புதுடில்லி: ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல், நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், ஓட்டுப்பதிவு நடக்கவிருக்கும் ஏழு மாநிலங்களில் உள்ள, 59 லோக்சபா தொகுதிகளில், இன்று மாலையுடன், பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை, ஐந்து கட்டத் தேர்தல் நடந்துள்ளது. ஏப்., 11ல், 20 மாநிலங்களில், 91 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத்தில், 69.50 சதவீத ஓட்டு பதிவானது.
சதவீதம்:
தமிழகம் உட்பட, 13 மாநிலங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு, ஏப்., 18ல் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், 69.44 சதவீத ஓட்டு பதிவானது. வாக்காளருக்கு பணம் கொடுக்க முயன்றதாக, தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏப்., 23ல், 14 மாநிலங்களில் உள்ள,
116 தொகுதி களுக்கு நடந்த மூன்றாம் கட்டத்தில், 68.40 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நான்காம் கட்டமாக, ஏப்., 29ல், ஒன்பது மாநிலங்களில் உள்ள, 71 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 65.51 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஆறாம் கட்டம்:
இம்மாதம், 6ம் தேதி, ஏழு மாநிலங்களில் உள்ள, 51 தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது, அதில், 62.56 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில், நாளை மறுநாள், ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், டில்லி, ஹரியானா உள்பட, ஏழு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
உத்தர பிரதேசத்தில், 14; ஹரியானாவில், 10; மேற்கு வங்கம், பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில், தலா, எட்டு; டில்லியில், ஏழு; ஜார்க்கண்டில், நான்கு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஹரியானா மற்றும் டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், இந்தக் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது.
பிரசாரம்:
இதையடுத்து, இந்த தொகுதிகளில், இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. மொத்தமுள்ள, 542 தொகுதிகளில்,
இதுவரை, 424 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. நாளை மறுநாள், 59 தொகுதிகளுக்கும்; வரும், 19ல், ஏழாம் கட்டத்தில், 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 23ல் நடக்க உள்ளது.
'சர்வீஸ்' ஓட்டு எனப்படும், தபால் ஓட்டு அளிப்பதற்கு பதிவு செய்யும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை, பிப்ரவரியில் இருந்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக, ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இந்தாண்டு மே, 6 நிலவரப்படி, 18 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு அளிக்க பதிவு செய்துள்ளனர். பிப்., வரை, 16 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தபால் ஓட்டுகளில், ராணுவ அமைச்சகம், 10.16 லட்சம் ஓட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது. உள்துறையைச் சேர்ந்த, 7.82 லட்சம் பேரும், வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த, 3,539 பேரும் பதிவு செய்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply