மசூத் விவகாரத்தில் லாப, நஷ்ட கணக்கு

Added : மே 04, 2019
Advertisement
 மசூத் விவகாரத்தில் லாப, நஷ்ட கணக்கு

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அஸாரை, உலக தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபை. இந்த விவகாரத்தில், முதலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா செயல்பட்டது. மசூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, முட்டுக்கட்டை போட்டு வந்தது சீனா. இப்போது, தன் நிலையை சீனா மாற்றிக் கொண்டது.
பிரதமர் மோடி, ஒரு பக்கம் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், மசூத் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக கவனித்து வந்தார். அதோடு, வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இந்திய மூத்த அதிகாரிகளிடமும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்தாராம். பல ஆண்டுகளுக்குப் பின், ஐக்கிய நாடுகள் சபையால், மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது, மோடி அரசின் சாதனை என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். தேர்தல் பிரசாரத்தில், இது குறித்து, மோடி பேச ஆரம்பித்துள்ளார். 'இது, இந்திய அரசுக்கு கிடைத்த வெற்றி' என, பேசி வருகிறார் பிரதமர்.ஆனால், காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. '௧௦ ஆண்டுகளாக காங்கிரஸ் மேற்கொண்ட உழைப்பின் பலன் தான் இது. ஏதோ, பா.ஜ., அரசு சாதனை செய்துவிட்டதாக சொல்வது தவறு' என்கின்றனர், காங்கிரசார்.'அப்படியானால், மும்பை குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கும் காங்கிரசின் உழைப்புதான் காரணமா' என, கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர். இன்னொரு பக்கம், இந்த விவகாரம், மீதமுள்ள மூன்று கட்ட ஓட்டுப் பதிவில், தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, பா.ஜ.,வினர் நம்புகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில், இந்த விவகாரம் எடுபடுமா என்கிற கேள்வியும் எழுகிறது.


யார் அந்த 40 பேர்?

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கோபக்காரர் என, பெயரெடுத்தவர். இப்போது, தேர்தல் பிரசாரத்தில், அவரின் கோபம் எல்லைத் தாண்டிவிட்டது. இதற்குக் காரணம், பிரதமர் மோடி.சமீபத்தில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, 'மம்தா கட்சியின், 40 எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்' என, சொல்லிவிட்டார், மோடி. இது பெரும் புயலைக் கிளப்பியது.'இது சுத்த பொய்' என்றார், மம்தா. வெளியே இப்படி சொன்னாலும், 'இதில் உண்மை இருக்குமோ' என, மம்தாவை யோசிக்க வைத்துள்ளதாம், மோடியின் பேச்சு. இதன் விளைவாகத் தான், மாநில உளவுத்துறை டி.ஜி.பி., மற்றும் மூத்த அதிகாரிகளை அழைத்து, 'டோஸ்' விட்டாராம், மம்தா.'என்ன நடக்கிறது இங்கே; நீங்களும், பா.ஜ., பக்கம் போய்விட்டீர்களா' என, கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம், மம்தா. பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது தான் நல்லது என, அதிகாரிகள் மவுனம் காத்தனராம்.'எம்.எல்.ஏ.,க்கள் யாராவது டில்லி சென்று மோடியைச் சந்தித்துள்ளனரா; பிரதமர் சொன்ன, அந்த, 40 பேர் யார் என்ற பட்டியலை தாருங்கள்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம், மம்தா.மேற்கு வங்கத்தில், 294 தொகுதிகள் உள்ளன. இதில் மம்தா கட்சி, 211 எம்.எல்.ஏ.,க்களைப் பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வருகிறது. ஒரு வேளை, மோடி சொன்னபடி, 40 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறினாலும், ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என, மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆறுதல்பட்டுக் கொண்டுள்ளனர்.இன்னொரு பக்கம், 'மோடி சொன்னது உண்மையா; மம்தாவை மிரட்டுவதற்காக, வெறுமனே பேச்சுக்கு சொன்னாரா' என, பா.ஜ.,வினரும் குழப்பத்தில் உள்ளனர்.


பெயரால் பெருங்குழப்பம்

தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள் பெரும் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். அது, அவர்களுடைய சொந்த பெயர் பிரச்னை.பெரும்பாலும், நடிகர்கள் தங்களுடைய உண்மையான பெயரை மாற்றி, கவர்ச்சிகரமான வேறு பெயருடன் நடிக்க வருகின்றனர்.ஹிந்தி நடிகர், தர்மேந்திராவின் மகன், சன்னி தியோலும், சினிமா நடிகர். இவர், பா.ஜ., வேட்பாளராக, பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருடைய ஒரிஜினல் பெயர், அஜய் சிங் தியோல்.இந்த பெயர் தான், இவருடைய அனைத்து ஆவணங்களிலும் உள்ளது. வேட்பாளர் பட்டியலிலும், 'அஜய் சிங் தியோல்' என்ற பெயர் தான் உள்ளது. ஆனால், சன்னி தியோலாக அவரை அறிந்த ரசிகர்களும், வாக்காளர்களும், 'அது யார் அஜய் சிங் தியோல்' என, சந்தேகப்படுகின்றனராம்.இது சன்னி தியோலுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாம். ஆனால், 'ஓட்டளிக்கும் மின்னணு இயந்திரத்தில், வேட்பாளர்களின் புகைப்படமும் இருக்கும் என்பதால், பிரச்னை வராது; மக்கள் புரிந்து கொள்வர்' என, பா.ஜ.,வினருக்கு சமாதானம் கூறினாராம், சன்னி தியோல். அப்படியானால் கட்சி போஸ்டரில் என்ன பெயர் போடலாம் எனக் கேள்வி எழுப்பி, மீண்டும் அவரை குழப்பிவிட்டார்களாம் கட்சியினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X