'அட, என்ன இப்படி ஒரு தலைப்பு... அதுவும் இந்த காலத்தில்...' என, எண்ண வேண்டாம். இந்த வார்த்தைகள், இந்த காலத்துக்கு ரொம்ப பொருந்தும். மண் குதிரையை நம்பி, ஆற்றில் பலர் இறங்கி, தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு நான், 'மண் குதிரை' என சொல்வது, 'சோஷியல் மீடியா' எனப்படும், சமூக வலைதளங்களை! அதில் வரும் தகவல்களை, உண்மை என நம்பி, சகல விஷயங்களுக்கும் பயன்படுத்த துவங்கி விடுகின்றனர்; பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.
'சர்க்கரை நோயாளிகள், 'இன்சுலின்' செடியின் இலைகளை சாப்பிட்டால் மட்டும் போதும்... நோய் முற்றிலும் போய்விடும்' என, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற, சமூக வலைதளங்களில் செய்தி பரப்புகின்றனர்.'இரவு துாக்கத்திலிருந்து திடீரென விழித்தால், 'ஸ்ட்ரோக்' எனப்படும், பக்கவாதம் வந்து விடும்' என, பயம் காட்டுகின்றனர். 'மொபைல் போனை, தலையணைக்கு அடியில் வைத்து துாங்கினால், மூளையில், 'டியூமர்'எனப்படும், கட்டி வந்து விடும்' என்கின்றனர்.அதைப் பார்த்து, படுக்கையிலிருந்து, 10 அடி தள்ளி, மொபைல் போனை வைத்து துாங்குகின்றனர் பலர்!
மேலும், 'டெங்கு காய்ச்சல் வந்து விட்டால், பப்பாளி இலை சாற்றை மட்டும் குடித்து விட்டால் போதும்; டெங்கு ஜுரம் ஓடி விடும்' என்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய், கறுப்பு நிற உள்ளாடை அணிந்தால், புற்றுநோய் வரும் என்றும், கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.இந்தக் காலத்தில், அனைவர் கையிலும் இருக்கும், 'ஸ்மார்ட்' மொபைல் போன்களில், இது போன்ற, 'வீடியோ'க்கள், செய்திக் குறிப்புகள் வேகமாக பரவி, ஒருவருக்கு மற்றொருவர், டாக்டராகவும் மாறி விடுகின்றனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக அவிழ்த்து விடப்படும் பொய்யான தகவல்கள், மேலும் பல நோய்களை அதிகரிக்கச் செய்கின்றனவே தவிர, கட்டுப்படுத்தாது என்ற உண்மையை, உரக்க சொல்லவே இந்த கட்டுரை!
இரவு துாங்கும் போதோ அல்லது பகலில் துாங்கும் போதோ, திடீரென விழிப்பு வந்து, அவசரமாக எழும்போது, சிலருக்கு தலை சுற்றும்; அது, இயல்பு தான். அதனால் தான், நம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'படுக்கையிலிருந்து திடீரென எழாதீர்கள்; இடபுறமும், வலப்புறமும் திரும்பி எழுந்திருங்கள்' என, காலம் காலமாக அறிவுறுத்துகின்றனர்.அதை சரி வர கேட்காத நாம், சமூக வலைதளத்தில் வந்த தகவலை பார்த்ததும், உண்மை தான் என, எண்ணி விடுகிறோம். எப்போதாவது, திடீரென எழுந்தால், 'இன்று நமக்கு மாரடைப்பு வந்து விடுமோ... பக்கவாதம் ஏற்பட்டு, படுத்து விடுவோமோ...' என, பயம் கொள்கிறோம்.நன்றாக துாங்கிக் கொண்டிருந்தவர்கள், திடீரென எழுந்தால், ஒன்றும் ஆகி விடாது. மாரடைப்பு வந்து விடும்; பக்கவாதம் ஏற்பட்டு விடும் என்பதெல்லாம், 'கப்சா' தகவல்கள்; நம்பாதீர்கள். எந்த டாக்டர்களும், இதை உறுதிபடுத்தியதில்லை.
மனித உடம்பு, எல்லா வித மாறுதல்களையும், ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை, பலர் உணர்வதில்லை.
அதே போல, 'டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பப்பாளி இலைச்சாறு தான் பெஸ்ட்' என, எந்த டாக்டரும் சொல்லவில்லை.
முறையான சிகிச்சையுடன், அதையும் செய்யலாம் என்பது தான் உண்மை. ரத்தத்தில் உள்ள, 'பிளேட்லெட்' எனப்படும், தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் போது தான், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.இதை சரி செய்ய, முறையான வைத்தியம் தான் நல்லது என, சமூக ஊடகங்களில் யாரும் சொல்வதில்லை. அவ்வாறு எப்போதாவது, யாராவது சொன்னால், அதை நம்புவதும் இல்லை. அந்த அளவுக்கு, சமூக வலைதள தாக்கத்தில் ஆழ்ந்துள்ளோம் நாம்!உடல் ஆரோக்கியம், மருத்துவம் போன்றவை தொடர்பான, பொய்யான தகவல்கள் தான், சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன; அவை தான், பெரும்பாலும் ஆர்வமாக பார்க்கப்படுகின்றன.
