பாட்னா:'பீஹாரின் இரண்டாவது லாலு பிரசாத் யாதவ் நான் தான்' என, லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். இதையடுத்து, அவரது இளைய மகன், தேஜஸ்வி யாதவ், கட்சிக்கு தலைமையேற்று நடத்தி வருகிறார்.
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், இளைய மகன் தேஜஸ்விக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதையடுத்து, லாலு - ரப்ரி மோர்சா என்ற பெயரில், தேஜ் பிரதாப் புதிய கட்சியை துவக்கினார். பீஹார் லோக்சபா தேர்தலில், அக்கட்சியின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். தேர்தல் பிரசார கூட்டங் களில், தன் சகோதரர் தேஜஸ்விக்கு எதிராக, தேஜ் பிரதாப் பேசி வருகிறார்.
ஜஹானாபாத் லோக்சபா தொகுதியில், தேர்தல் பிரசார கூட்டத்தில், தேஜ் பிரதாப் பேசிய தாவது:என் தந்தை லாலு பிரசாத், சுறுசுறுப்பானவர். ஒரு நாளில், 10க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வார். இப்போதைய தலைவர்கள், இரண்டு கூட்டங்களுக்கே சுருண்டு விடுகின்றனர். லாலு தான் எங்களுடைய கடவுள்; எங்கள் குரு. அவரது ரத்தம் நான். பீஹாரின் இரண்டாவது லாலு பிரசாத் நான் தான்.இவ்வாறு அவர் பேசினார்.