ஓட்டுரிமையை எதற்காகவும் பறிக்காதீர்

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (1) | |
Advertisement
தமிழகத்தில் நடந்த, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த பலரால், ஓட்டளிக்க முடியவில்லை. காரணம், வாக்காளர் பட்டியலில், அவர்கள் பெயர் இல்லை என, அனுப்பப்பட்டனர்.நீண்ட காலமாக, ஒரே இடத்தில், ஒரே வீட்டில் வசித்தவர்களின் பெயர்கள் கூட, வாக்காளர் பட்டியலில் காணவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், சட்டசபை தேர்தலில், ஓட்டளித்த பலருக்கு, லோக்சபா
உரத்த சிந்தனை

தமிழகத்தில் நடந்த, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த பலரால், ஓட்டளிக்க முடியவில்லை. காரணம், வாக்காளர் பட்டியலில், அவர்கள் பெயர் இல்லை என, அனுப்பப்பட்டனர்.

நீண்ட காலமாக, ஒரே இடத்தில், ஒரே வீட்டில் வசித்தவர்களின் பெயர்கள் கூட, வாக்காளர் பட்டியலில் காணவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், சட்டசபை தேர்தலில், ஓட்டளித்த பலருக்கு, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை.ஏமாற்றம் அடைந்த, பல லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஓட்டளிப்பது குடிமகனின் கடமை என்பதால், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து, பிரிட்டன் தலைநகர், லண்டனில் இருந்து, சென்னை வந்தேன். வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று, ஏமாற்றத்துடன் திரும்பினேன்.ஓட்டுரிமை பறிக்கப்பட்டதை அறிந்து, மிகவும் வேதனை அடைந்தேன். என்னைப் போல பலரும், அந்த நாளில் வேதனை அடைந்தனர்.இதற்கு காரணம், தமிழக அரசோ, அரசு ஊழியர்களோ இல்லை; தேர்தல் ஆணையம் தான்!இந்த லட்சணத்தில், '100 சதவீத ஓட்டுப் பதிவு இருக்க வேண்டும்' என, மாதக்கணக்கில், நாடு முழுதும் விழிப்புணர்வு பேரணிகளை, தேர்தல் ஆணையம் நடத்தியது. அதற்காக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், வீதி வீதியாக வெயிலில் வறுத்தெடுக்கப்பட்டனர்.'வாக்காளர் பட்டியலில், என்னைப் போல பலரின் பெயர் விடுபட்டு போனதற்கு என்ன காரணம்' என, தேர்தல் அதிகாரிகளை கேட்டேன்... 'இதற்காகத் தான், பத்து முறைக்கும் மேலாக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடத்தினோம்... அப்போது வராமல், இணையதளத்தில் பட்டியலை ஆய்வு செய்யாமல், இப்போது வந்து கேட்கிறீர்களே...' என்றனர்.'சரி, எதற்காக, என் பெயரை பட்டியலில் இருந்து நீக்கினீர்கள்...' என கேட்டதற்கு, பதில் இல்லை; அதற்கான ஆவணங்களும் காட்டப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது போல, நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரும், அதற்கான காரணமும், தெளிவாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.'என் பெயரை, பட்டியலில் இருந்து நீக்குங்கள்' என, மனு அளித்தவர்களின் பெயர்கள் மட்டும் தான், தேர்தல் ஆணையத்தின், இணையதள பக்கங்களில் இருந்தன.என் போன்ற, எவ்வித மனுவும் அளிக்காத, 'என் ஓட்டு அப்படியே இருக்கும்' என, நம்பியவர்களின் பெயர்கள், எந்த பட்டியலிலும் இல்லை.'நுாறு குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்ற சிந்தனை, பேச்சு வழக்காக உள்ளது. அது போலவே, 'தவறான நபரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாது; சரியான ஒருவரின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது' என்பது என் வாதம்.வாக்காளர் இறுதிப் பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டது உண்மை தான்; என் போன்றவர்கள் அதை பார்க்காததும் உண்மை தான். நான் ஏன் பார்க்க வேண்டும்... என் உரிமையை பறித்த, தேர்தல் ஆணையம் தானே, அதை விளம்பரப்படுத்த வேண்டும்!மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பி, 'உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது; சரியான ஆவணங்களுடன் எங்களை அணுகுங்கள்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்க வேண்டாமா?