புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி புகார் அளித்துள்ளதை அடுத்து, இது குறித்து, 15 நாட்களில் பதில் அளிக்கும்படி, அவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
'பேக்கப்ஸ் லிமிடெட்'
காங்கிரஸ் தலைவர் ராகுல், இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், பா.ஜ., ராஜ்யசபா, எம்.பி., சுப்பிரமணியன் சாமி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கடிதம் வாயிலாக, ஒரு புகார் அளித்திருந்தார்; அதில் அவர் கூறியிருந்ததாவது:
ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் செயல்பட்ட, 'பேக்கப்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம், 2003ல், பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவராக, காங்கிரஸ் தலைவர் ராகுலின் பெயரும், இடம் பெற்றிருந்தது.அந்த நிறுவனம், 2005 மற்றும் 2006ல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், ராகுலின் பிறந்த தேதியாக, 1970, ஜூன், 19 என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், ராகுல் தன்னை, பிரிட்டன் குடிமகன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த, 2009 பிப்ரவரி, 17ல், அந்த நிறுவனம் கலைக்கப்பட்டது. அதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும், 'ராகுல், பிரிட்டன் குடிமகன்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா, பிரிட்டன் என, ராகுல்,
இரட்டை குடியுரிமை பெற்றுள்ளது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில், சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'உங்களின் குடியுரிமை தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்திற்கு, 15 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்' என,குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ராஜ்நாத் சிங் கூறியதாவது:எம்.பி.,யாக பதவி வகிக்கும் ஒருவர், மத்திய அரசுக்கு ஏதாவது புகார் அளித்தால், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கடமை. அந்த அடிப்படையில் தான், தற்போது, ராகுலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இது, வழக்கமான நடைமுறை தான். பெரிய விஷயமல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.
ராகுல், இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதாக, 2015ல், உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், 'சாதாரண மனிதர்களையோ அல்லது ஒரு அமைப்பையோ குறிவைத்து தாக்கும் வகையில், பொதுநல மனு தாக்கல் செய்யக் கூடாது. 'எந்த ஆதாரத்தின் அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, தெரியவில்லை' எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
பழிவாங்கும் நோக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக, 2016ல், சுப்பிரமணியன் சாமி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடமும், புகார் அளித்திருந்தார். அந்தபுகாரை, பார்லிமென்ட் நடத்தை குழுவின் விசாரணைக்கு, சபாநாயகர் அனுப்பினார்.இந்த குழுவுக்கு, ராகுல் அளித்த பதிலில், 'எப்போதுமே, பிரிட்டன் குடியுரிமையை நான் பெற்றதும் இல்லை; அதற்காக விண்ணப்பித்ததும் இல்லை. 'இந்திய குடிமகன் என்பது தான், என் அடையாளம்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.தற்போது, லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், ராகுலின் குடியுரிமை தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகம், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பிரியங்கா பாய்ச்சல்
காங்., பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா கூறியதாவது:ராகுல், எங்கு பிறந்தார், எங்கு வளர்ந்தார் என்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, இதுபோன்ற புகார்களை கூறுவது, முட்டாள்தனமானது. எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்காக, இப்படியெல்லாம் செயல்படுவரா என, ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
கவனத்தை திசை திருப்புவதா?
ராகுலின் குடியுரிமை சர்ச்சை தொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கறுப்பு பணத்தை ஒழிக்க, போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக, காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, பிரதமர் மோடி, ராகுலின் குடியுரிமை தொடர்பாக, உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (61)
Reply
Reply
Reply