுமையா இருக்குது. அரசாங்க பணத்தை செலவு பண்றதுக்கு இவங்க ஏன், நாட்டாமை பண்றாங்க,'' என்று ஆவேசப்பட்டாள் சித்ரா.

அதேநேரம், வீட்டுக்குள் வந்த பெண்ணை பார்த்த, மித்ரா, ''ஹலோ, வாணிலட்சுமி ஆன்ட்டி. எப்ப ஊரில் இருந்து வந்தீங்க. பபிதாவும் வந்திருக்காளா?'' என்றாள். அவரும் பதில் சொல்லிவிட்டு, மித்ராவின் அம்மாவிடம் பேச சென்றார்.
டேபிளில் இருந்த நாளிதழை புரட்டிய சித்ரா, ''இலங்கையில நடந்த கொடுமை, வேறெங்கு வரக்கூடாது,''

''ஆமாங்க்கா... அப்பாவி ஜனங்களை கொல்றவங்களை கடுமையா தண்டிக்கணும். இலங்கையில் குண்டு வெடிச்சப்ப, தி.மு.க., வினர் தப்பிச்சதை பெரிய விஷயமா பேசறாங்க,''

''ஆமா... மித்து. நானும் கேள்விப்பட்டேன். ஊர் திரும்பி வந்த நிர்வாகிகளை பார்த்து, கட்சிக்காரங்க கண்ணீர் விட்டாங்களாம். ஆனா, கட்சி மேலிடம், இலங்கை போன நிர்வாகிகளை, கன்னாபின்னான்னு, பேசிட்டாங்களாம்,''

''ஏங்க்கா... என்னாச்சு?''

''அட.. மாவட்ட நிர்வாகியை, சூலுார் இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளராக அறிவிச்சிருக்காங்க. 'எலக்ஷன் வேலை செய்யாம, இலங்கை என்ன வேண்டி கிடக்குன்னு,' காட்டமா பேசுனாங்களாம். உயிர் தப்பி வந்தது பற்றி கூட கேட்காம, இப்படி காய்ச்சி எடுத்துட்டாங்களே'ன்னு, மாவட்டம் கலக்கமா இருக்கிறாராம்,'' என்று சொல்லி சித்ரா சிரித்தாள்.

''ஏங்க்கா... சிட்டி போலீசில் ஒரு அதிகாரி எப்ப பார்த்தாலும், 'சரக்கில்'மூழ்கி கிடக்கறார்ன்னு பேசிக்கிறாங்கா. உங்களுக்கு தெரியுமா?''

''உண்மைதாண்டி. வடக்கால இருக்கிற ஸ்டேஷன் அதிகாரிதான் அவரு. முழுமுதற்கடவுள் பேரை கொண்ட அவரு, உடம்பு சரியில்லையினு, லீவு போட்டுட்டு, மூணு நாளாக, புல்லா சரக்கடிச்சிட்டு, வீட்ல போதையில கிடந்தாராம்,''

''இந்த விஷயம் பரவியதில், உயரதிகாரி, கூப்பிட்டு அட்வைஸ் பண்ணியுள்ளார். அதனால, இப்ப அவரு, ஹாஸ்பிட்டலில் 'அட்மிட்' ஆயிட்ட மாதிரி, 'செட்டப்' செய்றாராம்,''

''இதெல்லாம் எங்கே போய் சொல்றதுங்க்கா?''

''அட.. 'குவார்ட்டர்' மேட்டரை விடு. குவார்ட்டர்ஸ் குளறுபடியை கேளு?''

''சொல்லுங்க்கா...!''

''சிட்டியில், குவார்ட்டர்ஸில், வீடு கிடைச்ச, ஒரு லேடி மற்றும் சிலர், உள்வாடகைக்கு விடற விஷயம், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நல்லாவே தெரியுமாம். வெளிய தெரிஞ்சவுடன், தன்னை காப்பாற்றி கொள்ள, சும்மா பேரளவுக்கு ஆய்வு செஞ்சாராம். இதைப்பத்தி யாராவது கேட்டால், உங்களுக்கு யார் சொன்னது?'ன்னு, கவுன்டர் அட்டாக் பண்றாராம்,''

''அவரு, எப்பவுமே அப்டித்தான்னு, டிபார்ட்மென்டில் சொல்கின்றனர். பூனை கண்ணை மூடிட்டா, உலகம் இருட்டுன்னு நினைக்கற அதிகாரியாச்சே'' என்ற மித்ரா சிரித்தாள்.

''நீ சொல்றதும் கரெக்ட்தான். வேலியை பயிரை மேய்கிற கதையா, சட்டவிரோத கிளப்புகளில் லட்சக்கணக்கில் பணம் விளையாடுது. இதுக்கு, சில அதிகாரி உடந்தையாம்,''

''இது பரவாயில்லை. சரக்கடிச்சிட்டு, சீட்டு விளையாடிட்டு யாராவது வீட்டுக்கு கிளம்புனா, துணைக்கு ஒரு ஆளை, கிளப் நிர்வாகம் அனுப்புதாம். அப்படி யாராவது போலீஸ் பிடிச்சாக்கூட, கூட போற ஆள், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் அதிகாரிக்கு சொல்லிட்டு, பத்திரமா அனுப்பி வைப்பாராம்,''

''பனியன் எக்ஸ்போர்ட், எஜூகேஷனில், பர்ஸ்ட் மாதிரி, இந்தமாதிரி விஷயங்களிலும் பர்ஸ்ட்தான் போல,''என்றாள் மித்ரா.

''மித்து.. இதே 'சரக்கு' மேட்டரு, உடுமலையிலும் நடக்குது. 'டாஸ்மாக்' கடைகளுக்கு போட்டியா, பல இடங்களில், கடைகளை திறந்து சரக்கு வித்து காசு பார்க்கிறாங்களாம். அந்த ஏரியா ஸ்டேஷன் அதிகாரியும், 'செம'த்தியா வாங்கிக்கிறாராம். பொறுத்துப்பார்த்தா, ஆளுங்கட்சிக்காரங்க, இந்த மேட்டரை, 'சி.எம்.,' காதுக்கு கொண்டு போய்ட்டாங்களாம்,''

''சரி விடுங்க. அவரு பார்த்துப்பாரு,'' என்ற மித்ரா, ''அக்கா.. சைக்காலஜி எச்.ஓ.டி., ஓம்பிரகாஷ் சாரை பார்க்கோணும். ப்ளீஸ் நீங்களும் கூட வர்றீங்களா?''

''ஒய்... நாட்?'' என்ற சித்ரா எழுந்து 'ெஹல்மெட்'டை அணிந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X