குடும்பத்தை காப்பாற்ற, வெளிநாட்டில் வேலை பார்க்கும், நியாயமான குடிமகனான என்னைப் போன்றவர்கள், எதற்காக, அடிக்கடி இணையத்தில் வாக்காளர் பட்டியலை பரிசோதிக்க வேண்டும்?ஏனோ தானோவென செயல்படும் அரசு ஊழியர்கள்; சரியாக பராமரிக்கப்படாத பதிவேடுகள்; கணினி குளறுபடிகள்... இவற்றை வைத்து தயாரிக்கப்படும் இறுதிப் பட்டியலை, எப்படி நான், வேத வாக்காக கொள்வது?ஒரே வீட்டில் வசிக்கும் கணவனுக்கு ஓட்டு இருந்தது; மனைவிக்கு இல்லை. எதன் அடிப்படையில் இந்த குளறுபடி நடந்தது என்பது தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் மும்முரமாக, இரவு, பகலாக செயல்படும் ஆணையம், அதன் அதிகாரிகள், ஊழியர்களால் தான் இந்த குழப்பம்.எனவே, தேர்தலை நடத்த என, விசேஷ அலுவலகம், அலுவலர்கள், அதிகாரிகள் வேண்டும்.நிரந்தரமாக அவர்கள் இருந்தால் தான், இது போன்ற கேலிக்கூத்துகள் இனி நடக்காது.எங்களைப் போன்ற பலர், பணி நிமித்தமாக, வெளியிடங்களில் உள்ளோம். இணையம் மூலம் அல்லது மொபைல் மூலம், வாக்காளர் பெயர்களை சரி பார்க்க, துல்லியமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்றால், அதுவும் இல்லை.தேர்தல் ஆணையத்தின், '1950' என்ற எண்ணுக்கு, 'டயல்' செய்தால், அழைப்பை யாருமே எடுப்பதில்லை அல்லது இணைப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை. எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம் என்றால், அதற்கும், அநேக நேரங்களில் பதில் வருவதே இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை கண்டறிய, தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளம்பரத்திலேயே, பல தவறுகள் இருப்பதை, பலர் சுட்டிக் காட்டினர்.வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு போனோர், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டளிக்க சென்றால், அவர்களை திருப்பி அனுப்பி, ஏமாற்றக் கூடாது. ஒரு பதிவேட்டில், அவர்களின் பெயர், முகவரி, வாக்காளர் அடையாள எண் போன்றவற்றை பதிவு செய்து, ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.தேர்தலுக்குப் பின், அத்தகையோர் தவறாக ஓட்டளித்தது தெரிய வந்தால், அவர்களின் ஓட்டுகளை செல்லாததாக ஆக்கலாம் அல்லது அத்தகைய நபர்களுக்கு, தண்டனை பெற்றுத் தரலாம். இதற்கான வழிமுறைகளை, தேர்தல் ஆணையம், வருங்காலங்களிலாவது ஆராய வேண்டும்.சரி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு விட்டது; ஓட்டு போட முடியவில்லை; எப்படியோ முடிந்து விட்டது. போகட்டும்... தேர்தலை, 100 சதவீதம் நியாயமாகவும், நேர்மையாகவும், தேர்தல் ஆணையத்தால் நடத்த முடிந்ததா?தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி, தமிழகம் முழுதும், அரசியல் கட்சியினரால், பணம் தண்ணீராக இறைக்கப்பட்டது. கட்சி பிரமுகர்களுக்கு, கட்சி மேலிடங்களால் அனுப்பப்பட்ட பணத்தை, தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடிந்ததா?உள்ளூர் கட்சி பிரமுகர்களால், வீட்டுக்கு வீடு, பணம் வழங்கியதை தான், தேர்தல் ஆணையத்தால், நிறுத்த முடிந்ததா... நெஞ்சை தொட்டு, உண்மையை தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும்.'முடியவில்லை, இல்லை' என்பது தான், உண்மையான பதிலாக இருக்கும்.இந்தக் கோளாறை சரி செய்ய, என்ன செய்யலாம் என்பதை, இனிமேலாவது யோசிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளுடன் சேர்ந்து, வருமான வரித் துறையினர், பல இடங்களில் சோதனை நடத்தினர். எனினும், அரசியல் கட்சியினரின், 'தில்லாலங்கடி' முன், அதிகாரிகளின் ஆய்வு, சோதனை வெற்றி பெறவில்லை.எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவது போல, அரசின் முழு கட்டுப்பாடும், தேர்தல் அதிகாரிகள் வசம் வர வேண்டும்.அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வர வேண்டும்.தலைமை தேர்தல் அதிகாரி என, மாநிலத்திற்கு ஒருவர் இருப்பது போல, தேர்தல் நேரத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்காக, தேர்தல் தேதி அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தும் நாளுக்கும் இடைப்பட்ட காலம், அதிகபட்சம் ஒரு வாரமாக குறைக்க வேண்டும்.