பதோஹி : ''ஊழல் செய்து, சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, 'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணி அமைத்துள்ளனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது.
ஆம்புலன்ஸ் ஊழல்
இங்குள்ள, பதோஹியில் நேற்று நடந்த, பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகியவை இணைந்து, உ.பி.,யில், மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இவர்கள் ஏன், கூட்டணி அமைத் தனர்
எனத் தெரியுமா?ஆட்சி அமைத்து, ஊழல் செய்து, அதன் மூலம், தங்கள் சொத்து மதிப்பை அதிகரித்து கொள்வதற்காகத் தான், இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர்.உத்தர பிரதேசத்தில், ஆம்புலன்ஸ் ஊழல் உட்பட, பல ஊழல்களை இவர்கள் செய்துள்ளனர்.அதே நேரத்தில், மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்சி அமைக்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.
24 மணி நேர மின்சாரம்
இலவச மருத்துவக் காப்பீடு, மலிவு விலை மருந்துக் கடைகள் என, பல திட்டங்களை, பா.ஜ., அரசு செயல்படுத்தி உள்ளது.அவர்களது ஆட்சியின் போது, மதத்தின் அடிப்படையில் தான், மின்சார இணைப்பு கூட வழங்கினர்.ஆனால், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், எந்த பாகுபாடும் இல்லாமல், 24 மணி நேர மின்சார இணைப்பு வழங்க, பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த ஆட்சிகளில், மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ., ஆட்சி அமைந்த பின், தங்கள் ஜாமினை ரத்து செய்து, குற்றவாளிகள் சிறைக்கு திரும்பியுள்ளனர்.நாட்டின் காவலாளியான எனக்கு, மக்களின் ஆதரவும், ஆசியும் உள்ளது. அதனால், இந்தக் கலப்பட கூட்டணியின் கொள்ளையடிக்கும் முயற்சியைமுறியடிப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.
ராகுல் மீது தாக்கு
மத்திய பிரதேசத்தின் சாகரில் நடந்த, பா.ஜ., பிரசார
கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, 'பேக்ஆப்ஸ்' என்ற நிறுவனத்தின் இயக்குனராக, காங்., தலைவர் ராகுல் இருந்துள்ளார். அப்போது, தன்னை, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என, கூறியுள்ளார்.அந்த நிறுவனம், 2009ல் மூடப்பட்டது. ஆனால், 2011ல், மத்தியில், காங்., அரசு இருந்த போது, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு, நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
ஆனால், அந்தத் துறையில், அந்த நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை.நிலம், ஆகாயம், நீர் என அனைத்திலும், காங்., ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. என்னை அவமானப்படுத்துவதை குறிக்கோளாக வைத்திருப்பதாக, ராகுல் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் என்னை பற்றி பொய் புகார் கூறி, தன்னைப் பற்றிய உண்மைகளை அவராகவே வெளிப்படுத்தி வருகிறார்.நீங்கள் என் மீது எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அதில் தாமரை அதிகளவில் மலரும்.இவ்வாறு, அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (28)
Reply
Reply
Reply