சென்னை : மே ௮-''தி.மு.க., - தினகரன் ஆகியோர் மறைமுகமாக இணைந்து செயல்பட்டாலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: எந்த விதத்திலும் பாதிப்பு இல்லாமல், கடந்த முறையை விட, பா.ஜ., அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.இதனால் தான், காங்., தலைவர் ராகுல் போன்றவர்கள், நாகரிகமற்ற பிரசாரத்தை செய்கின்றனர். ஊழலுக்கு எதிரானவர்கள் யார்; ஆதரவானவர்கள் யார் என்ற, போட்டி தான் நடக்கிறது.
காங்கிரஸ் கட்சி, ஊழலுக்கு ஆதரவான கட்சி என்பதை, பிரதமர் மோடி தெளிவாக சொல்லி இருக்கிறார். இதனால், ஊழலுக்கு துணை போகிறவர்களுக்கு கோபம் வருகிறது.தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க.,வும், தினகரனும் மறைமுக கூட்டணி இல்லை என்று சொன்னாலும், அரசியலில் இணைந்து தான் செயல்படுகின்றனர். தினகரன், தன் கட்சியை, தி.மு.க.,விடம் அடகு வைத்து விட்டார். அவர்கள், மறைமுகமாக இணைந்து செயல்பட்டாலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.தமிழகத்தில், நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வரும், 11ம் தேதி முதல், 17ம் தேதி வரை, பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு, தமிழிசை கூறினார்.