மார்ச், 10ல் அறிவிப்பு வெளியானதில் துவங்கி, மே, 23ல், ஓட்டு எண்ணும் நாள் வரை, 75 நாட்கள், முடிவுக்காக காத்திருப்பது தவறு.இந்த நாட்களை குறைக்க என்ன செய்யலாம் என, தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும். 'பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்கிறோம்' என, கூறுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நாட்களில், அரசு நிர்வாகம் செயலிழந்து போவதை தடுக்க, புதிய வழிமுறைகளை ஆராய வேண்டும்.மொத்தம், 543 எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க, மூன்று மாதங்களாக தேர்தல் பிரசாரம்; அதில் பங்கேற்கும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள்; பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவம்; தேர்தல் பணியில், பல லட்சம் அரசு ஊழியர்கள் போன்றவற்றால், அரசின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் பாதிப்படையவே செய்யும்.இதை தவிர்க்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும்.ஏனெனில், தேர்தல் நடக்கும் காலத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகரிப்பது, தேர்தல் நடவடிக்கைகளின் மீது, மக்களுக்கு அவநம்பிக்கையை அதிகப்படுத்தும்; வீண் குழப்பங்கள் ஏற்படும்.ஏற்கனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, அரசியல் தலைவர்கள் பலர், சந்தேகம் தெரிவிக்கும் நிலையில், பதிவான ஓட்டுகள், மாதக் கணக்கில் எண்ணப்படாமல் இருப்பது, நியாயமாக தெரியவில்லை.அதற்காக, ஓட்டு இயந்திரம் செயல்பாட்டின் மீது, எனக்கு சந்தேகம் இல்லை.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதில் பதிவான ஓட்டுகள் மாறாது என்பது எனக்கு தெரியும்.எனினும், வளரும் பொருளாதார நாடான, நம் நாட்டிற்கு, தேர்தல் செலவை குறைக்க, தேர்தல் காலத்தை மட்டுப்படுத்த வேண்டும்.'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், இதெல்லாம் தவிர்க்க முடியாதது' என, சிலர் கூறுவர். நியாயமாக பார்த்தால், இந்த, தகவல் தொழில்நுட்ப காலத்தில், ஒரு வாரத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்து, அறிவிப்புகளை வெளியிட்டு, அரசுகளை அமர்த்தி இருக்க வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால், பிரசாரம் என்ற பெயரில், அரசியல் தலைவர்கள் அடித்த கூத்து; தொண்டர்களின் அடாவடி; அரசு பணம் விரயம் போன்றவை தவிர்க்கப்பட்டிருக்கும்.தி.மு.க., எப்படி, அ.தி.மு.க., எப்படி, அதன் தலைவர்கள் யார் என்ற விபரம், வாக்காளர்களான, நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கையில், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர் ஏன், மாதக் கணக்கில், அரசு நிர்வாகத்தை மறந்து, பிரசாரத்தில் வீணாக ஈடுபட வேண்டும்?முன்னர், ஓட்டுச்சீட்டு முறை இருந்தது. அதன் பிறகு, இயந்திரங்கள் வந்துள்ளன; அதில் பதிவாகும் ஓட்டுகளை உறுதிப்படுத்த, வி.வி.பி.ஏ.டி., கருவி உள்ளது. எதிர்காலத்தில், இணையதளத்தில், ஓட்டு போடும் வசதி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கான முன்னோட்டமாக, புதிய தேர்தல் சிந்தனைகள் பிறக்க வேண்டும்.முக்கியமாக, நாட்டு மக்களில், ஓட்டளிக்க தகுதி உடைய அனைவருக்கும் ஓட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் எந்த வித குளறுபடிகளுக்கும், எதிர்காலத்தில் இடமளிக்க கூடாது.


வை.சுவாமிநாதன்


சமூக ஆர்வலர்


இ - மெயில்: nathan.indika@hotmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

swaminathan - london,யுனைடெட் கிங்டம்
05-மே-201908:12:58 IST Report Abuse
swaminathan "மார்ச், 10ல் அறிவிப்பு வெளியானதில் துவங்கி, மே, 23ல், ஓட்டு எண்ணும் நாள் வரை, 45 நாட்கள், முடிவுக்காக காத்திருப்பது தவறு." என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 45 அல்ல கிட்டத்தட்ட 75 நாட்கள் அதாவது இரண்டரை மாதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X