கொழும்பு: 'இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு, சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்கள், கேரளா, பெங்களூரு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு, அடிக்கடி சென்று வந்துள்ளனர்' என, இலங்கை ராணுவ உயர் அதிகாரி, மகேஷ் சேனநாயகே தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களின் பண்டிகை தினமான ஈஸ்டர் அன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, ஆறு இடங்களில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 253 பேர் உயிரிழந்தனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த தற்கொலை தாக்குதலில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பை சேர்ந்தவனும், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான, ஸரான் ஹஷீம் என்ற பயங்கரவாதி உட்பட சிலரை, போலீசார் கைது செய்துள்ளனர். இவர், இலங்கையில் இருந்து, கேரளா மற்றும் தமிழகத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை தாக்குதல் குறித்து, அந்நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல், மகேஷ் சேனநாயகே, கூறியதாவது:தாக்குதல் நடந்த விதத்தையும், அதில் ஈடுபட்டவர்கள் அதிகம் பயணப்பட்ட இடங்களையும் பார்க்கையில், வெளியாட்களின் உதவியுடன் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது தெரிகிறது.இதற்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், கேரளா, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அங்குள்ளவர்களுக்கு, இவர்கள் பயிற்சி அளிக்க சென்றிருக்கலாம் அல்லது மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சென்றிருக்கலாம். இவர்கள், சர்வதேச பயங்கரவாதிகளுடன், தொடர்பில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினர்.