வருவாய் வாரியம் மீண்டும் வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் வாரியம் மீண்டும் வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : மே 07, 2019
Share

திருப்பூர்:கடந்த 40 ஆண்டுக்கு முன் கலைக்கப்பட்ட வருவாய் வாரியம், மக்கள் நலன் கருதி மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வருவாய் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பகுதிவாரியாக வருவாய் மற்றும் பொது நிர்வாகத்தை கண்காணிப்பது இதன் பணி. கிராம அளவில் பயிர் ஆய்வு; கணக்கெடுப்பு, நில வரியினங்கள் வசூல்; பிறப்பு இறப்பு பதிவு மற்றும் பராமரிப்பு பணியை மணியகாரர் மற்றும் கிராம கர்ணம் ஆகியோர், அந்தப் பகுதியில் வசித்து கொண்டு இதை செய்து வந்தனர்.
இது கவுரவ பணியாக இருந்ததால் மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. சொந்த ஊர் என்பதால் இவர்களுக்கு அந்த பகுதி குறித்து அனைத்து விவரங்களும் முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால், ஒரு கால கட்டத்தில் சில இடங்களில் இவர்கள் சிற்றரசர்கள் போல் செயல்பட்டனர்.சர்வாதிகாரி போல் இயங்கிய அவர்கள் விவசாயிகளை வதைத்தும், முறையற்ற வகையில் ஆதாயம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டனர். ஆனால், பெரும்பாலானோர் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து, கிராமங்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இயங்கி வந்தனர்.
இந்த வருவாய் வாரியங்கள் அரசுக்கு ஆலோசனை கூறும், அமைப்பாகவும், மேல் முறையீட்டு வழக்கு விசாரிக்கும் தீர்ப்பாயமாகவும் செயல்பட்டது.ஆனால், கடந்த, 1980ம் ஆண்டு, இந்த வருவாய் வாரியம், அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த தடையாக உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு வருவாய் வாரியம் ஒழிப்பு சட்டத்தை டிச., 5ம் தேதி அமல்படுத்தியது. அப்போதைய கால கட்டத்தில் மக்களும் இதை ஏற்று கொண்டனர்.
இரவோடு இரவாக அவர்கள் பதவி பறிக்கப்பட்டு, அவர்களிடமிருந்த ஆவணங்கள் முற்றிலும் பறிக்கப்பட்டன.அவர்களுக்கு பதிலாக அரசு வி.ஏ.ஓ.,க்களையும், அவர்களுக்கு உதவியாக தண்டல்காரர்களையும் நியமனம் செய்தது. இவர்கள் அதே பகுதியில் வசிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், இவர்களில் பலரும் பிற பகுதியிலிருந்து பணிக்கு சென்று வருவோராக உள்ளனர்.மேலும், இவர்களுக்கு அடிக்கடி இடமாறுதலும் வழங்கப்படுகிறது. நில வரி உரிய வகையில் வசூலிப்பதில்லை. பயிர் கணக்கு முறையாக இல்லை. கள ஆய்வு செய்யாமல் பழைய கணக்கையே அவர்கள் புதுப்பித்து வருகின்றனர். இதனால் விவசாயவிளை பொருள் உற்பத்தி மற்றும் விலை நிர்ணயம் பெரும் ஏற்ற தாழ்வாக உள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:பல்வேறு வெளிநாடுகளில், விவசாய துறை அதிகாரிகள் இடமாறுதல் இன்றி பணியாற்றுவர். அதன் மூலம் அவர்கள் பணியாற்றும் பகுதி குறித்து முழு விவரங்களும் அவர்கள் வசம் முழுமையாக இருக்கும்.ஆனால், 1980ல் தமிழகத்தில் இந்த வருவாய் வாரியம் கலைக்கப்பட்டு, கிராம முன்சீப் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்பட்ட போது, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சி தற்போது இல்லை. இது கலைக்கப்பட்டது தவறு அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X