இதை அறிந்து வைத்திருப்போர், தங்களுக்கு கிடைத்த, அரைகுறை தகவல்களை எல்லாம், சமூக ஊடகங்களில் அனுப்பி, நம் மூளையையும், மனதையும் குப்பையாக்கி வருகின்றனர்.ஆளைக் கொல்லும் புற்றுநோய்க்கு, சில செடியின் இலைகளை சாப்பிட்டால், முற்றிலும் சரி செய்து விடலாம் என பலர், சமூக வலைதளங்களில் பிதற்றுகின்றனர். புற்றுநோயில், பல கட்டங்கள் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மட்டுமே, புற்றுநோய் வந்தவர்களைக் காப்பாற்ற முடியும். அவ்வாறு இல்லாமல், கண்ட கண்ட இலைகளை, செடிகளை சாப்பிட்டால், குணம் கிடைக்காது.பிள்ளைகள், தொடர்ந்து மொபைல் போனில், 'கேம்' விளையாடினால், கம்ப்யூட்டரை பார்த்தால், கண்களில் புற்றுநோய் வரும் என்றும், திகில் கிளப்புகின்றனர்.
சிறிய உருவங்களை, நீண்ட நேரம் பார்த்து விளையாடுவதால், கண்ணில் அழுத்தம் கூடும் என்பது தான் உண்மை.
கண்ணில் உள்ள, 'லுாப்ரிகேஷன்' எனப்படும் ஈரப்பதம் குறைவதால், கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதற்காக, புற்றுநோய் வரும் என்பதில், துளியும் உண்மையில்லை.அதற்காக, பல மணி நேரம், மொபைல் போனில், கேம் விளையாடலாமா என்றால், கண்டிப்பாக கூடாது. ஒவ்வொரு, இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்; அக்கம் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும்; கண் இமைகளை அடிக்கடி மூடி, பயிற்சி அளிக்க வேண்டும்.ஒரேயடியாக, மொபைலில் விளையாடுவதை தவிர்ப்பது, கண்களுக்கு நல்லது தான். அதற்காக, புற்றுநோய் வரும் என்பது, பிதற்றல் தவிர வேறு ஒன்றுமில்லை.
தேங்காய் சிரட்டையை பொடித்து, நீரில் கொதிக்க வைத்து குடிக்க, 'கொலஸ்ட்ரால்' குறையும் என, கட்டுக்கதை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதையும் பலர், உண்மையென நம்பி, உலக்கையை எடுத்து, சிரட்டையை உடைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அது உண்மையானால், மெடிக்கல் ஸ்டோர்களை துவக்குவதை விட, சிரட்டை ஸ்டோர்களை, தெருவுக்கு தெரு ஆரம்பிக்கலாமே! கொலஸ்ட்ரால் குறைய, கொழுப்பு சத்து குறைந்த உணவுகளை, உட்கொள்ள வேண்டும்; எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்; நார்ச்சத்து அடங்கிய காய்கறிகளை, அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று தான், நன்கு படித்த டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆனால், 'சமூக ஊடக டாக்டர்கள்' தேங்காயிலும், அதன் சிரட்டையிலும் நிறைய நார் உள்ளதை, நார்ச்சத்து என, தவறாக புரிந்து கொண்டதன் விளைவு தான், கொலஸ்ட்ராலுக்கு சிரட்டை வைத்தியம்!
'காலையில் எழுந்ததும், சுடுநீரில், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், ஒரே வாரத்தில், உடல் எடை குறையும்...' என, பலர், 'வீடியோ' போடுவதும், அதை பலர் நம்பி, பின்பற்றுவதும், இன்றைய நடைமுறையாக உள்ளது.எலுமிச்சைச் சாற்றை, சுடுநீரில் கலந்து பருகுவதால் கெடுதல் வராது. எலுமிச்சை மட்டுமல்ல, 'சிட்ரஸ்' எனப்படும், 'வைட்டமின் - சி' குடும்பத்தை சேர்ந்த, எந்த
பழமும் நல்லது தான்.அதற்காக, அதன் சாற்றை குடித்ததும், உடல் எடை குறையும்; புற்று நோய் எட்டிப் பார்க்காது என, 'ரீல்' விடுவது
சரியல்ல.மொபைல் போனை, தலையணைக்கு கீழே வைத்து துாங்கினால், 'எலக்ட்ரோ மாக்னடிக் ரேடியேஷன்' ஆபத்து ஏற்படும் என, கூறப்படுகிறது; அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.எனினும், துாங்கும் போது, மொபைல் போனை, அணைத்து வைத்து துாங்குவதும், அதை அருகில் வைக்காமல் இருப்பதும் நல்லது தான்.
