சென்னை : ஆசிய தடகள போட்டியில், தங்கம் வென்ற கோமதிக்கு, அ.தி.மு.க., சார்பில், 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தை சேர்ந்தவர், மாரிமுத்து. இவரது மகள், கோமதி. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த, ஆசிய தடளக போட்டியில், 800 மீ., ஓட்டப் பந்தயத்தில், தங்கம் வென்றார். இவர், தேசிய அளவில் சாதனை புரிந்ததை பாராட்டி, 2012 செப்., 13ல், ஸ்ரீரங்கத்தில் நடந்த, அரசு நலத்திட்ட விழாவில், ஊக்கத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாயை, அப்போதைய முதல்வரான, ஜெயலலிதா வழங்கினார்.
தற்போது, ஆசிய போட்டியில், தங்கம் வென்றதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., சார்பில், 15 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற, ஆரோக்கிய ராஜிவிற்கு, 10 லட்சம் ரூபாய் தரப்படும் என்றும், அ.தி.மு.க., தலைமை தெரிவித்தது. நேற்று முதல்வர், இ.பி.எஸ்., இல்லத்தில், அவரும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், கோமதியிடம், 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கி, மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தினர்.இதுகுறித்து, கோமதி கூறியதாவது:அ.தி.மு.க., சார்பில், 15 லட்சம் ரூபாய் வழங்கியதற்காக, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி.
தேசிய அளவில் சாதனை புரிந்ததற்காக, ஏற்கனவே, ஜெயலலிதா, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஊக்கப்படுத்தி இருந்தார்.அவர் வழியில் செயல்படும் முதல்வர், விளையாட்டு துறைக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார். வேலைவாய்ப்பில், விளையாட்டு வீரர்களுக்கு, 3 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியுள்ளார். அதற்கும் நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.