மொபைல் போன் இயர்போனை, காதிலிருந்து அகற்றிய பின் துாங்குவதும், 'வைபை' இன்டர்நெட் இணைப்பை அணைத்த பின்
துாங்குவதும், சிறந்த வழிமுறைகள்.சமூக வலைதளங்களில், சர்க்கரை நோயாளிகளுக்கு தான், எத்தனை விதமான ஆலோசனைகளை வழங்குகின்றனர்... 'இன்சுலின்' என்ற, தாவர பெயர் சார்ந்த செடியின் இலையை சாப்பிட்டால், சர்க்கரை நோய் முற்றிலும் குணம் பெறும் என்கின்றனர்; அது உண்மையில்லை.அதுபோல, வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவது; பாகற்காய் சாற்றை, வெறும் வயிற்றில் அருந்துவது என, உடல் கோளாறை ஏற்படுத்தும் அறிவுரைகள், சமூக வலைதளங்களில் வந்தபடியே உள்ளன; அவற்றை பலர், பின்பற்றியபடியே உள்ளனர்.
உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாடு, மன அமைதி, ஒழுக்கம், மருத்துவம் தான், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
அதுபோல, தவறான, வீண் வதந்தியை கிளப்பும் செயல்களும், சமூக வலைதளங்கள் வாயிலாகத் தான் செய்யப்படுகின்றன.
ஒரு பிரபலமான, 'பிராண்ட்' குளிர்பானத்தை முடக்க, அதன் எதிரி நிறுவனம், இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறதோ என, எண்ணத் தோன்றும் வகையில், சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. 'எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம், அந்த குளிர்பானத்தில் சேர்ந்து விட்டது' என்றனர். அதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அதை நியாயப்படுத்த, பல விதமான கதைகளை, சமூக வலை
தளங்களில் அவிழ்த்து விட்டனர். அதைப் படித்தவர்கள், இனிமேல் அந்த பானத்தை குடிக்க மாட்டேன் என, சொன்னதுடன், பிறருக்கும் அறிவுரை வழங்கிய கொடுமை, நம் ஊரில் தான் நடந்தது! எய்ட்ஸ் நோய், எளிதில் மற்றவருக்கு பரவாது. குறிப்பாக, அந்த நோயாளிகளை தொடுவதால், அவர்களின் எச்சில் படுவதால், அவர்களின் ரத்தத்தை தொடுவதால், இன்னொருவருக்கு பரவாது.இதை நன்கு அறிந்தவர்களும், சமூக ஊடகங்களில் வந்த செய்திகளை பார்த்து, சற்று கலங்கித் தான் போகின்றனர். அது தான், சமூக வலைதளங்களில் பலம். அதைத் தான், பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர்; வீண் பீதிகளையும், குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற வதந்திகளையும், பீதிகளையும் நம்புபவர்கள், நம் சமுதாயத்தில் ஏராளமாக உள்ளனர் என்பதை அறிந்தவர்கள் தான், இதுபோன்ற சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.அமைதியான சமுதாயத்தில், கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் விஷமிகள், முதலில் கையில் எடுக்கும் ஆயுதம், சமூக வலைதளம் தான். எப்போதோ, எங்கேயோ நடந்த, அடிதடி சண்டையை, நம் ஊரில் நடந்தது போல காட்டி விடுகின்றனர்.அதைப் பார்க்கும்நம்மவர்கள், பலருக்கும், 'பார்வர்டு' செய்து, களேபரத்தை உருவாக்கி விடுகின்றனர். அதனால் ஏற்படும் கலவரம், மோதல்கள், வன்மம் மறைய, பல காலம் ஆகி விடுகிறது.ஒவ்வொரு அரசியல் கட்சியும், சமூக வலைதள குழுவை அமைத்துஉள்ளது. அந்த குழுவில் இருப்பவர்களின் வேலை, கலவரத்தை துாண்டுவது தான் என்ற ரீதியில் தான் உள்ளது. குறிப்பாக, இந்த தேர்தல் நேரத்தில், இத்தகையவர்களின், 'சிண்டு முடியும்' வேலைகளை நிறைய, சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.ஒருவருக்கொருவர் அன்பான தகவல்களை, படங்களை பரிமாறிக் கொள்வதற்காகவும், சமூகத்தில் ஒற்றுமை, அமைதிக்கான வழிமுறைகளாக இருப்பதற்காகவும் தான், பெரும்பாலான சமூக ஊடகங்கள் துவக்கப்பட்டன.
ஆனால் அவை, அரை குறை நபர்களின் கரங்களில், கன்னாபின்னாவென மாறி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.எனவே, மண் குதிரையான, சமூக வலைதளங்களை நம்பாதீர்கள். அதை நம்பி, ஆற்றில் இறங்காதீர்கள். அவ்வாறு இறங்கினால், நம்மை அது மூழ்கடித்து விடும். ஜாக்கிரதையாக இருக்க பழகிக் கொள்வோம்!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
அலைபேசி: 90940 92335
இ-மெயில்: hema338@gmail.com